Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனதை ஆத்மாவசம் கொண்டு வருக!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 115 (பகவத்கீதை உரை)

இறை சிந்தனையில் ஆழ்ந்து போவது என்பது ஒரு சுகானுபவம். அது பயிற்சியாலன்றி எளிதில் கிட்டிவிடாது. அதை அனுபவித்துக் கொண்டே, தவிர்க்க முடியாத லோகாதயக் கடமைகளில் ஈடுபட்டோமானால், அதன் விளைவுகளால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். அந்த பலாபலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து விடுவதால், நமக்கு இன்பமோ, துன்பமோ இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு பணிப்பெண், பாத்திரம் தேய்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்.

தன்னுடைய பத்து மாதக் குழந்தையைச் சற்றுத் தொலைவில் அமர்த்திவிட்டு, வேலையில் கவனம் செலுத்துகிறாள். சற்றைக் கெல்லாம் அந்தக் குழந்தை தவழ்ந்து எங்கோ செல்ல முயற்சிக்கிறது. அதை கவனித்து விடும் அவள், வேலையை அப்படியே போட்டுவிட்டு, ஈரக் கைகளைப் புடவையில் துடைத்துக் கொண்டு ஓடிப்போய் குழந்தையைத் தூக்கி வந்து, அதே இடத்தில் மறுபடியும் அமர்த்திவைக்கிறாள்.

பிறகு வேலைக்குத் திரும்புகிறாள். ஆனால் குழந்தை அடுத்தும், வேறு திக்கை நோக்கிச் செல்ல முற்படுகிறது. மீண்டும் அவள் வந்து குழந்தையைப் பிடித்து வருகிறாள். இப்படி தொடர்ந்து நடப்பதால், வேறு வழியில்லாமல், குழந்தை தாண்டிச் செல்ல முடியாதபடி மென்மையான தடைகளை அதைச் சுற்றிப் போட்டுவிட்டு, பணியைத் தொடர்கிறாள். இப்போது குழந்தை அந்தத் தடைகளைத் தாண்டிப் போக முயற்சிக்கிறது, முடியாததால் அங்கேயே அமர்ந்து விடுகிறது. அதை ஓரக்கண்ணால் கவனிக்கும் அந்தத் தாய், நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள்.

தன் வேலையை முழுமையாக முடிக்கிறாள். கட்டுப்பட மறுக்கும் புலன்களை எந்த உத்தியிலாவது அடக்கி நிலை நிறுத்தினால், இறை உணர்வை நிம்மதியாக அனுபவிக்க முடியும் என்பதுதான் உண்மை. அதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும். அதனால் மனதை ஒருமுகப்படுத்தினால் புலன்கள் தன்னிச்சையாகத் திரியாது.

``யதோ யதோ நிஸ்சரதி மனஸ்சஞ்சலமஸ்திரம்

ததஸ்ததோ நியம்யைததாத்மன்யேவச வசம் நயேத் (6:26)

‘‘அலைபாய்ந்து கொண்டேயிருப்பதும், நிலையற்றதுமாகிய மனம், எக்காரணத்தால் எது, எதை நோக்கித் திரிகிறதோ, அதன், அதனிடத்திலிருந்து மீட்டெடுத்து ஆத்மாவின் வசம் கொண்டு வருவாயாக’’ஒன்றின் மீது நாட்டம் கொண்ட மனதை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தால், உடனே அது வெகு சுலபமாக வேறொரு விஷயத்துக்குத் தாவி விடுகிறது.

இவ்வாறு தாவுவதற்கு ஏதாவது சமாதானமும் சொல்கிறது - அது நொண்டி சாக்காகக்கூட இருக்கலாம்! இதனின்று பிரித்து எடுத்து வந்தால், இன்னொன்று, அதற்கும் ஏதேனும் சமாதானம், விளக்கம்! அதாவது மனசைக் கட்டுப்படுத்துவது அல்லது திசைதிருப்புவது என்பது மிகவும் கடினமான முயற்சிதான். ஆனாலும், மனதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டால், இறை சிந்தனைக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ‘பயபக்தி’ என்று சொல்வதற்கு ஏற்ப, கடவுளுக்கு பயந்து நடந்து கொள்வது, மனதை கொஞ்சமாவது கட்டுப்பாட்டில் வைக்கும் உத்தியாகும்.

நம்மைச் சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன.

அதனால் மனம் அலைபாய்வது தவிர்க்கவே முடியாதுதான். புலன்கள் அறிவதை மனம் நமக்கு, நம் மூளைக்குச் சொல்கிறது. மனத்தின் இயல்பு அது. ஆனால், பெரும்பாலான சமயங்களில் அது அதிகப் பிரசங்கித்தனம் செய்து விடுகிறது; நம்மைத் துன்பப்பட வைக்கிறது. எந்த உணர்வையும் ஒரு வரையறைக்கு மேல் வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, மனக்

கட்டுப்பாட்டுக்கு மிகவும் அவசியம். ஒரு சம்பவம் நிகழ்கிறது, அதில் நம் பங்கு இருக்கிறது என்றால், அதற்குப் பிறகு அந்த சம்பவம் நம்முடைய மனதை விட்டுப் போய்விட வேண்டும். அதன் பின்விளைவு லாபமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ எப்படியிருந்தாலும், எந்த உணர்வுக்கும் காலத்தை நீட்டிக் கூடாது. இப்படி ஒவ்வொரு சம்பவத்துக்கும் மனதைப் பழக்கிவிட்டால், பிறகு துன்பமில்லை.

அதனால்தான் எப்போதும் இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இரு என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆரம்பத்தில் இவ்வாறு இறைநாமத்தை சிந்திப்பது மெகானிகலாக இருந்தாலும், நாளடைவில் அது நம் மனதைப் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துக் கொள்ளும். சினிமா பார்ப்பவர்களில் சிலர், கதாநாயகனின் போலியான வீரத்துக்குக் கைதட்டி, விசிலடித்து, தம் உணர்வுகளை வெளிப் படுத்திக் கொள்வார்கள். வேறு சிலர், திரையில் தோன்றும் சோகக் காட்சிகளில் முழுவதுமாக மனதை இழந்து கண்களில் நீர் பெருக, விசும்புவதும் உண்டு.

இத்தனைக்கும் திரையில் தோன்றுவது நிழல்தான், நிஜமில்லை என்பது அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் அனைவருக்குமே தெரியும். ஆனாலும், உணர்ச்சிவசப்படுதலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இது, ரசனையை ஓர் எல்லைக்குள் அவர்கள் நிறுத்தி வைக்காததன் தவறு. காட்சி முடிந்து அரங்கில் வெளிச்சம் பரவும்போது உணர்வுகளால் பாதிக்கப்படாதவர்கள், சோகத்தால் முகம் கூம்பி, கண்களில் நீர் தளும்ப நிற்பவர்களைப் பார்த்து கேலியாகச் சிரிக்கவும் செய்வார்கள்.

இந்த ஏளனத்தை ஏற்க இயலாத உணர்வுபூர்வ ரசிகர்கள், அடுத்து இன்னொரு திரைக் காட்சியை உணர்வு எல்லைக்கு அப்பால் நின்றபடி காணவேண்டும் என்று நிறைவேற்ற இயலாத சபதத்தை மேற்கொள்வார்கள்! காரணம், மனம். உதாரணமாக, நண்பன் பகைவன் ஆகிவிட்டான் என்றால், இதை மனம்தான் நமக்கு உணர்த்துகிறது. அந்த நண்பனுடைய நடத்தையை கண்காணிக்கும் கண்கள், அவன் யாரிடமாவது பேசுவதைக் கேட்கும் காதுகள், இவை தரும் தகவலை வைத்து அவன் நமக்கு எதிரியாகிவிட்டான் என்று மனம் தீர்மானித்துக் கொள்கிறது, அதையே மூளைக்கு உணர்த்துகிறது.

ஆனால், கண்கள் சரியாகத்தான் பார்த்தனவா, காதுகள் சரியானதைத்தான் கேட்டனவா என்பதில் சந்தேகம் உண்டு. இந்த சந்தேகத்திற்கு மதிப்பு கொடுக்காமல் மனம், நல்ல நண்பனையும் விரோதியாக்கி விடுகிறது. ஒரு கட்டத்தில், தீர விசாரிக்க வேண்டிய நிலைமை உருவாகும்போது, கண்டதும், கேட்டதும் தவறானவை என்று புரியவரும்போது, மனம் இப்போது மாற்றி உணர்த்துகிறது.

அவன் பகைவனல்ல; பழைய நண்பனே, இன்றும் நண்பனே என்று! இதுதான் மனதின் இயல்பு. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும், நம்மை ஏமாற்றவும் கூடியது!இது போன்ற நிலைமை உண்டாகக்கூடாது என்பதற்காகத்தான் மனதை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

மேலோட்டமான சாட்சியங்களை வைத்து நண்பன் பகைவனாகி விட்டான் என்று நமக்குத் தகவல் தரும் மனதை அடக்கி, ‘தீர விசாரி’ என்று நாம் உத்தரவிட்டோமானால், இந்தக் குழப்பத்துக்கு வாய்ப்பே இருக்காது. பொதுவாகவே எதிர்மறை எண்ணங்களில் மனம் ஆர்வமாக ஈடுபடுவது மனித சுபாவமாகி விட்டதால், சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் நமக்கு நன்மையைவிட தீமைகளைத்தான் அதிகம் தருகின்றன. இந்தக் கட்டத்தில், பரம்பொருளை நாடி, மனதைத் தூய்மைபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு சில சமயம் பளிச்சென்று சில எண்ணங்கள் தோன்றும்.

அவை அவர் அனுபவிக்கும் பிரச்னைக்கான தீர்வாகவே இருக்கும். இந்த மின்னல் எப்படித் தோன்றுகிறது? இறை சிந்தனையின் பலன்தான் இது. இப்படி ஒரு சிந்தனை உதிக்கும் என்று அவரே கற்பனை செய்திருக்க மாட்டார். ஆனாலும், உள்ளார்ந்து அவர் இறைவனை நினைக்கும்போது ஏற்படும் ஒளிதான் இது. மனதை அடக்குவது அல்லது அடிமைப்படுத்துவது என்பது முற்றிலுமாக மன இயக்கத்தை நிறுத்தி விடுவதில்லை. அது முடியவும் முடியாது. ஒரு வேலைக்காரனை தட்டிக் கொடுத்தும் வேலை வாங்குவான் எஜமானன். தேவைப்பட்டால் கண்டித்தும், ஏன் தண்டித்தும்கூட வேலை வாங்குவான். இதேபோல, மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தால், அவன்தான் யோகி.

அதாவது மனதைக் கட்டுப்படுத்தவும் சாம, தான, பேத, தண்ட உத்திகளைக் கையாளலாம்! இது, சர்க்கரை நோய் கொண்டவர் ஒரு விருந்தில் தனக்கு பரிமாறப்படும் இனிப்பை மறுப்பது போல! உபசரிப்பவர் என்னதான் கட்டாயப்படுத்தினாலும், இனிப்பை ஏற்கவே மாட்டேன் என்ற திட சித்தம் கொள்வது போல! ஆனால், அந்த இனிப்பை ஏற்கெனவே சாப்பிட்டிருந்த சுவை மறக்க முடியாததாக இருந்தால், வேறு வினையே வேண்டாம், சர்க்கரை வியாதி மறந்துவிடும், சபலம் வெற்றி பெறும். இப்படி நல்லது எது, தீயது எது என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும், தேவை எது, தேவையற்றது எது என்பதை அறிந்திருந்தாலும், மனதை அப்போதைய சூழலுக்கு அடக்கி வைப்பதுதான் சாதனை.

‘அதுதான் மருந்து இருக்கிறதே’ என்ற சமாதான பதிலை மனசு தயாராக வைத்திருக்கும்; அல்லது ‘அட, இந்த ஒருமுறை சாப்பிடுவதால் என்ன பெரிதாக சர்க்கரை அதிகரித்துவிடப் போகிறது’ என்ற அலட்சியத்தை, சபலத்துக்குத் துணையாக வைக்கும். ஆனால், ‘முற்றிலுமாக மறுப்பது’ என்ற நிர்தாட்சண்யம்தான் மனதை பண்படுத்தும். ஆனால், திடீரென்று மனதை அடக்கிவிட முடியுமா என்ன? நிச்சயம் முடியாதுதான். பிறப்பிலிருந்தே கூடவந்து அந்தந்த வயசுக்கு ஏற்ப நம்மை அலைக்கழித்து, அழிசாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கும் மனதை அத்தனை சுலபமாக அடக்க முடியாதுதான். ஆனால், முயற்சி செய்யலாம். சின்னச் சின்ன விஷயங்களில் முயன்று, தவ நிலையை எட்டலாம்.

கார் ஓட்டத் தெரிந்தவனுக்கு அதை வேகமாக செலுத்தவும் தெரிய வேண்டும். தேவைப்படும்போது வேகத்தைக் குறைக்கவும் அல்லது காரை முற்றிலுமாக நிறுத்தவும் தெரிய வேண்டும். பிரேக் பிடிக்கத் தெரியாதவன் கார் ஓட்டினானென்றால் என்னவாகும்? காரின் வேகத்தையும், நம் மனதையும் ஒருங்கிணைக்க நம் கால் உதவுகிறது. அதாவது ஒரே காலால் ஆக்ஸிலேட்டர் கட்டையை அழுத்துகிறோம்; அதே காலால்தான் பிரேக் கட்டையையும் அழுத்துகிறோம். இதனால் வேகக் கட்டுப்பாட்டை நம்மால் நன்கு நிர்வகிக்க முடிகிறது. ஒரு காலுக்கு ஆக்ஸிலேட்டர்; இன்னொரு காலுக்கு பிரேக் என்று இயங்குவோமானால், ஓட்டமும், நிற்றலும் குழம்பிப் போகும். இந்த இரட்டைத்தனம் பயணத்தை விபரீதமாக்கும். அதுபோலதான் மனசும். இரட்டைத்தனம் அதைப் போட்டு வதைத்தெடுக்கிறது.

ஈர்ப்பின் - கவர்ச்சியின் - பரிமாணத்தில் மனதின் நாட்டமும் அமையும். அந்த ஈர்ப்பு தேவையா, தேவையில்லையா என்ற இரட்டைத்தனம், மனதின் பலம், பலவீனத்தைப் பொறுத்து நன்மை, தீமையைத் தருகிறது. தேவையில்லை என்று தீர்மானித்துக் கொள்ள முடியுமானால் மனம் அமைதியுற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தத் தீர்மானத்தை, பல்வேறு வகையான ஈர்ப்புகளுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். அது சாத்தியமானால், மனம் போன போக்கிலே மனிதன் போக வேண்டியிருக்காது.

இதற்கு ஒரே வழி - பரம்பொருளிடம் சரணடைவதுதான். ஆனால் மனதில் அமைதி - கட்டுப்பாடு - ஏற்படாதவரையில் இறைவனிடம் நாட்டம் கொள்வது சுலபமில்லை. எப்போதும், இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பது அந்த நெருக்கத்துக்கு வழி வகுக்கும் என்றாலும், அந்த உச்சரிப்பு மெகானிகலாக இருந்துவிட்டால், மனசு நம்மை விட்டு விலகிவிடும்; அதன் போக்குக்கு அலையும். நாள் பூராவும் இறை நாமத்தில் ஆழ்ந்திருக்க முடியாதுதான். ஆனால், பிற செயல்களில் ஈடுபடும்போதே மூச்சிழையாக இறை நாமமும் உச்சரிக்கப்பட பழக முடியுமானால், மனதுக்குக் கடிவாளம் போட முடியும் என்பது ஆன்றோர் அனுபவம்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்