புரட்டாசியில் நிவேதனம்
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்குச் செய்யப்படும் சிறப்பு நிவேதன வழிபாடே ‘தளிகை போடுதல்’, ‘படையல்’ அல்லது ‘தளியல்’ எனப்படும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி, சுத்தபத்தமாக பிரசாதங்களைச்சமைத்து நிவேதனம் செய்வது மரபாகும். தளியல் போடுவதன் மூலம் வீட்டிற்கு தானிய லட்சுமியின் அருள் கிடைப்பதுடன், பசிப்பிணி போக்கும் அன்னதானத்தின் உயரிய தத்துவமும் நிறை வேறுகிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இவ் வழிபாடு குடும்ப உறவுகளை பிணைக்கும் பாலம் ஆகும்.
புரட்டாசி தளியலின்போது பெருமாளுக்குப் பலவகையான சுவைமிக்க நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன. குறிப்பாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எள்சாதம், தயிர்சாதம் போன்ற ‘சித்ரான்னங்கள்’ மற்றும் சுண்டல், வடை போன்றவை படைக்கப்படும். இதில் மிக முக்கியமானது பச்சரிசிமாவு, வெல்லம், ஏலக்காய், நெய் சேர்த்துச் செய்யப்படும் மாவிளக்கு ஆகும். இம்மாவிளக்கின் நடுவே குழிசெய்து நெய்யிட்டு திரிபோட்டு தீபமேற்றுவர். சில குடும்பங்களில் பச்சரிசி மாவால் கோவிந்தனின் உருவத்தையோ அல்லது பெருமாளின் பாதங் களையோ வடித்து, அதற்குத் திருநாமமிட்டு அலங்கரித்து வழிபடும் வழக்கம் உண்டு. இத்தகைய கலைநயமிக்க வழிபாடுகள் பக்தியை மேலும் வளப்படுத்துகின்றன.
புரட்டாசி தளியல் (படையல்) போடும் நாளன்று வீட்டைத் தூய்மை செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, வாசலில் அரிசி மாவில் கோலமிட வேண்டும். பூஜையறையில் பெருமாள் படத்திற்கு துளசி, மலர் மாலைகள் அணிவித்து தீபமேற்ற வேண்டும். நெற்றி நிறையத் திருமண் அணிந்து, கோவிந்தன் நாமம் சொல்லி, பித்தளை அல்லது செம்புச் செம்பில் திருநாமம் இட்டு நீர் நிரப்பி வைக்க வேண்டும். பெரிய வாழை இலையைப் பரப்பி, அதன் நடுவே மாவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். சமைத்த உணவுகளை இலையில் படைத்து, துளசித்தளங்களை அதன்மீது தூவவேண்டும். பின்னர் தூபதீப ஆராதனை காட்டி, குடும்பத்தினர் அனைவரும் ‘‘கோவிந்தா... கோவிந்தா...” என்று உரக்க நாமம் முழங்கி, இறைவனை வணங்கி தளியலை நிறைவு செய்யவேண்டும்.
உண்டி கட்டி செல்லுதல்
அந்தக் காலத்தில் திருமலை யாத்திரை செல்வது என்பது மிகவும் திட்டமிட்டுச் செய்யப்படும் ஒரு பக்திப் பயணமாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் யாத்திரைக்கென ஒதுக்கப்பட்ட ஒரு சிறிய பித்தளைச் செம்பிலோ அல்லது துணியிலோ காணிக்கைப் பணத்தைச் சிறுகச்சிறுகச் சேகரிப்பர். இதற்கு ‘உண்டி கட்டுதல்’ என்று பெயர். பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி, விரதமிருந்து இந்த உண்டிச் செம்பில் பணம் சேர்த்து வைப்பார்கள். யாத்திரைக்குக் கிளம்பும்போது, ஊர்வலமாகச் சென்று உஞ்சவிருத்தி எடுத்து, ஊரார் தரும் தானியத்தையும் பணத்தையும் யாத்திரைச் செலவுக்காகச் சேர்த்துக்கொள்வார்கள். இந்த முறையில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டுதான் போகும் வழியிலுள்ள செலவுகளைச் சமாளிப்பார்கள். நேராகத் திருமலைக்குச் செல்லாமல், வழியிலுள்ள பல திவ்ய தேசங்களையும், பிற ஆலயங்களையும் தரிசித்துக்கொண்டே மெல்ல மெல்லத் திருமலையை அடைவார்கள். நிறைவாகத் திரு
மலைக்குச் சென்று சேர்ந்ததும், உண்டி கட்டிய காணிக்கையை அப்படியே ஏழுமலையானின் உண்டியலில் செலுத்திவிடுவார்கள். திரும்பும் பயணத்தை தங்கள் சொந்தச் செலவில் மேற்கொண்டு வீட்டிற்கு வருவார்கள். வந்தவுடன் மீண்டும் ஒரு தளியல் போட்டு, ஊர்மக்களை அழைத்து இறைப் பிரசாதங்களை வழங்கி மகிழ்வார்கள். பின்னர், அடுத்த ஆண்டு யாத்திரைக்காக ஒரு புதிய உண்டியலைக் கட்டி பணத்தைச் சேகரிக்கத் தொடங்குவார்கள். இப்பழக்கம் வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்லாமல், சேமிப்புப் பழக்கம், பக்தி, பண் பாடு மற்றும் சமூகத்தினை ஒன்றிணைக்கும் அழகிய நடைமுறையாகவும் திகழ்ந்தது.
திருமலை பிரமோற்சவம்
‘பிரம்மோற்சவம்’ என்றால் பிரம்மதேவனே நேரில் வந்து நடத்தும் மிகப்பெரிய திருவிழா என்று பொருள். உலக உயிர்களின் நலனுக்காகக் கிருத யுகத்தில் பிரம்மதேவன் ஏழுமலையானுக்கு முதன்முதலில் நடத்திய உத்ஸவம் என்பதால் இது ‘பிரம்மோற்சவம்’ எனப்படுகிறது. பகவான் னிவாசன் அவதரித்த நட்சத்திரம் புரட்டாசி மாத திருவோணம் ஆகும். எனவே, இந்தத் திருவோண நட்சத்திரத் தீர்த்தவாரியைக் (சக்கர ஸ்நானம்) இலக்காகக்கொண்டே ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பக்தர்கள் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகள் வழியே கால்நடையாக நடந்து திருமலைக்குச் சென்று தங்கி இறைவனை வழிபட்டனர். ஆனால், இன்று நவீன தொழில்நுட்ப வசதிகள், தேவஸ்தானத்தின் சிறப்பான மேலாண்மை, சாலை போக்குவரத்து மற்றும் தங்கும் விடுதிகள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் திருமலையில் தங்கி பிரம்மோற்சவத்தைக் கண்டு தரிசித்து மகிழ்கின்றனர்.
நாராயணா கோபாலா... என்று சொல்லி தானியம் ஏற்கும் முறை
‘‘நாராயணா கோபாலா” என்று பகவானின் திருநாமங்களை இசைத்தபடி வீதிகள் தோறும் சென்று தானியம் ஏற்கும் முறை ‘உஞ்சவிருத்தி’ எனப்படும். அடியார்களும் பக்தர்களும் தங்கள் அகந்தையை ஒழித்து, இறைவனின் நாமத்தையே முதன்மையாகக் கொண்டு வாழும் எளிய நிலையை இது உணர்த்துகிறது. புரட்டாசி மாதத்தில் பித்தளைச் செம்பில் துளசியிட்டு, தோளில் பையுடன் வீதி வீதியாகச் சென்று ‘‘நாராயணா கோபாலா’’ ‘‘கோவிந்தா! நாராயணா!” என்று முழக்கமிட்டு அரிசி தானம் பெறுவர். இப்படிப் பெறப்படும் தானியம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. பக்தர்களின் வீடுகளில் வழங்கப்படும் தானியத்தைச் சேகரித்து, இறைவனுக்கு நிவேதனம் செய்து, அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதன் மூலம் சமூகத்தில் சமத்துவமும், இறை உணர்வும் தழைத் தோங்குகிறது.
புரட்டாசி மாதத்தில் பிற திருத்தலங்களில் பிரம்மோற்சவம்
திருமலை மட்டுமன்றி, புரட்டாசி மாதத்தில் தென்னிந்தியாவின் பல புகழ்பெற்ற வைணவத் திவ்ய தேசங்களிலும், பெருமாள் திருக்கோயில் களிலும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
* ஒப்பிலியப்பன் கோவில் (கும்பகோணம்): திருமலையைப் போலவே ‘தென் திருப்பதி’ என்று போற்றப்படும் இத்தலத்தில் புரட்டாசி மாதப் பிரம்மோற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெறும்.
* அண்ணன் பெருமாள் கோவில் (சீர்காழி - திருநாங்கூர்): ‘அண்ணன் கோவில்’ என்று அழைக்கப்படும் இத்தலத்து எம்பெருமானும் திருமலை ஸ்ரீனிவாசனின் அம்சமாகக் கருதப்படுவதால், புரட்டாசியில் இங்கு பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.
* திருநீர்மலை ரங்கநாதர் கோவில் (சென்னை): சென்னைக்கு அருகில் உள்ள இத்தலத்திலும் புரட்டாசி உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
* குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் (திருச்சி): மனஅமைதி மற்றும் பிணி தீர்க்கும் தலமாக விளங்கும் இங்கு புரட்டாசியில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெறும்.
திருமலையில் இரண்டு பிரம்மோற்சவங்கள்
இவ்வாண்டு (2026) திருமலையில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
* சாலகட்ல பிரம்மோற்சவம் (வருடாந்திர பிரம்மோற்சவம்): செப்டம்பர் 15, 2026 - செப்டம்பர் 23, 2026 வரை நடைபெறுகிறது.
* நவராத்திரி பிரம்மோற்சவம்: அக்டோபர் 11, 2026 முதல் அக்டோபர் 20, 2026 வரை நடைபெறுகிறது.
இந்து பஞ்சாங்கத்தின்படி, சந்திரமான நாட்காட்டியின் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘அதிக மாதம்’ தோன்றும். அவ்வாறு அதிக மாதம் வரும் ஆண்டுகளில், திருமலை திருப்பதி தேவஸ்தான மரபுப்படி இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படும்.
முதலாவது ‘சாலகட்ல பிரம்மோற்சவம்’ (கொடியேற்றத்துடன் கூடியது), இரண்டாவது ‘நவராத்திரி பிரம்மோற்சவம்’ (சிறப்பு வாகன சேவைகள் மட்டும்மேயாகும்).
- எஸ்.கிருஷ்ணஜா


