Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகாலட்சுமி பூஜித்த லட்சுமிபுரீஸ்வரர்

அகிலநாயகனாம் அரனாரின் ஆலயங்களுள் உயர்புகழ் கொண்ட தலமாக அருள்பரப்புகிறது திருநின்றியூர். திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு பரமனாரைப் பூஜித்து அந்த பேறு பெற்றதாக தலபுராணம் கூறுகின்றது. நாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயினால் இத்தலத்து இறைவனை வழிபடும் குறிக்கோள் கொண்ட பரசுராமர், 300 வேதியர்களோடு 360 வேலி நிலத்தையும் இந்த கோயிலுக்கு தானமாக அளித்து பெருமானின் திருவருள் பெற்றிருக்கிறார். இந்திரன், தேவர்கள் மற்றும் சித்தர்கள் இந்த திருநின்றியூர் ஈசனை வணங்கியுள்ளனர். காமதேனு வழிபட்டு நோய் நீங்கியதும் இத்தலத்தில்தான். இச்செய்திகளை சுந்தரரின் தேவாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சமயம் பிரம்மஹத்தி தோஷத்தினால் கோச்செங்கட்சோழனுக்கு சித்தபிரமை ஏற்பட்டது. அதற்கு பிராயச்சித்தமாக தினமும் சிதம்பரம் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்டு திரும்புவான். அப்போது இந்த திருநின்றியூர் தலம் காடாக இருந்ததாம். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது தீவட்டிகள் அணைந்துவிடும். பின்னர் சற்று தூரம் சென்று மீண்டும் பற்ற வைத்துக்கொண்டு செல்வார்கள். ஒருநாள் அதிகாலை இவ்வழியே வர, வழக்கம்போல் தீவட்டிகள் அணைந்தன. அப்போது வானிலிருந்து காமதேனுப் பசு காட்டின் நடுவே ஓரிடத்தில் இறங்கி, சற்று நேரம் கழித்து மீண்டும் ஆகாயம் நோக்கிச் செல்வதைக் கண்டு வியந்தான் மன்னன். உடனே அக்காட்டினை சோதித்துப் பார்த்திட தன் படையினருக்கு உத்தரவிட்டான். ஒருவன் ஒரு பாறையை கடப்பாறையால் குத்த, அதிலிருந்து ரத்தம் கொப்பளித்தது. அதுகண்டு அதிர்ந்த மன்னன் உற்று நோக்க, அங்கே சுயம்புலிங்கம் தென்பட்டது. பின்னர், அந்த லிங்கத்தின் மீது மாடக்கோயிலாக ஆலயத்தை எழுப்பி, வழிபாடுகள் செய்தான். இதன் விளைவாக கோட்செங்கட்சோழனின் தோஷம் முற்றிலும் நீங்கியது.

நாற்புறமும் மதில்கள் சூழ ஆலயம் அழகுற விளங்குகின்றது. பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள் ஆலயத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பழைய சிலாவடிவங்களோடு நாட்டுக்கோட்டை நகரத்தார் புனரமைத்திருக்கின்றனர். அழகிய மூன்றுநிலை கிழக்கு ராஜகோபுரம், அரனாரின் அருள் அழகை கண்குளிர காணவாருங்கள் என அழைக்கின்றது. உள்ளே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம். எழிலே உருவாய்த் திகழ்கின்றார் நந்திதேவர். நேராக சில படிகளுடன் முன் மண்டபம் மற்றும் சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைக் கடந்து உள்ளே சென்று மகாமண்டபத்தை அடையலாம். மண்டபத்தின் வலப்புறம் அம்பாள் சந்நதியும், அம்பாளுக்கு நேராக தென்முக வாயிலும் காணப்படுகின்றன.

நேரே சுவாமி சந்நதி. சற்றே உயரமான கருவறைக்குள் கருணையோடு அருள்தர காத்திருக்கிறார் லட்சுமி புரீஸ்வரர். மகாலட்சுமீஸ்வரர் என்றும் போற்றப்படும் இந்த பெருமான் ருத்திராட்சப் பந்தலின்கீழ் நீண்ட பாணம் கொண்டு திகழ்கின்றார். தேவாதி தேவர்கள் நித்தமும் வந்து இந்த பெருமானைத் தொழுகிறார்கள். இவர் பாதம் பணிந்து போற்றி திரும்பியவுடனேயே அம்பாள் சந்நதி தென்முகமாக காட்சி தருகிறாள். அம்பிகை நின்ற வண்ணம் அலங்கார ஸ்வரூபியாய் அபயமளிக்கின்றாள். உலகநாயகியென்றும், லோகாம்பிகை என்றும் போற்றப்படுகின்றாள். அன்னையின் தரிசனம் முடித்து ஆலய வலம் வரலாம்.

வழக்கமான தேவகோஷ்ட மூர்த்தங்களோடு, பின் வரிசையில் ஜமதக்னீஸ்வரர், பரசுராமேஸ்வரர், சுப்ரமணியர், நால்வர் ஆகியோரின் சிலா ரூபங்கள் காணப்படுகின்றன. மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகுடன் காட்சி அளிக்கின்றனர். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் கணபதி சந்நதியும், வடமேற்கு மூலையில் வள்ளி-தெய்வானை சமேத கந்தனின் சந்நதியும் அமையப்பெற்றுள்ளன. இத்தலத்தில் நீலிமலர்ப்பொய்கை லட்சுமி தீர்த்தமாகவும், விளாமரம் தலவிருட்சமாகவும் விளங்குகின்றன.

அனுஷ நட்சத்திரக் காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில் அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். இத்தலத்து ஈசனை மகாலட்சுமியே பூஜித்ததால் அனுஷ நட்சத்திரக்காரர்கள் தரிசிக்க பன்மடங்கு பயனுறுவார்கள். இங்கு ஆடி வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப் படுகின்றன. குழந்தைப்பேறு அடைவதும், சொத்து சம்பந்தமான வழக்கு சாதகமாக முடிவதும் இத்தலத்தின் மகிமைகளாகும். திருநின்றியூர் ஈசனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் என யாவும் நீங்கப் பெறுவர் என்கிறார், சம்பந்தர். திருநின்றியூர் ஈசனின் திருவடி சம்பந்தமுடையவர்களை வினைகளும், பாவங்களும் பற்றாது என்று உறுதி கூறுகிறார், திருநாவுக்கரசர். இங்கு கோரிக்கை களோடு வரும் பக்தர்களுக்கு வழிபாட்டின் போது கருட தரிசனம் கிடைக்கிறது; இதுவே மனதிற்கு தெளிவும், தன்னம்பிக்கையும் தருகிறது; வெற்றியும் கைகூடுகிறது

என்கிறார்கள், பக்தர்கள்.

மயிலாடுதுறை தாலுகாவில் சீர்காழி&மயிலாடுதுறை பேருந்து சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ.தொலைவில் உள்ளது திருநின்றியூர்.

- எம்.கணேஷ்.