Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சொன்னதைக் கேட்போம்! துயரம் விலகிப்போம்!

நாம் வாழ நல்லதைச் சொல்பவர்களின் வார்த்தைகளைத் தவறாமல் கேட்க வேண்டும். ஒரு போதும் துயரம் அண்டாது. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாறு இதை விளக்கும். திருநெல்வேலியில் ராமேசநல்லூர் எனும் திருத்தலம்; முற்காலத்தில் இவ்வூரை, அறுகன் கூவிளம் என அழைத்தார்கள். அவ்வூரில் சோமநாத பாரதி என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபக்தியில் தலைசிறந்த இவரை, `சிவதாசர்’ எனவும் அழைப்பார்கள்.

(நாமும் சிவதாசர் என்றே பார்க்கலாம்) சிவதாசர் சிறுவயதாக இருக்கும்போது, அவருக்குக் கல்வியில் ஆர்வமில்லை. ஊர் சுற்றித் திரிவதிலேயே ஆர்வம்கொண்டவராக இருந்தார். ஒரு சமயம், திருவேங்கடம் எனும் ஊரில் சிவதாசர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தபோது, அந்த ஊருக்கு மகான் ஒருவர் வந்திருந்தார். வந்தவர், சிவதாசருக்குக் கல்வியறிவு இல்லாவிட்டாலும் சிவபக்தி இருப்பதைக் கண்டு அறிந்தார். உடனே அந்த மகான் சிவதாசரை அன்போடு அழைத்து, மறைகள் பலவற்றை தானே சொல்லிக்கொடுத்து அறவுரையும் சொன்னார். சிவதாசர் வாழ்வில் திருப்பம் உண்டானது. அன்று முதல் மேலும் இறையன்பு மிகுந்தவராகவும், நோன்பு முதலியவைகளைக் கடைபிடிப்பவராகவும் ஆனார்.

அடிக்கடி திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரைத் தரிசித்து வந்தார். திருமறைகளின் பயிற்சியும் முருகன் அருளும் கைகூட, பாடல்கள் பலவற்றைப் பாடும் திறனும் உண்டானது. பல பாடல்களைத் தானே எழுதி பாடினார்.ஒருநாள்... அம்பிகை ஒரு பெண் குழந்தை வடிவில் அழகு தவழ, சிவதாசரிடம்வந்தாள். ‘‘யாரம்மா நீ? அம்பாளே குழந்தையாக வந்திருப்பதைப் போல இருக்கிறதே!’’ என்றார் சிவதாசர்.

வந்த சிறுமி, ‘‘அப்படியேதான் வைத்துக் கொள்ளேன்! அம்பிகை மகிமைகளை அனைவரும் அறியும்படியாக, நாடகமாக நீ எழுது!’’ என்று சொல்லி மறைந்தாள். சிவதாசருக்கு மெய் சிலிர்த்தது,

‘‘ஆகா! அம்பிகையே நேருக்குநேராக வந்து, அருள் புரிந்திருக்கிறாளே! அம்மா! தேவீ! உன் வாக்கின்படியே நடப்பேன் தாயே!’’ என்று வாய் விட்டுச் சொல்லி வணங்கினார்.

அம்பிகையின் பெருமைகளை விளக்கும் விதமாக, ``தேவீ மான்மியம்’’ எனும் நூலை உருவாக்கினார். நாடகமாக உருவான அந்த நூல், பலவிதமான அருந்தமிழ்ப் பாடல்கள் கொண்டதாக அமைந்தது. யாழ்ப்பாணம் சிதம்பர சுவாமிகள் உட்பட ஞானியர் பலரும், கவிஞர்கள் பலரும் அந்த நூலைப் பாராட்டி, சாற்றுக் கவிகள் அளித்தார்கள். அந்த நூலில் இருந்து ஒரு சில பாடல்களைப் பார்க்கலாம். வரமுனிவர் என்பவரைப் பார்க்கச் செல்கிறார்கள்; சென்றவர் யார் யார் என்று பட்டியல் இடும் பாடல்...

``கண்ணுவன் கௌண்டிலீயன் காத்தியானன் வியாசன்

நண்ணும் அத்திரியா யாசான் நாரதன் வாமதேவன்

பண்ணுறு பரத்துவாசன் பராசரன் முதலோர் சூழ

விண்ணுளோர் புகழக் கும்பன் விந்தையாய் வரவுங் - கண்டே’’

இவ்வாறு பாடிய சிவதாசர், இந்த நூலைப் படிப்பதால் உண்டாகும் பலனைப்பற்றி, அதாவது பலசுருதியாகவும் பாடி இருக்கிறார்.

``மா மகிட சூரன் மணிமுடியை மர்த்தனித்த

வாம விந்தை தாளை வணங்கியே - நேம மிகச்

செய்ய மலர்ச் சாத்தியிந்தச் செந்தமிழை ஓது நெஞ்சே

வையகத்தே கல்வி வரும்’’

- எனப் பாடியிருக்கிறார்.

சிவதாசருக்கு அருள்செய்த திருச்செந்தூர் ஆண்டவன் நமக்கும் ஞானம் அருள வேண்டுவோம்!

V.N.சுந்தரி