ஒளிவீசும் விளக்கிலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றினால், ஒளி அதிகரிக்குமே தவிர, குறையுமா என்ன? அது போல... தன்னையும் தலைவனையும் உணர்ந்த சித்த புருஷர்கள், பேதமில்லாமல் ஒளியைப்போல அருள்மழை பொழிவார்கள். அதைப் பற்றிப் பிடித்த பக்குவசாலிகள், தாங்களும் சித்த புருஷர்களாக மாறுவார்கள். `தளேச்சுரம்’ எனும்பெற்ற திருவண்ணாமலையில் நடந்த வரலாறு இது. திருவண்ணாமலை குகை ஒன்றில், சித்த புருஷர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் `நமசிவாய’ எனச் சொல்லி வந்த அவரை, `குகை நமசிவாயர்’ எனப் பெயரிட்டழைத்தார்கள். நாம் பொதுவாகச் சித்தர் என்றே பார்க்கலாம்! தினந்தோறும் அதிகாலையில் எழுவது; குகையை விட்டு வெளியே வந்து, மலையைப் பார்த்து;``அண்ணாமலையாரே! நல்லா இரு ஐயா!’’ எனத் துதிப்பது என வாழ்ந்துகொண்டிருந்த சித்தரின் குகைக்கு முன்னால், ஒரு பொிய ஆலமரம் இருந்தது.
அந்த ஆலமரத்தில், உயரமான பகுதியில், ஓர் ஊஞ்சலை அமைத்து, அதில் ஏறி உறங்குவார் சித்தர். ஆலமரத்தில் தொங்கிய அந்த ஊஞ்சலில், மற்றவர்களால் ஏறமுடியாது. அவ்...வளவு உயரத்திலிருந்த அதில் சித்தர் எப்படி ஏறிப் படுக்கிறார் என்பது, மக்களிடையே பெரும் ஆராய்ச்சியாக இருந்தது. ஆலமரத்தடியில் கூடி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். பார்த்தார் சித்தர்; ஊஞ்சலை எடுத்து, போட்டுவிட்டார். தானுண்டு, அண்ணாமலையார் உண்டு என்றிருந்த சித்தருக்கு, சீடனாக ஒருவன்வந்து வாய்த்தான். குகை நமசிவாயத்தைத் தேடிவந்த அவனை, குருபக்தியில் தலைசிறந்த அவனை `குருநமசிவாயர்’ என அழைத்தார்கள்.
குருநாதருக்கான பணிவிடைகளைப் பொறுப்பாகச் செய்துவந்த சீடன், ஒருநாள் அவர் எதிரில் சிரித்தான். ``நம் எதிரில் இவன் இவ்வாறுசெய்ய மாட்டானே! என்ன ஆயிற்று?’’ என எண்ணிய குருநாதர், அவன் சிரித்ததற்கான காரணத்தைக் கேட்டார்.``மன்னிக்க வேண்டும் குருநாதா! திருவாரூரில் தியாகராஜசுவாமி ஊர்வலத்தில், நடனப் பெண்கள் நடனமாடினார்கள். அவர்களில் ஒருவள், கால் தடுக்கிக் கீழே விழுந்தாள். கேட்டதற்கு `இதுவும் ஒரு முத்திரை’ என்றாள். அதையும் கூட்டம் ஆமோதித்துக் கைதட்டியது. அதை நினைத்து சிரித்தேன்’’ என்றான் சீடன்.
``எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்க்கிறான் என்றால், பக்குவத்தில் சீடன் முன்னேறி வருகிறான். பார்க்கலாம்’’ என எண்ணினார் குருநாதர். ஒருசில நாட்கள் கடந்தன.
குகையை விட்டுவெளியே வந்து; ``அண்ணாமலையாரே’’ என்று குருநாதர் கூவுவதும், அவரையே அண்ணாமலையாராகக் கருதிச் சீடன் பணிவிடைசெய்வது மாகக் காலம் போய்க்கொண்டிருந்தது.ஒரு நாள்... குருநாதருக்கு விசிறிக் கொண்டிருந்த சீடன் `படக்’ கென்று விசிறியைக் கீழே வைத்துவிட்டு, தன் ஆடையைப் பிடித்துக் கசக்கித் தேய்த்தான்.
``என்னவாயிற்று?’’ எனக் கேட்டார் குருநாதர்.``சிதம்பரத்தில் கனகசபையில் திரையிட்டிருந்தார்கள். குத்துவிளக்கிலிருந்த நெய்த்திரியை ஓர் எலி இழுத்துக் கொண்டு போகையில், திரை தீப்பற்றிக் கொண்டது. அங்கிருந்த சிலர் அதை அணைக்க முயல, நானும் இங்கிருந்த படியே அவர்களுக்கு உதவித் தீயை அணைத்தேன்’’ எனக் கூறினான் சீடன். காலாண்டுத்தேர்வு,
அரையாண்டுத்தேர்வு - முடிந்து, முழு ஆண்டுத்தேர்வு வைப்பார்களல்லவா? அதுபோல... குருநாதர் சீடனுக்குத் தேர்வுவைக்கத் தீர்மானித்தார்.
ஒருநாள் குருநாதர் வாந்தியெடுக்க,``இதைத் திருவோட்டில் ஏந்திக் கால் படாத இடத்தில் கொட்டி வா!’’ என்றார், குருநாதர். அதன்படியே திருவோட்டுடன் வெளியேறிய சீடன் திரும்பிவந்தான்.
``என்ன? கால்படாத இடமாகப்பார்த்துக் கொட்டினாயா?’’ எனக்கேட்டார் குருநாதர்.``ஆம்!’’ எனச் சீடன் கூற, குருநாதர்,``எங்கே?’’ எனக் கேட்டார். சீடன் தன் வயிற்றைக் காட்டினான். குருநாதருக்கு மெய்சிலிர்த்தது; எழுந்து சீடனைக் கட்டித்தழுவினார்;``அப்பா! உன்னைப்போல உத்தமசீடன் யாருக்குக்கிடைப்பான்? இன்று முதல் உன்திருநாமம் `குரு நமசிவாயம்’ எனப்படட்டும். ஒரே கம்பத்தில் இரு யானைகளைக் கட்டக்கூடாது. ஆகையால் நீ புறப்பட்டுச் சிதம்பரம் செல்!\” எனக் குருநாதர்கூற, சீடன் மறுத்தான்.
கடைசியில் வேறுவழியின்றி, சீடன் புறப்பட்டான். மாலை நேரத்தில் புறப்பட்ட சீடன், இருட்டியதும் வழியில் ஒரு மரத்தடியிலேயே நிஷ்டையில் அமர்ந்துவிட்டான். மூன்று மணிநேரமானது. நிஷ்டை முடிந்ததும், சீடனைப் பசி துரத்தியது. நடுக்காட்டில்... உணவுக்கு எங்கு போவது? சீடன் நேராகத் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் உண்ணாமுலை அம்பாளிடமே தன் வேண்டுகோளை வைத்தான்.
``அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே!
உண்ணாமுலையே! உமையாளே! - நண்ணா
நினைதோறும் போற்றிசெய நின்னடியர் உண்ண
மனை தோறும் சோறு கொண்டு வா!’’
- எனப் பாடித்துதித்து வேண்டுகோள் வைத்தார்.
அதே வேளையில், திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து, தங்கத் தாம்பாளத்தில் வைத்து நிவேதனம் செய்த அர்ச்சகர்கள், கோயிலிலேயே அதை வைத்து மறந்துபோய்க் கதவுகளைத் திருக்காப்பிட்டுக் கொண்டு திரும்பிவிட்டார்கள். அந்தச் சர்க்கரைப் பொங்கலைத் தங்கத்தாம் பாளத் தோடு கொண்டுவந்து, தன்னிடம் வேண்டிய சீடனிடம் கொடுத்துவிட்டுப் போய் விட்டாள் அம்பிகை. குருநமசிவாயர் எனும் அந்தச் சீடனோ, சர்க்கரைப் பொங்கலை உண்டு, அம்பாளை வாழ்த்திவிட்டு, தங்கத்தாம்பாளத்தை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டான். மறுநாள் காலையில் கோயிலில் தங்கத்தாம்பாளத்தைக் காணவில்லை எனப் பெரும்பரபரப்பு நிலவியது.
அப்போது அம்பிகை அங்கிருந்த வேதம் பயிலும் சிறுவன் மீது ஆவேசமாகி,``குருநாதர் உத்தரவுப்படி குருநமசிவாயர் சிதம்பரம் போகும்வழியில் ஒருமரத்தடியில் தங்கினார். அப்போது அவருக்குக் கொண்டுபோய், சர்க்கரைப் பொங்கல் கொடுக்கப்பட்டது. தங்கத்தாம்பாளம் அங்கே மரத்தடியில் உள்ளது. போய் எடுத்து வாருங்கள்!’’ எனக் கூறினாள். அதன்படியே போய்ப் பார்த்து, தங்கத்தாம்பாளத்தை எடுத்து வந்தார்கள். (குருநாதரால் அனுப்பப்பட்ட குருநமசிவாயர், சிதம்பரத்தில் பெரும்பெரும் திருப்பணிகள் செய்த வரலாறு தனிவரலாறு)அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பிகையின் அருளாடல்கள் பலப்பல! நாம் பார்த்தது ஒரு துளியே!


