‘`கஜேந்திரனுக்கு மோட்சம் அருளியவன்,
கதியெனப் பாதம் பணிந்தோர்க்கு வரம் அருளுபவன்,
மாதவம் புரிந்தோர் வாழ்வில் ஏற்றம் தருபவன்,
மாதவரம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாளே!,
உன் கடை கண் அருளால்’’
சைவ, வைணவம் போற்றிய பல்லவர்கள், அக்கால அரசர்கள் தாங்கள் அபிமான பக்திகொண்ட தெய்வத்தின் மீது கோயில்கள் எழுப்பி, தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, இன்றுவரை அமர வாழ்வு; வாழ்ந்துவருகின்றனர். அவ்வாறு சென்னை மாதவரத்தில் சைவ வைணவத்தைய போற்றும் விதமாக ``ஸ்ரீ கரி வரதராஜப் பெருமாள்’’ கோயிலிலும், சிவன் ஆலயமும் அருகருகே அமைந்துள்ளது. பொதுவாக சிவா விஷ்ணுகோயில் என்பது ஒரே இடத்தில் இருக்கும். ஆனால் மாதவரத்தில், ஒரு புறத்தில் சிவன்கோயிலும், மற்றொரு புறத்தில் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோயிலும் அருகருகே அமைந்துள்ளது.
ஸ்ரீ கரிவரத பெருமாள் கோயில்:
இக்கோயில்கள், 1500 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்டதாகத் தலவரலாறு செப்புகின்றது. இவ்வாலயம் சென்று வணங்கினால், வினைகள் தீரும் என்பது கண்கூடு. இங்கு கரிவரதன் எப்படி எழுந்தருளினார். இவரின் பெருமை என்ன? என்பதனை இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம். முக்காலத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தமிழ்நாட்டை ஆண்டனர். கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தொண்டை மண்டலம் காஞ்சிபுரத்தை தலைநகராககொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்தனர். இக்காலம், கலைகளின் பொற்காலம் என்று வரலாற்றில் பொன்னேடாகப் பொறிக்கப்பட்டுள்ளது. காலம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. முக்கால பல்லவர்கள் - பிராக்கிருதமொழியை அறிந்தவர்கள்.
2. இடைக்கால பல்லவர்கள் - சமஸ்கிருதம் மொழியைப் பயின்றவர்கள்.
3. பிற்காலப் பல்லவர்கள் - கிரந்த தமிழ் மொழியைக் கற்றிருந்தனர்.
இரண்டாம் நந்திவர்மன்
இரண்டாம் நந்திவர்மன் பிற்காலப்பல்லவர் ஆவார். பரமேஸ்வரவர்மன் இறந்துவிட, அவருக்கு பின் அடுத்தவர் ஆட்சிக்கு வரவேண்டும். இவரின் மகன் விசித்திரமாயன் தகுதியற்றவனாக இருந்தமையால்; மக்களே தங்களுக்கு வேண்டிய அரசைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். அதனால், சிம்ம விஷ்ணுவின் உடன் பிறந்தவரான பீஷ்மவர்மனின் வழிவந்த இரணியவர்மன் என்பவரை தேர்வு செய்தனர். ஆனால், அவர் பதவி ஏற்க விரும்பவில்லை. அரசபதவி வேண்டாம் என மறுத்தமையால், 13 வயதான இளவரசன் இரண்டாம் நந்திவர்மனை அரியணையில் அமர்த்தினர். கல்வி, கேள்வி, போர்க்கலைகளில் வல்லவராகவும், பக்தி தொண்டு உள்ளம் நிறைந்தவராக விளங்கினார்,
இரண்டாம் நந்திவர்மர் திருமணம்
இராஷ்டக்கூடர் ஆதரவுடன் போர்களில் வெற்றிபெற்று, ரேவா இளவரசியை திருமணம் செய்துகொண்டார். தீவிர வைணவ பக்தராக திகழ்ந்தார். திருமாலின் மீதுகொண்ட மாறாத பக்தியால்
காஞ்சியில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டினார்.
வடக்கு நோக்கி போர்
ஒருமுறை, வடக்கு நோக்கி திருப்பதிக்கு போர் செய்வதற்காகக் கிளம்பிய பொழுது, மாதவரத்தில் கூடாரம் அமைத்து தங்கினார்.
கோயிலைக் கட்டியது யார்?
பல்லவ மன்னன் போருக்குச் செல்லும் முன், வரதராஜப் பெருமாளை மனமார நினைத்து வேண்டிக் கொண்டார். போரில் வெற்றி பெற்றுத்திரும்பும் பொழுது, மீண்டும் மாதவரத்தில் தங்கினார். அங்கு அவருக்கு வரதராஜர் கனவில் காட்சி கொடுத்தார். காட்சி கொடுத்த எம்பெருமானுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பதற்காக இக்கோயிலை எழுப்பி வெங்கடேச வரதப் பெருமாளை பிரதிஷ்டைச் செய்தார். செவிவழித்கதைகளாக தலபுராணமாக உள்ளது. இது நம்பகத்தன்மையுள்ளதகவலாகவும் காணப்படுகிறது. வேங்கடேசன் போலவே இடகரத்தை “கடிக அஸ்தம்” காண்பித்து பக்தர்களை ஆட்கொண்டதால், ``ஸ்ரீ வேங்கடவரதன்’’ என்ற பெயரும் பெற்றார்.
தேன் உண்ட பெருமாள்
ஒரு முறை, அர்ச்சகர் அபிஷேகத்திற்காக தேனை பெருமாள் அருகே மறந்து உத்தரணி (சிறு கரண்டி) கொண்டு செல்லும் பொழுது எம்பெருமான் மனம் உகந்து அத்தேனை இதழ் வைத்து உறிஞ்சிக்குடித்தார், இதனைக் கண்டு சிலிர்த்து நின்றார். எம்பெருமான் தேனை விரும்பி நேரடியாக அருந்தியதால், இவருக்கு தேனுண்ட பெருமாள் என்ற சிறப்புப்பெயர் ஏற்பட்டது. ஹயக்ரீவருக்கு தேனாபிஷேகம் செய்து அந்த தேனை எடுத்துச் சென்று குழந்தைக்கு கொடுத்து வந்தால் கல்வி நன்றாக வரும் என்றும், பேச முடியாத குழந்தைகள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை இங்கே உண்டு.
மாதவரம் பெயர் காரணம்
சிவபெருமானும், பார்வதிதேவியும் வனத்தில் எழுந்தருளி முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அருள்பாலித்து தங்கி உள்ளனர். வியாசமுனிவர், தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில், மரங்கள் அடர்ந்தவனத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தவம் நிறைந்த இப்பூமி, புண்ணிய பூமி ஆகும். அதனால் அக்காலத்தில் ``மகாதவபுரம்’’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மகாதவபுரம் மருவி ``மாதவரம்’’ என திரிபு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
கல்வெட்டு - ஏகதீர சதுர்வேதி மங்கலம்
பல்லவ மன்னர் இரண்டாம் நந்திவர்மன், கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரால் வைணவ கோயில் நிறுவப்பட்டது. மாதவரம், அக்காலத்தில் “ஏகதீர சதுர்வேதி மங்கலம்” என்ற கல்வெட்டில் குறிப்பு காணப்படுவதால். “ஏகதீர” என்றால் நந்திவர்மன் இரண்டாவது பட்டப் பெயர்களில் ஒன்றாக உள்ளது. சதுர்வேத மங்கலம் என்பது நான்கு வேதங்கள் ஓதக் கூடிய அந்தணர்கள் வாழக்கூடிய இடமாகத் திகழ்ந்தது என எடுத்துக்கொள்ளலாம். இக்கல்வெட்டு அருகே உள்ள கைலாசநாதர் சிவன்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் தகவல் அறியப்படுகிறது. ``கரி வரதராஜன்’’ என்ற பெயரில், ``கரி’’ என்றால் யானை என்று பொருள். யானைக்கு மோட்சம் அளித்து அருள்புரிந்த வரதராஜன்.
கஜேந்திர மோட்சம் கதையுடன் தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது.
கிணற்றில் கிடைத்த உற்சவர்
ஒரு காலத்தில், இக்கோயில் வளாகம் தீயவர்களின் கூடாரமாக திகழ்ந்தது. அதன் பின்பு அங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் இணைந்து, 1984 - ஆம் ஆண்டில் கோயில் திருப்பணிகள் செய்வதற்காகக் கிணற்றில் தூர்வாரப்பட்டு, தூய்மைப்படுத்த பணியாளர்கள் இறங்கினர். அப்பொழுது கிணற்றில் உற்சவம் மூர்த்தி கிடைத்தார். அவர்தான் ``ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்’’. இத்தலத்தில் ``வரதராஜ புஷ்பரணி’’ என்னும் பெயரில் புனித தீர்த்தம் உள்ளன.
ஆனால், தலவிருஷமான ``வன்னிமரம்’’ இன்றும் உள்ளது. மேலும், இந்த ஆலயத்தில் ஸ்ரீ ஆண்டாள், பக்த ஆஞ்சநேயர், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார், லட்சுமிஹயக்ரீவர், லட்சுமிவராகர், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோருக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன. தனியாக கண்ணாடி அறையும் உள்ளன இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை தரிசிப்பவர்களுக்கு, காஞ்சி புரம் வரதராஜப் பெருமாள் தரிசித்த பலன் கிடைக்கும். அதேபோல், தொலைதூரம் செல்ல முடியாத பக்தர்கள், மாதவரம் கரிவரதராஜப் பெருமாளை தரிசித்து வழிபட்டு நற்பலனைப் பெறுகின்றனர்.
சிவன் கோயில்
மாதவரத்தின் அருகிலேயே ``அருள்மிகு கைலாசநாதர்’’ ஆலயம் உள்ளது. இந்த கோயிலும் பல்லவ மன்னர் நந்திவர்மனே கட்டியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்து, ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இங்கு கோயிலில் கல்வெட்டு உள்ளது. பல்லவ கால கலைநயம் மிக்க சிங்கத் தூண்கள் முக்கிய சான்றாக விளங்குகிறது. அதன் பின்பு, சோழர் மற்றும் விஜயநகர அரசர்கள் இந்த கோயிலை விரிவுபடுத்தி திருப்பணிகள் செய்து உள்ளனர்.
இரண்டாவது நந்திவர்மரே
சிவன் கோயிலை எழுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கால வெள்ளத்தை பார்க்கும்போது வேறுபாடு தெரிவதனால் அதற்கு முன்பாகவே மற்றொரு பல்லவ மன்னவன் கட்டியிருந்து; பிறகு இவர் இதை சீரமைத்து இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கே கல்வெட்டு காணப்படுவதால் அவ்வாறு எண்ணத் தோன்றுகிறது.
சக்கரத்தாழ்வார்
ஒரு பக்கம் சக்கரமாகவும் மற்றொரு பக்கம் நரசிம்மர் அமர்ந்து கொண்டு மக்களுக்கு நல்லருள்புரிகிறார். இவரை தொடர்ந்து 48 நாட்கள் சுற்றிவந்தால், நிம்மதி கிடைக்கும் என்று நம்புகின்றனர். சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்மருக்கு யாகம் வளர்த்து தங்கள் குறை சங்கடங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
தாயார் பெருமை
இங்குள்ள தாயார் கனகவல்லியை, ஒரு பத்து நிமிடம் உற்றுநோக்கி நம் குறைகளையெல்லாம் கூறினால், புன்சிரிப்புடன் நம்மை பார்ப்பதுபோல ஒரு நிம்மதி ஏற்படும். எனவே, நாம் முதலில்தாயார் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கி நம் குறைகளை அவரிடம் கூறிவிட்டு, அதன் பின்னர், ஸ்ரீ கரிவரதப் பெருமாளிடம் செல்வதற்கு முன்பு, தாயார் அவரிடத்தில் நம் கோரிக்கையை முன் வைத்து, நமக்காக அன்னை திருமாலிடம் வேண்டுவதாக ஐதீகம். மக்கள் குறைகளும் நீங்கி இருப்பது நிதர்சனமான உண்மை.
நீராஞ்சன தீபம்:
கேட்ட வரத்தை அருளும் பிரசித்தி பெற்றவர், நம் அன்னை. நம்பிக்கையோடு 12 வெள்ளிக்கிழமைகளில் நீராஞ்சன தீபம் ஏற்றி, வழிபடலாம். 27 விரலிமஞ்சள் நூலில் மாலையாக தொடுத்து (பூ கட்டுவது போல) அன்னைக்கு சாற்றி வழிபட்டால், எண்ணியது கிடைக்கும்.
நீராஞ்சன தீபம் ஏற்றுவது எப்படி?
வாழை இலையில் பச்சரிசியை பரப்பி அதன் மீது தேங்காயில் நெய் ஊற்றி வத்திதிரியை போட்டு விளக்கை ஏற்றினால், புத்திர பாக்கியம் பெறுவதற்கும், திருமண தடை நீங்குவதற்கும், எண்ணிய காரியங்கள் ஈடேறுவதற்கும் இந்த தீபத்தை ஏற்றி கேட்ட வரத்தை பெறுகின்றனர்.
விழாக்கள்
வைகாசி மாசம்: அஸ்த நட்சத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமர்சியாக நடைபெறும்.புரட்டாசி மாசம்: ஐந்து கருடசேவை. ராமர், சக்கரத்தாழ்வார், அனுமன், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் ஆகியோர் ஆலயத்தை வலம் வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் விழா சிறப்பாக நடைபெறும்.
தை, ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை, திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம், தமிழ் வருட பிறப்பு, போன்றவை இவ்வாலைய முக்கிய விழாக்களாகும்.
சிறப்பு
மூன்று கோபுரங்கள் உண்டு. 21 அடி உயரத்தில் சுதைச்சிற்ப ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்றகோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
ஷேத்திரம்
1. பெருமாள், 2. தாயார், 3. விமானம், 4. தீர்த்தம் 5 தல விருட்சம் இந்த ஐந்தும் உள்ள கோயில் புனித சேத்திரம் ஆகும்.
மூலவர்: ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்,
உற்சவர்: ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்,
தாயார்: கனகவல்லி தாயார்,
விமானம்: புண்ணியகோட்டி விமானம்,
தலவிருட்சம்: வன்னிமரம்,
தீர்த்தம்: வரத புஷ்கரணி.
நடை திறப்பு: காலை: 7:00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை: 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
அமைவிடம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 45கி.மீ., தூரமும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 14கி.மீ., தூரத்திலும் இக்கோயிலை அடையலாம்.

