ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்
33 மகான்
விஜயேந்திரரை காண வரும் சாரங்கபாணி ஸ்வாமி
ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலை மீட்டு கொடுத்தமையால், சித்திரை மாதம் பிரம்மோற்சவம் அன்று (கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில்) சரியாக பிரம்மோற்சவம் கொடி ஏற்றம் நடைபெற்ற இரண்டாவது நாள், சாரங்கபாணிஸ்வாமி விஜயேந்திரதீர்த்தர் மடத்தில் புராண மண்டபத்தில் எழுந்தருள்வார்.
புராண மண்டபத்தில்தான் விஜயேந்திரர், ராகவேந்திரர் ஆகியோர் ``பரிமள’’ போன்ற கிரந்தங்களை எழுதினார்கள். அந்த சமயத்தில், சாரங்கபாணிக்கு மத்வ சம்ரதாயப்படி பூஜைகள் நடைபெறும். அப்போது, ஸ்வாமிக்கு நிவேதனம் மடத்தின் மூலமாகவே செய்யப்படும். அதன் பின்னர், கோயில் பட்டாச்சாரியர்கள் மற்றும் மடத்தின் அர்ச்சகர்கள் ஒன்றாக இணைந்து அமர்ந்து, நிவேதித்த உணவுகளை உண்டு இளைப்பாறுவார்கள்.
அன்று மாலையில், திருவடி திருமஞ்சனம் நடைபெற்று, மடத்தில் இருந்து ஸ்வாமி சூரிய பிரபை வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலாவாக சென்று, மீண்டும் கோயிலை அடைவார். ஆக, காலை முதல் மாலை வரை சாரங்கபாணி சுவாமி விஜயேந்திரர் அருகிலேயே இருப்பார். இதனை வரலாற்று சிறப்பாக அனைவரும் கருதுகிறார்கள். இன்றும், கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில் சார்பாகவும் ஸ்ரீ மடத்திற்கு மரியாதை உள்ளது. இத்தகைய மரியாதையும் கௌரவமும் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தரின் மீது அனைவருக்கும் இருக்கும் அளவு கடந்த அன்பையும், பக்தியையும் காட்டுகிறது.
விஜயேந்திரரே செய்த விக்ரஹம்
ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தருக்கு ஆயகலை 64கும் தெரியும் என்பதனை பார்த்தோம் அல்லவா! ஆகையால், சிற்பக் கலையிலேயே சிறந்து விளங்கிய பாண்டிய நாட்டின் நரசிம்ம வீரராமருடன் போட்டியிட்டு, பல அபூர்வமான சிற்பங்களை வடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக, நின்றுக் கொண்டிருக்கும் நரசிம்மர் விக்ரஹம் ஒன்றை மிக நேர்த்தியாக வடிவம் கொடுத்திருப்பார். நின்றுகொண்டு அருள்பாலிக்கும் நரசிம்மர் மிகவும் அரிது! இவைகள் எல்லாம், ``கும்பகோணம் மகாத்மியம்’’ என்னும் நூலில் உள்ளது.
மகான் விஜயேந்திரார் செய்த விக்ரஹங்கள் அனைத்தும், இன்றும் மடத்தில் ஒரு கண்ணாடி அலமாரி அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். அதனை நாம் காணலாம். வருடத்துக்கு ஒரு முறை மட்டும் இந்த விக்ரஹங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.அதே போல், ரத்தின பதக்கங்கள் தயாரிப்பதில் வல்லவரான மகாராஷ்டிரா மாநிலம் சதாராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷியுடன் போட்டியிட்டு, அபூர்வமான பதக்கங்களை வடித்து, ஸ்ரீ ராமனுக்கு சமர்ப்பணம் செய்தவர்.
கொரோனா நோய் பரவல் காலம் தவிர, சுமார் 15 ஆண்டுகளாக, பிரதி வியாழன் அன்று, அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் மடத்தில் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைத்தவர், ஸ்ரீ சுஷமேந்திர தீர்த்தர் ஆவார். (இவர் தற்போதைய பீடாதிபதியின் குருவின் குரு ஆவார்) கும்பகோணத்திலேயே மடத்தில் அன்னதானம் நடைபெறுவது, விஜயேந்திரர் மடத்தில் மட்டும்தான்.
காவலாய் வரும் பூதராஜர்
மத்வ மகான் ஸ்ரீ வாதிராஜருக்கு துணையாக எப்படி பூதராஜர் இருக்கிறாரோ.. அதே போல், ஸ்ரீ விஜயேந்திரருக்கும் துணையாக, காவலனாக பூதராஜர் இருக்கிறார். விஜயேந்திரர் தினமும் அருகில் உள்ள காவேரி நதிக்கு சென்று, ஸ்நானம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அப்போது காவலுக்காக பூதராஜரும், விஜயேந்திரருக்கு முன்பாக செல்வாராம். இதனை பல பக்தர்கள் காதில் கேட்கும் சப்தத்தின் மூலமாக உணர்ந்திருக்கிறார்கள். அதாவது, மடத்தில் இருந்து காவேரிக்கு செல்லும் வழியில் சுமார் 03:30 மணி அளவில் முதலில் உஸ்..உஸ்... என்று காற்றின் சப்தமும், அதன் பின்னே.. டக்..டக்.. என்று ஸ்வாமிகளின் கட்டையால் செய்யப்பட்ட திருவடியின் சப்தமும் சிலரது காதில் கேட்குமாம். இன்றும் மடத்தின் ஒரு பகுதியில், வாயுவின் ஆவேசத்தில் அதாவது காற்று ரூபமாக ஒரு மரத்தில் பூதராஜர் பக்தர்கலுக்கும் அருள்கிறார். தினமும் ஸ்ரீ லட்சுமி நாராயணர், ஸ்ரீ விஜயேந்திரர் ஆகியோருக்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு, பூதராஜருக்கும் பூஜை நடைபெறுகின்றன. வருடத்திற்கு ஒரு முறை பூதராஜருக்கு பலி பூஜை நடைபெறுகிறது.
விரிவாக்கம் செய்யப்பட்ட மடம்
சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றைய தினத்தில், வெளிநாடுகளிலிருந்தும்கூட பல பக்தர்கள் வருகை தந்தார்கள். கும்பகோணமே.. விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரு காலத்தில், விஜயேந்திரர் மடத்திற்குவர சோலையப்பன் தெரு வழியாகதான் வரவேண்டும். கிழக்கு நோக்கிய முன் வாசலாகதான் இருந்துள்ளது. அந்த சமயத்தில், பக்தர்கள் ஸ்ரீ விஜயேந்திரரை மட்டும் தரிசித்துவிட்டு சென்றுவிடுவார்கள். பின் பகுதியில் இருக்கும் காஷ்யப தீர்த்த குளத்தையும், பூதராஜரையும் தரிசிக்காமல் சென்றுவிடுவார்கள்.
பின் பகுதிக்கு வரவே பலரும் பயந்தனர். காரணம், பின் பகுதி முழுவதும் ஒரே புதர்களாக காட்சியளித்தன. மேலும் முன்வாசல், மிக குறுகியதாய் இருந்ததாலும், ஸ்ரீ சுயதீந்திரதீர்த்தர் மற்றும் ஸ்ரீ சுபுதேந்திரதீர்த்தர் ஆகிய இரு ஸ்வாமிகளின் பெரும் முயற்ச்சியால், புதர்களாக இருந்த மடத்தின் பின் பகுதியை சரிசெய்து, ஸ்ரீ விஜயேந்திரரின் மடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன் காரணமாக, சோலையப்பன் தெரு வழியாக இருந்த முன்வாசல் பகுதி மாற்றம் செய்யப்பட்டு, முதலில் பூதராஜரை தரிசித்துவிட்டு, காஷ்யப தீர்த்த குளத்தை தரிசித்துவிட்டு, பிறகுதான் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தரை தரிசிக்க முடியும். அப்படி ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இன்று, அப்படியே தரிசிக்க முடியும்.
நூல்களும் இயற்றியுள்ளார்
1517 - ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரின் பூர்வாஸ்ரம (இயற்பெயர்) விட்டலாச்சார்யா ஆகும். இவர்,
* ``தத்வமணிமனேக்யபெடிகா’’ - மத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்தின் வர்ணனை.
* ``குடபாவபிரகாசிகா’’ - மத்வரின் தத்வோத்யோதா பற்றிய வர்ணனை.
* ``தத்துவபிரகாசிக டிப்பனி’’ - மத்வ தத்துவ பிரகாசிகாவின் சுருக்கம்.
* ``லகு அமோடா’’ - வியாசராஜதீர்த்தரின் நியாயம்ருதம் பற்றிய விளக்கம்.
* ``யுக்திரத்னாகரா’’ - வியாசராஜதீர்த்தரின் தர்க்க தாண்டவ வர்ணனை.
* ``நியாயத்வாதிபிகா’’ - துவைதத்தில் மீமாம்ச கூறுகள் பற்றிய கையேடு.
* ``பிஸ்தாபாஷு மிமாம்சா’’ - சடங்குகளுக்காக மாவில் செய்யப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கும் ஆய்வுக் கட்டுரை.
* ``சுபத்ரா தனஞ்சயா’’ - அர்ஜுனன் மற்றும் சுபத்ராவின் திருமணம் குறித்த நாடகம்.
* ``நாராயண சப்தார்த்த நிர்வாசனம்’’ - நாராயணன் என்ற சொல்லின் சொற்பிறப்பியல் குறித்த தனி நூல்
என சுமார் 104 கிரந்தங்களை இயற்றியுள்ளார். மேலும், ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தர் கன்னடத்திலும், இன்னும் வேறு பல பிராந்திய மொழிகளிலும், எளிய முறையில் பக்தியையும் ஞானத்தையும் பாமரர்களுக்கும் சேர்க்கும் விதமாக, `ஸ்ரீ விஜயேந்திர ராம’ என்ற முத்ரையிலேயே (பாட்டின் முடிவில்) பல பாடல்களை இயற்றியுள்ளார்.
இன்றும் அருள் மழை காஞ்சிபுரம், காசி, மைசூர் ஆகிய இடங்களுக்கு திக் விஜயம் செய்து, கோலாரில் மீமாம்ஸ பண்டிதருடனான வாதத்தில் வென்று, ஸ்ரீ முக்ய பிராணரை (அனுமன்) பிரதிஷ்டை செய்திருக்கிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் ராமராயர், தஞ்சாவூரின் செவ்வப்ப நாயக் போன்ற அரசர்களுக்கு ராஜ குருவாக விளங்கினார். 97 வயது வரை மூல ராமரின் பூஜையை செய்து கொண்டும், கிரந்தங்களை இயற்றியும், பக்தர்களுக்கு அருளைப் புரிந்தும் வந்த கும்பகோணம் மகான், 1614 - ஆம் ஆண்டு ஜியேஷ்டா திரயோதசி அதாவது வைகாசி அல்லது ஆனி மாதத்தில் வருகின்ற அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பிறகு வரும் 13-வது நாளில் கும்பகோணம் க்ஷேத்திரத்திலேயே பிருந்தாவனமானார்.
விஜயேந்திரரின் ஜெயந்தி, ஆராதனைகளில் கும்பகோணம் மடத்தில் கூட்டம் அலைமோதும். தொடர்ந்து பல மணி நேரம் பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். இன்றும் வேண்டும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார், ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர். ``விஜயேந்திரர்’’ என்பதே வெற்றியின் சொல்தான். ஆகையால் வாழ்வில் பல வெற்றிகளை அடைய விஜயேந்திரரை கும்பகோணத்திற்கு சென்று தரிசித்து பிரார்த்திக்கலாம். கும்பகோணத்தை காத்த கும்பகோணம் மகான்! நிச்சயம் நம்மையும் காப்பார்!
(அடுத்த இதழில் வேறொரு மகான்...)
* திறந்திருக்கும் நேரம்: காலை: 5:30 முதல் 2:00 வரை, மாலை: 4:30 முதல் 9:00 வரை.
* எப்படி செல்வது?: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 4.கி.மீ., தூரத்தில் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தரின் மூலபிருந்தாவனம் உள்ளது. தொடர்புக்கு: 9952299110. விலாசம்:
* 159, சோலையப்பன் தெரு, 27/7, ஈபி காலனி, காமராஜ் நகர், கும்பகோணம், தமிழ்நாடு - 612001.
ரா.ரெங்கராஜன்


