Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமைதியும் ஆனந்தமும் அருளும் கீழையூர் கீழரங்கன்

நாகப்பட்டினத்திலிருந்து திருத் துறைப்பூண்டி செல்லும் பேருந்து சாலையில், சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் கீழையூர் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கீழையூர் கீழரங்கம் என்பார்கள். இது தொடர்பான புராண வரலாற்றை பார்ப்போம் வாருங்கள்.

மாக்கண்டேய மகரிஷி இன்றைய கீழையூர் கீழரங்கம் எனும் தலத்தை அடைந்தார். புறவுலகை முற்றிலும் இழந்து வேறொரு நிலையில் கிடந்தார். இப்போது ஆற்றருகே நடந்தான் கோபாலன். புல்லாங்குழலை உதட்டோரம் வைத்து மெல்லியதாக இசைத்தான். கண்ணனின் மந்தகாசப் புன்னகையும், சுடர்விட்டு ஒளிரும் வதனத் திருமுகமும் அவரை நெகிழ்த்தியது. எம்பெருமான் மெல்ல வளர்ந்தார்.

காவிரி தாண்டி அலைகடலாடும் வங்கக்கடற்கரையோரம் ஒய்யாரமாக கிடந்த கோலத்தில் திருவரங்கனாக திருக்காட்சி அளித்தார். வங்கக் கடலோரம் பாற்கடல் பரந்தாமனாக கிடந்ததைக் கண்டவர், எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாது, திசை புரியாது அரங்கனாக திருக்கண் வளர்ந்த தலம் நோக்கி ஓடினார். அந்த ஒய்யாரக் கோலம் பார்த்து தன்வயமிழந்தார். அழகிய பாக்கள் பேரலையாக அவர் நாவில் புரண்டு எழுந்தன. தான் கண்ட அற்புத அனுபவத்தை சமஸ்கிருத ஸ்லோகங்களாக மொழிந்தார். ‘‘அம்ருத ரஸஜரீனாம்....’’ என்று தொடங்கும் ஸ்லோகத்தின் பொருள் உயர்வானது.

இந்த பூர்வரங்க ஷேத்ரத்தில் சேஷசயன ரங்கனைப் பார்க்கும்போது, மேருமலையை கடைந்ததால் வெளிப்பட்ட அமிர்தம் என் கைகளில் வந்தமர்ந்ததைப் போலுள்ளது என்று மேனிசிலிர்க்கப் பாடினார். ‘‘பூர்வரங்கே ஸயானம்’’ என்று முடித்திருக்கிறார். உலகத்தில் பூர்வபாகம் எனும் வங்காளவிரிகுடாவிற்கு அருகில் இருப்பதை மார்க்கண்டேயர் இப்பாடலில் குறிப்பிடுகிறார். இன்னும் பலநூறு ஸ்லோகங்களால் இந்த அரங்கனை மங்களாசாஸனம் செய்தார். அங்கேயே அமர்ந்தார். யுகம்தோறும் தாங்கள் இங்கிருந்து அருள்வெள்ளம் பெருக்க வேண்டுமென பிரார்த்தித்தார். மார்க்கண்டேயனின் மட்டற்ற பக்தியால் தம்மையும் இத்தலத்தில் நிறுத்திக் கொண்டார். பிராகாசிக்கிறார்.

இப்பேர்ப்பட்ட மகரிஷி தரிசித்த அரங்கனை நாமும் தரிசிக்கலாம். பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்று ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீரங்கம், வடரங்கம், ஆதிரங்கம், மேலரங்கம்,

கீழரங்கம் போன்றவை ஆகும்.

பஞ்சரங்கத்தில் தென்அரங்கம் என்பது ஸ்ரீரங்கம் ஆகும். அதுபோல இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று. கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். ஸ்ரீரங்கத்தின் அபிமான தலம் இது. அமைதி தவழும் அழகிய கிராமம். மூன்று நிலை அடுக்குள்ள ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. சிறியதுமல்லாது பெரியதுமல்லாது பழமையான ஆலயம். மிக நீண்ட, உயரமான திருமதில் சூழ்ந்திருக்க மையத்தே மிளிர்ந்திருக்கிறது இந்த ஆலயம். மாடக்கோயில்போல சற்று மேடுயர்த்திக் கட்டியிருக்கிறார்கள். சோழர்காலத் திருப்பணியை அதிகம் கொண்ட ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. இவ்வூரிலேயே பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது பூஜித்த சிவன்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இதையும் தரிசித்து வரலாம்.

துவஜஸ்தம்பம் தாண்டி நேராக மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக் கிரகம் என்று வரிசையாக அமைந்துள்ளன. மார்க்கண்டேய மகரிஷியை மனதிற்குள் நினைத்த வண்ணம் ஆவலோடு கருவறை நெருங்குகிறோம். அருகே நகரும்போதே பேரலை வீசினாலும் கடலின் மத்தியில் மையமிட்டுள்ள பேரமைதிபோல ஓருணர்வு நம்மைச் சூழ்கிறது.

பெருமாள் சந்நதி சுமார் 15 அடி உயரத்தில் திருவெண்ணாழி பிரகாரத்துடன் கூடியதாக உள்ளது. அரங்கன் மார்க்கண்டேய மகரிஷிக்குக் காட்டிய கோலம் கம்பீரமும், அமைதியும் கலந்த யோகியைப் போலுள்ளது.

அவர் கிடந்த கோலத்தின் பிரமாண்டம் பிரமிப்பை அளிக்கிறது. மார்க்கண்டேயரின் யோக தவத்தை முன்னிறுத்தி, உலகம் அனைத்தும் தமக்குள் தேக்கி யோக சயனத்தில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டருளுகிறார். வளைந்தெழும் ஆதிசேஷன் குடையாக கவிழ்ந்திருக்கிறான். ‘‘குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி’’ என்பதுபோல மேற்கே திருமுடியையும், கிழக்கே திருவடியையும், வடக்கே பின்புறமாக தெற்கு நோக்கி சேவைசாதிக்கும் அழகுபார்க்க ஆயிரம் ஜென்மம் புண்ணியம் புரிந்திருக்க வேண்டும்.

அருகேயே மார்க்கண்டேயரும் முகம் முழுதும் பரந்திருக்கும் பேரின்பத்தோடு சேவை சாதிக்கிறார். இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதே காம்பினின்று உதிரும் மலர்போல மனம் தன்னை விடுவித்துக்கொள்ளும் மாயம் நிகழ்கிறது. அழைத்த குரலுக்கு வருவான் ஆயர்பிள்ளை என்பதுபோல முதலில் கோபாலனாக மகரிஷிக்கு தரிசனம் கொடுத்தார். அதனாலேயே இங்கு உத்ஸவமூர்த்திக்கு ஆயனார் என்று திருநாமம். மூலவருக்கு முன்பு ஆயனாரும் நின்றருள்கிறார். உத்ஸவத் தாயாரின் திருநாமம் அதிரூபவல்லித்தாயார் என்பதாகும்.

மகாமண்டபத்தை தாண்டி வரும்போது வலப்புறம் தாயார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம் ரங்கநாயகி. இக்கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். திருமணங்குடியில் இப்போது சிறு மண்டபம் போன்றுதான் அவ்விடம் காணப்படுகிறது. எனவே திருமணம் கைகூடுவதற்காக பலபேர் வேண்டிக்கொண்டு வருகிறார்கள். ரங்கநாயகி அதிரூபவல்லியாக பேரழியாக இங்கு ஜொலிக்கிறாள். ரங்கநாதரின் யோக சயனத்தை கண்ட பிரமிப்பு அவளையும் சாந்தமாக்கியதுபோலும், தாயாரும் தவக்கோலம்போல் பேரமைதியில் முகிழ்த்திருக்கிறாள்.

எல்லாம் நாராயணன் செயல் என்று சரணாகத்தை போதிக்கும் விதமாக அமர்ந்திருக்கிறாள். இத்தலமே ஒரு தவக்குகையை நினைவுபடுத்துவது போலுள்ளது. தாயார் சந்நதிக்கு முன்னுள்ள பால ஆஞ்சநேயரின் பக்தியில் நெக்குருகி, பிராகாரத்தை வலம் வருகிறோம். சற்று மேடாக உள்ளது. இடது புறமாக ஓரத்தில் தாயாரின் சந்நதியைப் போலவே மூன்றடுக்கு சிறிய விமானத்துடன் ஆண்டாளின் சந்நதி அமைந்துள்ளது. இங்குதான் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. தாமரை பூத்துக்குலுங்கும் தடாகம் மனதை சட்டென்று பூக்கூடையாக மாற்றுகிறது.

எப்போதும் இதமான காற்றும், தாயாரே தவம் செய்த தடாகமாதலால் கண நேரத்தில் மனம் ஒருமையாகிறது. கோயில், மூர்த்தம், தீர்த்தம் மூன்றும் புண்ணியமென்பர். அது இங்கு நிதர்சனம். தென்மேற்கே ஸ்வாமி தேசிகன் சந்நதியும் மண்டபத்தோடு அமைந்துள்ளது. காற்றோடு காற்றாக மனம் அலைய அருள்பொங்கும் ஊற்றாக நிமிர்ந்த கொடிமரத்தின் கீழ் படர்ந்து வணங்குகிறோம். தடாகத் தாமரையாக இதயம் மணந்து மலர்வதை இதமாக உணரலாம்.