Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொப்புடை நாயகி அம்மன்

*வெயில் உகந்த அம்மன், மேலப்பாறைக்குளம்

வெயில் உகந்த அம்மன் கோயில் மேலப்பாறைக்குளம், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அம்மன் கோயிலாகும். அம்மன் மீது சூரியனின் வெயில் படுவதால் வெயில் உகந்த அம்மன் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் கண்மாயின் கரையில் அமைந்துள்ளதால், காலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் மறையும்போதும் அம்மன் மீது வெயில்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் மேலரத வீதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இங்கு உள்ளன.

*கொப்புடை நாயகி அம்மன்

காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அம்மன் கோயில். இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அமைக்கப்பட்டுள்ளார். இத்தலமானது பழமை வாய்ந்தது. காரைக்குடியின் புறநகரப் பகுதியாக தற்போது இருக்கும் செஞ்சை என்ற இடம் முன்பு காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த செஞ்ச காட்டுப் பகுதியில் காட்டம்மன் கோயில் உள்ளது. காட்டம்மனும் கொப்புடையம்மனும் சகோதரிகள் ஆவர். காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன். கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை எனவும் காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தன் மூத்த தமக்கையின் பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டைமுதலான உணவுப் பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்குக் கொடுக்க எடுத்து வருவாரென்றும் காட்டம்மன் மலடியான தன் தங்கை தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாரென்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளைக் கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்றும் இக்கோயிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.

*கண்ணாத்தாள் கோயில்

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன் கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹாசக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள். குழந்தை இல்லாதவர்கள் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள். அம்மனின் அருளால் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கிறது. கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள். அங்கே கோடைத் திருவிழாவாக வைகாசி மாதம் 10 நாட்கள் பெருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அபிஷேகம், அம்மன் வீதி உலா என்று கோலாகலமாக இருக்கும். எட்டாம் நாள் வெள்ளித்தேர் பிரசித்தி. இத்திருவிழாவுக்கு சென்று வருபவர்கள் பலாப் பழம், பனை ஓலைப்பெட்டி போன்ற பொருட்களை வாங்கி வருவர்.

*சோழவந்தான் ஜனக மாரியம்மன்

ஜனக மாரியம்மன் கோயில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில். இக்கோயில் கருவறையில் சந்தன மாரியம்மன் நின்ற நிலையிலும், ஜனக மாரியம்மன் அமர்ந்த நிலையிலும் காட்சியளிக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார். ஜெனகை மாரியம்மன் குடிகொண்டுள்ள இந்த ஊர் ராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் ஜெனகபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. மேலும் மாரியம்மனுக்கு ஜெனகை மாரியம்மன் எனப்பெயர் சூட்டப்பட்டது. இக்கோயில் தல விருட்சம் வேப்பமரம் மற்றும் அரசமரம் ஆகும். ஆண்டுதோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். வைகாசித்திரு

விழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னிசட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக் கடன்கள் பக்தர்கள் செலுத்துவர். 17ஆம் நாள் இரவு 7 மணி முதல் விடிய விடிய வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும்.