திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது நடைபெறும் தீபத்தன்று மிகப்பெரும் ரகசியம் ஒன்று அடங்கியிருக்கிறது.மலைமீது எரிந்து கொண்டிருக்கும் தீப விளக்குக்கு முன்பாக திரை ஒன்று காட்டப்பட்டு, அதனை நோக்கி வரும் ஆகாய பாணம் ஆத்மாவை மூடிக் கொண்டிருக்கும் ஆசை என்னும் அந்த திரையை, யோக அக்னியால் எரித்து, அந்த ஆத்மாவானது தூய்மையடைந்து மலைமீதுள்ள பரப் பிரம்மம் என்னும் விளக்கில் சேர்ந்து ஐக்கியமாகிவிடும் என்பதைக் காட்டுவதற்காகவே திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை இன்னும் சற்று விளக்கமாக காண்போம். அதாவது மலைமீது எரிந்துக் கொண்டிருக்கும் தீபம் தான் எங்கும் பிரகாசமாய்…. பரிபூரணமாய் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம். இந்த பரப்பிரம்மமாகிய இறைவனிடத்திலிருந்து புறப்பட்டு வரும் சிறு ஆத்மாவானது, மாயையுடன் சேர்ந்து காணப்படுவதால் இந்த ஆத்மா ஆகாய பாணமாய் காட்டப்படுகிறது.இந்த ஆத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் (அதாவது) இறைவனுக்கும் ஜீவனுக்கும் இடையில்) ஆசை என்கிற திரை இருக்கிறது. இந்த ஆசை என்னும் திரையை மலைமீது எரிந்துக் கொண்டிருக்கும் தீபத்திற்கு முன்பாக மறைப்பு போல் காட்டி…
ஆத்மாவை மூடிக் கொண்டிருந்த அந்த திரையை யோக அக்னியால் கொளுத்தி விட்டால், அந்த ஆத்மாவானது மிகவும் புனிதமாகிவிடும். இந்த தூய்மையான ஆத்மாதான் பாணம். இது மலைமீது இருக்கும் விளக்கில் போய் சேர்ந்து அந்த விளக்கிலேயே ஐக்கியமாகி விடுகிறது.மலைமீது எரிந்துக் கொண்டிருக்கும் விளக்கு தீபம் தான் பரப்பிரம்மம். (ஈசன் அதாவது இறைவன்) ஆகாச பாணம் தான் விளக்கை மறைந்திருக்கும் மாயை (திரை அல்லது மறைப்பு அல்லது படுதா)அந்த மாயை என்னும் திரையை நீக்கி விலக்கி விட்டால், அதன் பின்னர் பாணரூபமாய் இருக்கும் பரப்பிரம்மத்தில் ஆத்மா போய் சேர்ந்து விடுகிறது. இப்படி சேர்ந்து விடுவதே மோட்சம் எனப்படும்.
சுருக்கமாக சொல்வதென்றால், ‘‘ஜீவனானது எப்பொழுது புனிதமாகிறதோ, அப்போதே அது தன் சொந்த இருப்பிடமாகிய பரம் பொருளிடத்தில் (பரப்பிரம்மத்தில்) போய் சேர்ந்து விடும்’’ என்கிற தத்துவ ரகசியத்தைதான் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று காட்டுகிறார்கள்.
கானமஞ்சரி சம்பத்குமார்

