Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இருப்பதில் சந்தோஷமாக வாழ்வோம்!

ஒரு நாட்டின் அரசன், தனது சேவகன் ஒருவன் தினமும் ஆனந்தமாக இருப்பதை கவனித்துப் பார்த்து பொறாமைப்பட்டான். ஒருமுறை அரசன் தனது மந்திரியை அழைத்து ‘‘இதோ பாரும் மந்திரியாரே! நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கின்றேன். எனக்கு குறையேதும் இல்லை. இருப்பினும் எனக்கு மன நிம்மதி இல்லை. மனக்குழப்பத்தில் திணறுகிறேன். சலிப்பும் வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, அவன் என்னைவிட வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காண்கிறேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்கவே பொறாமையாக இருக்கிறது’’ என்றுகூறி ஆதங்கப்பட்டான். உடனே அந்த மந்திரி;

‘‘அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்களேன்’’ என்றான். அதற்கு அரசன்;

‘‘அது என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!’’ என்றான். அதற்கு மந்திரி;

‘`99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு, சேவகனின் வீட்டு வாசலில் வைத்து விடுங்கள். அந்த பையின் மேலே இருந்த 100 பொற்காசுகள் உங்களுக்கான அன்புப் பரிசு’’ என்று அதிலே எழுதி, வைத்து விடுங்கள். பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்!’’ என்றான். அப்படியே அரசனும் செய்துவிட்டு பொறுத்திருந்தார். பொற்காசுகள் நிறைந்த பையைக் கண்ட சேவகன், ஆனந்தத்தில் மிதந்தான். பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

‘‘கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்’’ என மனதில் நினைத்துக் கொண்டான். அதன்படி அவனும் அவனது மனைவி பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர். தேடித் தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது. ஆயினும் தேடல் முடிந்தபாடில்லை. கோபமடைந்த சேவகன், தன் குடும்பத்தார் மீது எரிந்துவிழத் தொடங்கினான். அவன் மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். புன்முறுவல் பூத்திருக்க காணப்பட்ட முகம் அன்று சிடுமூஞ்சியாக மாறியிருந்தது. அவ்வப்போது முணுமுணுத்துக்கொண்டும், தன்னைத்தானே திட்டிக் கொண்டும் இருந்தான். இதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அரசனுக்கு, ‘`99 ஆட்டம்’’ என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.

இறைமக்களே, கடவுள் நமக்கு அளித்திருக்கிற 99 வகையான ஆசீர்வாதங்களை நாம் மறந்துவிடுகிறோம். வாழ்வில் நமக்கு கிடைக்காத ஏதோ ஒரே ஒரு ஆசீர்வாதத்திற்காக மன நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு வாழ்ந்து, ஏங்கித் தவிக்கிறோம். கைவசம் இருக்கும் பல நன்மைகளை மறந்து, இல்லாத ஒரு நன்மைக்காக ஏன் எங்க வேண்டும்? எதை எதையோ அல்லது யார் யாரையோ நினைத்து நாம் மனக்கவலையோடு வாழ வேண்டும்?

இறைவேதம் ‘‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’’ (1தீமோத்தேயு 6:6) எனக் கூறி திருப்தியான வாழ்வு வாழ அறிவுறுத்து கிறது. இன்று நம்மிடம் இருக்கும் பல நன்மைகள் உலகில் வாழும் பலரிடம் இல்லை என்ற உண்மையை உணர்ந்து, இருப்பதில் சந்தோஷமாக வாழப் பழகுவோம்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.