விநாயகரை வடநாட்டில், ``கணபதி பப்பா மோர்யா’’ என அழைப்பர். ஞானம் மற்றும் அறிவோடு தொடர்புடையவர். தீமைகளை அழித்து தடைகளை போக்குபவர். அவரை வழிப்பட்டால், செழிப்பு மற்றும் செல்வம் நமக்கு கிடைக்கும். வாழ்க்கை கணிக்க முடியாது என்பதை தற்போது காலத்தை மீறிய மழைகள், நிலச்சரிவு, மேக வெடிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆக, நிச்சயமற்ற தன்மைகளை எதிர் கொள்ள தயாராய் இருங்கள். விநாயகர், பக்தர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை கேட்க எப்போதும் தயாராக உள்ளார். விநாயகர், தன்னுடைய செயல்கள் மூலம் நமக்கு பாடங்களை கற்றுத் தருகிறார். விநாயகருக்கு பெரிய காதுகள், அது போல் உங்கள் காதுகளையும் விரித்து வைத்துக் கொண்டு, சுற்றி நடப்பதை
உள் வாங்கிக் கொள்ளுங்கள்.
இனி பாடங்களுக்குச் செல்வோம்...
விநாயகரின் சில ருசிகர தகவல்கள்
விநாயகர் சதுர்த்தியன்று, சந்திரனை பார்க்கக் கூடாது. ஒருநாள் விநாயகர் தன் வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்து வலம் வந்தார். ஒருகட்டத்தில் எடை தாங்க இயலாமல் விநாயகரை தள்ளி விட்டுவிட்டு, மூஞ்சூறு ஓடிவிட்டது. விநாயகர் திகைத்து எழுந்து நின்ற போது, வானத்தில் இருந்த சந்திரன், இதனை பார்த்து சிரிக்க, அதனை பார்த்த விநாயகர் பார்த்ததோடு நிக்காமல், சிரிக்க வேறு செய்கிறாயா... என சந்திரனை சபித்துவிட்டார். இதே போல் விநாயகர் சதுர்த்தியன்று, சந்திரனை பார்ப்பவர்கள், தேவையில்லாத தவறான குற்றச் சாட்டுகளில் சிக்குவார்கள் இதுவொரு ஆன்மிக நம்பிகை எனவே ஜாக்கிரதையாக இருங்கள்.
விநாயகரும் காவேரியும்
ஒரு சமயம், தென் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. அகத்தியர், சிவபெருமானின் கமண்டலத்திலிருந்த கங்கை நீரை கேட்டு பெற்று, பாதிக்கபட்ட பகுதிகளில் மந்திரம் சொல்லி, அதில் கொஞ்சம் ஊற்ற, அங்கு ஒரு நதி உருவானது. சிறிது ஓய்வெடுக்க, மீதி தண்ணீர் இருந்த கமண்டலத்தை தரையில் வைத்து விட்டு அயர்ந்திருந்தார். காக்கையாக வந்த விநாயகர், அதனை கவிழ்துவிட, அங்கு காவிரி நதியாக ஓட ஆரம்பித்தது. இதனை தலைக்காவேரியில் இன்றும் காணலாம். இது உணர்த்தும் பாடம். ஆர்வமே புதிய கண்டு பிடிப்புகளுக்கு உதவும்.
விநாயகரும் குபேரனும்
குபேரன் செல்வத்துக்கு அதிபதி.! அதனால் ஒரு சமயம், கர்வம் உண்டாகி சிவபெருமான் ஒரு முனிவரைப் போல வசிக்கிறார் என கிண்டல் அடித்தார். மேலும், தன்னுடைய நகருக்கு சிவனை அழைத்து, இங்கு வந்து எப்படி வாழ வேண்டும் என்று மட்டம் தட்டினான். சிவன் அவருக்கு பாடம் கற்பிக்க, தனக்கு பதில் விநாயகரை அனுப்பினார். குபேரன் எல்லாருக்கும் சேர்த்து பெரிய விருந்து ஏற்பாடு செய்து, மேலும் மட்டம் தட்ட நினைத்தார். வந்ததோ விநாயகர். குபேரனுக்கு பாடம் கற்பிக்க வயிற்றை பெரியதாக்கிக் கொண்டு, மொத்த விருந்தையும் சாப்பிட்டு, நீ ஆட்டமா போடுகிறாய் என மறைமுக எச்சரிக்கை தந்தார். குபேரன் வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டான். இது தரும் பாடம், அடக்கமாய் இருங்கள்.
சிவனுக்கு தர்ம சங்கடம்
ஒரு நாள், பார்வதி தேவி நுழைவு வாயிலில் விநாயகரை மனித உருவில் பிடித்து நிறுத்தி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் சிவன் அங்கு வந்தார்.விநாயகர் அவருக்கு வழிவிட மறுத்தார். கடும் கோபம் அடைந்த சிவன், தன்னுடைய சூலத்தால் விநாயகரின் தலையை வெட்டி எறிந்தார். விஷயம் பார்வதிக்கு போனது. கடும் கோபம் அடைந்த பார்வதி, இந்த பிள்ளை எனக்கு வேண்டும். உடனே ஒரு தலை கொண்டு வந்து பொருத்தி உயிர் கொடுங்கள் எனக்கூறி விட்டு சென்றுவிட்டார். மனைவியின் கோபம் என்றால் மனிதனும் தெய்வமும் ஒன்றுதான். உடனே காட்டுப் பகுதிக்கு ஓடினார். அப்போதுதான் ஒருவன் குட்டியானையை தலையை சீவி வீசினான். துடிதுடித்துக் கொண்டிருந்த அதனை லபக்கென பிடித்து, விநாயகர் தலையில் கொண்டு வந்து பொருத்தி, உயிரை மீட்டார். இதனால் விநாயகர், கஜமுகனானார். இது தரும் பாடம், வெற்றிக்கு குறுக்கு வழி உதவாது. மாறாக சங்கடங்களுக்கு வழி வகுக்கும்.
வக்ரதுண்டாய - மாட்சரியாசுரன்
மாட்சரியாசுரன் என்னும் கொடூரமான அரக்கன், சிவன் மீது தவம் செய்து, தன்னை எந்த மனிதனாலும், கடவுளாளும் அழிக்க முடியாத வரத்தை பெற்றான். இதன் காரணமாக அரக்கன், மூன்று உலகங்களுக்கும் இம்சை மேல் இம்சை கொடுத்தான். அவனை அடக்கும் பொறுப்பு விநாயகருக்கு வந்தது. அவர், தன்னுடைய தும்பிக்கையால் அவன் அறியாமல் பக்க வாட்டில் வளைத்துக் கொண்டு இறுக்கி நசுக்கினார். ஒரு கட்டத்தில், வலியை பொருத்துக்கொள்ள முடியாது, இனி ஒரு போதும் ஒருவரையும் இம்சை படுத்த மாட்டேன். மாறாக நல்லதே செய்வேன் என கெஞ்சினான். பிழைத்துப்போ என விட்டார் விநாயகர். இதன் பாடம், மன்னிக்கவும், மறக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கார்த்திகேயனும் விநாயகரும்
ஒரு சமயம், பார்வதி தேவிக்கு ஒரு தெய்வீக மாம்பழம் கிடைத்தது. அதை தன்னுடைய மகன்களில் யாருக்கு கொடுப்பது என முடிவு செய்ய இயலவில்லை. அதனால் இருவருக்கும் போட்டி வைத்தார். உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்கே மாம்பழம் பரிசு என அறிவித்தார். போட்டி உடனே துவங்கியது. கார்த்திகேயன் உடனே தன் மயில் வாகனத்தில் ஏறி கிளம்பிவிட்டார். விநாயகரின் வாகனம் மூஞ்சுறு. அது மெதுவாகத்தான் சுற்றும். அதனில் மூஞ்சுறுவில் சென்று எப்போது திரும்புவது?
யோசித்தார் விநாயகர். யோசிப்பவர்களுக்கு புதிய யோசனைகள் தோன்றுவது சகஜம் தானே. ஆஹா நமக்கும், மற்றவர்களுக்கும், சிவனும் சக்தியுமே தெய்வம். அவர்களே என் தாய் தந்தையர்.
ஆக, அவர்களை வலம் வந்தாலே உலகை சுற்றியது போல் ஆகுமே என யோசித்தவர், விநாயகர். உடனே வேகமாக தனது பெற்றோரை சுற்றி வந்துவிட்டு, உலகை சுற்றி வந்துவிட்டேன். மாம்பழத்தை தாருங்கள் என தாயாரிடம் கேட்டார். அந்த தாய் விளக்கம் கேட்போது, விளக்கவும் செய்தார். தாயாரும் மறுபேச்சு பேசாமல், மாம்பழத்தை தந்துவிட்டார். இது தரும் பாடம், பயப்படாமல் சூழலை பயன்படுத்தி, வெல்ல பாருங்கள். பாதகமான சூழலில் தெளிவாக சிந்தித்தால் வெற்றி கிட்டலாம்.
விநாயகரும் தந்தமும்
வேத வியாசர், மகாபாரதத்தை சொல்லச் சொல்ல அதனை விநாயகர் எழுதுவது என முடிவாயிற்று. தன் வேகத்துக்கு வியாசரால் சொல்ல இயலுமா என விநாயகர் யோசித்தார். வேதவியாசர் வேகமாக சொல்லிக் கொண்டே போனார். விநாயகரும் படுவேகமாக எழுத, ஒரு கட்டத்தில் விநாயகரின் எழுதுகோல் உடைந்துவிட்டது. வியாசரோ தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார். யோசித்தார், உடனே தன் தந்தத்தின் கூர் பகுதியை பட்டென உடைத்து, எழுத ஆரம்பித்துவிட்டார். இது தரும் பாடம், மாற்றத்தை யோசி.
ராஜிராதா


