Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கும்பகோணத்தை காத்த கும்பகோணம் மகான்!

ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்

ஆய கலைகளிலும் வல்லவர்

அக்காலத்தில், மூங்கில் கயிற்றினை இருபுறத்திலும் தொங்கவிட்டு, அதன் மீது கால்களை வைத்து நடந்து, பொதுமக்களுக்கு வித்தையினை செய்து காட்டுவார்கள். இத்தகைய வித்தைகளை செய்துகாட்டுபவரை, ``கழைக்கூத்தாடிகள்’’ என்றழைப்பார்கள்சினிமா, டிவி, செல்போன் ஆகியவைகள் இல்லாத காலகட்டம். ஆகையால், இத்தகைய கழைக் கூத்தாடிகளுக்கென தனியாக மக்கள் கூட்டம் கூடும்.

ஒரு முறை, இத்தகைய வித்தைகளை செய்யும் கழைக்கூத்தாடிக்கு, தான்தான் உலகில் தலைசிறந்த கழைக்கூத்தாடி என்கின்ற கர்வம் ஏற்பட்டது. கர்வம் தலைக்கேற, செய்வது அறியாது.

``ஹேய்.. சந்நியாசியே... அனைவரும் நீ ஆயக்கலைகள் 64களிலும் கற்றறிந்த வல்லவர் என்கிறார்கள். நான் செய்யும் இந்த வித்தையை உன்னால் செய்ய முடியுமா?’’ என்று கழைக்கூத்தாடி, விஜயேந்திரரை பார்த்து சவால் விட்டார். மகான் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தருக்கு ஆயக்கலை 64களிலும் கற்றறிந்த வித்தகர்.

இருந்தபோதிலும், மெல்லியசிரிப்போடு அமைதியாக இருந்தார்.

``என்ன?.. உன்னால் முடியாதா...? நீ வணங்கும் ராமச்சந்திரர் உனக்கு அருள்புரிய மாட்டாரா?’’ என ஏளனம் செய்தார். அதுவரை பொறுமைகாத்த விஜயேந்திரர், தான் வணங்கும் ராமச்சந்திரமூர்த்தியை ஒருவர் இகழ்ந்து பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகு, துளிக்கூட தாமதிக்காமல் கழைக்கூத்தாடியை பார்த்து பதில் சவால் விட்டார்.

அட்டமா சித்திகள்

அந்த சமயத்தில், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலின் நுழைவாயிலும், கும்பேஸ்வரர் கோயிலின் நுழைவாயிலும் எதிரெதிரில் இருந்தன. நடுவில் பொற்றாமரைக் குளம். இந்த அமைப்பில்தான், சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த அமைப்பு மாறிவிட்டது. சாரங்கபாணி கோயில் கோபுர கலசத்திற்கும், கும்பேஸ்வரர் கோயில் கோபுர கலசத்திற்கும் இடையே வாழைப்பூ நார் ஒன்றை எடுத்து கட்டினார், விஜயேந்திரர்.``என்ன சுவாமி... மூங்கில் கயிற்றை கட்டி அதன் மீது வித்தைகளை செய்து காட்டுவதே மிகவும் கடினம். இதில் நீங்கள் வாழைப்பூ நாரை கட்டினால், எப்படி வித்தைகளை செய்வீர்கள்?’’ என்று நகைத்தார், கழைக்கூத்தாடி.

அவருக்கு பதிலேதும் கூறாமல், ஆயக்கலைகளில் வல்லமைபெற்ற விஜயேந்திரர், அட்டமா சித்திகளிலுள் ஒன்றான ``லகிமா’’ என்னும் சித்தியை தன் தவ வலிமையை கொண்டு உருமாற்றுகிறார். (லகிமா என்பது உடலை மிக சிறியதாக்கி, மிக லேசான எடைக் கொண்டு உருவத்தை மாற்றும் தன்மை) இதைக் கண்டதும் வியந்துப்

போனார், கழைக்கூத்தாடி.

மேலும், ``பிராப்தி’’ என்னும் மற்றொரு அட்டமா சக்தியை பயன்படுத்தி, பூமியில் இருந்து பறந்து, கட்டிய வாழைப்பூ நாரில் நடக்க ஆரம்பித்தார். இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். சிலரது கண்களில் கண்ணீர் வந்தன. சவாலில் விஜயேந்திரரே வென்றார். மீண்டும் பழைய உருவம் அடைந்தார். தவறை உணர்ந்த கழைக்கூத்தாடி, ஸ்ரீ விஜயேந்திரரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். மன்னித்து அருளிய ஸ்வாமிகள்;``இது என்னால் ஆனது இல்லை. என் மூல ராமச்சந்திரனால் ஆனது. அவனின் அனுக்கிரகத்தால் ஆனது’’ என்று ஸ்வாமிகள் தீர்க்கமாக கூறினார். சுவாமிகள் கற்ற ஆயக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக, இந்த சம்பவம் நடந்தேறியது.

சந்தன உருண்டை

இன்னுமொரு அதிசய சம்பவம் கும்பகோணத்தில் நடந்தது. மகான் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தர், தினமும் காலையில் காவேரி ஸ்நானம் செய்துக்கொண்டு, பூஜைகளை முடித்த பின்னர், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களாம்பிகை சந்நதிக்கு சென்று, அம்பாளுக்கு நேரெதிரில் அமர்ந்து, நூல்களை எழுதுவது, வேத பாராயணம் செய்வது, மீதம் இருக்கும் நேரத்தில் தியானம் செய்வது என மங்களாம்பிகை சந்நதியிலே இருப்பார். இப்படி இருக்க, ஒரு நாள்.. கும்பேஸ்வரர் கோயிலுக்கு மன்னர் வருகை புரிந்தார். அப்போது, மங்களாம்பிகை சந்நதிக்கு வரும்போது மன்னரை கண்டுகொள்ளாது தியானத்தில் ஆழ்ந்திருந்தார், விஜயேந்திரர். இதனால், கடும் கோபம் கொண்ட மன்னர்;``யாரங்கே...’’ என்று காவலாளியை அழைத்தார். இரண்டு காவலர்கள் மன்னரின் அருகே வந்தார்கள்.

``மன்னர் வருவதுகூட தெரியாமல் தியானம் செய்யும் இவருக்கு, தண்டனையாக ஒருலட்சம் சந்தன உருண்டைகளை தயார் செய்ய சொல்லுங்கள். இது என் உத்தரவு’’ என மன்னர் கூறினார். தியானம் களைந்து எழுந்த விஜயேந்திரரிடத்தில், நடந்தவற்றை காவலர்கள்கூற, மங்களாம்பிகைக்கு எதிரே அமர்ந்து சந்தனத்தை அரைக்க தொடங்கினார்.

ஒருலட்சம் சந்தன உருண்டைகள் என்றால், சாதாரணமான விஷயமா? ஒரு உருண்டை என்பது தற்போதுள்ள திருப்பதி லட்டு போல் உருண்டையாக இருக்க வேண்டும். ஆகையால், இரவு பகலாக விஜயேந்திரர் சந்தனத்தை அரைத்துக்கொண்டிருக்க, சந்தன கல்லில் ஒரு பக்கம் கட்டை விரல் மட்டும் சந்தனத்தை எடுத்துக் கொண்டிருந்தது. யாருடைய கட்டை விரல் இது? நாம் சந்தனத்தை தேய்க்க தேய்க்க, அந்த கட்டை விரல் சந்தனத்தை எடுத்து பாத்திரத்தில் இடுகிறதே? என்று விஜயேந்திரர் யோசித்துக் கொண்டிருக்க, அங்கு மங்களாம்பிகை தோன்றி;

``நீ என்னை குறித்துதானே தியானத்தில் ஆழ்ந்து இருந்தாய். அதனால்தானே மன்னர் வருவதுகூட உனக்கு தெரியவில்லை. ஆக, உனக்கு கொடுத்த தண்டனையை சரிசமமாக நானும் ஏற்பதுதானே பொருத்தமாக இருக்கும்’’ என்று மங்களாம்பிகை கூறினார். அதனால், சந்தனத்தை அரைத்து எடுக்க மங்களாம்பிகை தன் கட்டை விரலை கொடுத்து விஜயேந்திரருக்கு அருள்புரிந்துள்ளார்.

இன்றும் மங்களாம்பிகையின் கையில் உள்ள கட்டைவிரல், இல்லாததை காணலாம். இப்படி ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தருக்கு எல்லாமே மங்களாம்பிகைதான் என்று சொன்னால் அது மிகையாகாது!

தியான பீடம்

மங்களாம்பிகைக்கு எதிரே ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தர் தியானம் செய்த இடத்தை இன்றும் காணலாம். அந்த இடத்தை பக்தர்களின் காலடிகள் படக்கூடாது என்பதற்காக, விஜயேந்திரர் தியானம் செய்த இடத்தில், பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த தியான பீடத்திற்கு பித்தளையினால் தகடும் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது, தியான பீடத்திற்கு வெள்ளியால் ஆன தகடு செய்து சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வினை இரு மடம் (அத்வைதம் - துவைதம்) மடாதிபதிகளும் ஒன்றினைந்து செய்திருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்றால், மறவாமல் அம்பாள் மங்களாம்பிகையையும், ஸ்ரீ விஜயேந்திரர் தியானம் செய்த இடத்தையும் தரிசித்து வாருங்கள்.

அந்நியர் படையெடுப்பு

முன்னொரு காலத்தில், அந்நியர் படையெடுப்பால் கும்பகோணம் நகரில் உள்ள கோயில்கள் தாக்குதலுக்குள்ளானது. அந்த சமயத்தில், சாரங்கபாணி, சக்ரபாணி ஆகிய கோயில்களின் விக்ரகங்கள், நகைகள், ஆகியவைகளை தன்னுடைய பொறுப்பில் எடுத்து பாதுகாத்து வந்தார், விஜயேந்திரர். மேலும், பூஜை செய்யும் சமயத்தில், அனைத்து கோயில் விக்ரகங்களையும் அருகில் வைத்து, அந்த விக்ரகங்களுக்கும் பூஜை செய்து வந்தார்.

அதன் பின்னர், அந்நியர் படையெடுப்பு சுமுக நிலையை எட்டியவுடன், மகான் ஸ்ரீ ராகவேந்திரர், தான் ஜீவசமாதி ஆகும் காலத்தில், விக்ரகங்கள் மற்றும் நகைகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினரிடமே ஒப்படைத்துவிட்டார். இங்கு எப்படி ராகவேந்திரர் வந்தார்? விஜயேந்திரதீர்த்தருக்கும், ராகவேந்திரதீர்த்தருக்கும் என்ன சம்மந்தம்? அடுத்த இதழில் காணலாம்...

மகான் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தர் கற்ற ஆயக்கலை 64

கல்வி மற்றும் அறிவு சார்ந்த கலைகள் (1 - 16)

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்).

2. எழுத்தாற்றல் (லிகிதம்).

3. கணிதம்.

4. மறைநூல் (வேதம்).

5. தொன்மம் (புராணம்).

6. இலக்கணம் (வியாகரணம்).

7. நயனூல் (நீதி சாத்திரம்).

8. கணியம் (சோதிட சாத்திரம்).

9. அறநூல் (தரும சாத்திரம்).

10. ஓகநூல் (யோக சாத்திரம்).

11. மந்திரநூல் (மந்திர சாத்திரம்).

12. நிமித்திகநூல் (சகுன சாத்திரம்).

13. கம்மியநூல் (சிற்பசாத்திரம்).

14. மருத்துவநூல் (வைத்திய சாத்திரம்).

15. உறுப்பமைவுநூல் (உருவ சாத்திரம்).

16. மறவனப்பு (இதிகாசம்)

கலை மற்றும் கைவினைத் திறன்கள் (17 - 32)

17. வனப்பு.

18. அணிநூல் (அலங்காரம்).

19. மதுரமொழிவு (மதுரபாடணம்).

20. நாடகம்.

21. நடம்.

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்).

23. யாழ் (வீணை).

24. குழல்.

25. மதங்கம் (மிருதங்கம்).

26. தாளம்.

27. விற்பயிற்சி (அத்திரவித்தை).

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை).

29. தேர்ப்பயிற்சி (ரத பரீட்சை).

30. யானையேற்றம் (கச பரீட்சை).

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை).

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை).

வாழ்வியல் மற்றும் சமூகக் கலைகள் (33 - 48)

33. நிலத்துநூல் / மண்ணியல் (பூமி பரீட்சை).

34. போர்ப் பயிற்சி (சங்கிராமவிலக்கணம்).

35. மல்லம் (மல்லயுத்தம்).

36. கவர்ச்சி (ஆகருடணம்).

37. ஓட்டுகை (உச்சாடணம்).

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்).

39. காமநூல் (மதனசாத்திரம்).

40. மயக்குநூல் (மோகனம்).

41. வசியம் (வசீகரணம்).

42. இதளியம் (ரசவாதம்).

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்).

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்).

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்).

46. நாடிப் பயிற்சி (தாது வாதம்).

47. கலுழம் (காருடம்).

48. இழப்பறிகை (நட்டம்).

மீச்சக்தி மற்றும் சிறப்புத் திறன்கள் (49 - 64)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி).

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்).

51. வான்செலவு (ஆகாய கமனம்).

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்).

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்).

54. மாயச்செய்கை(இந்திரசாலம்).

55. பெருமாயச் செய்கை (மகேந்திரசாலம்).

56. அழற்கட்டு (அக்னித் தம்பனம்).

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்).

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்).

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்).

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்).

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்).

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்).

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்).

64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

ரா.ரெங்கராஜன்