பல்லவி
மாதவா! ஸ்ரீ கரிவரதப் பெருமாளே! உன் கடைக்கண் அருளாலே…
அருளாலே…!
சரணம்
கஜேந்திரனுக்கு மோட்சம் அருளியவனே,
கதியெனப் பாதம் பணிந்தோர்க்கு வரம் அருளுபவனே,
மாதவம் புரிந்தோர்க்கு வாழ்வில் ஏற்றம் தருபவனே,
மாதவரம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாளே,
உன் கடைக்கண் அருளாலே!…
என்னும் அருமையான பாடலை தொடங்கி, சைவ, வைணவ சமயங்களைப் போற்றிய பல்லவ அரசர்கள், தாம் பெரிதும் பக்தி கொண்ட அபிமான தெய்வங்ளுக்குக் கோயில்களை அமைத்து, தங்கள் சமயப் பற்றையும், கலைப் பண்பாட்டையும் நிலை நிறுத்தினர். அந்த வகையில், சென்னை மாதவரத்தில், அமைந்துள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயிலும், அதற்கு அருகாமையில் அமைந்துள்ள சிவன் கோயிலும் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக, ஒரே தள அமைப்பில் சிவனும், திருமாலும் எழுந்தருளி இருப்பதை நாம் காணலாம். ஆனால், மாதவரத்தின், தனிச் சிறப்பு என்னவெனில், ஒருபுறம் கைலாசநாதர் சிவன் கோயிலும், அதற்கு அருகிலேயே மற்றொருபுறம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயிலும் தனித் தனித் திருகோயில்களாக அமைந்திருப்பதாகும்.
ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில்
ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டதாகத் தல வரலாறு கூறுகின்றது. இத் தலத்திற்கு வந்து, கரிவரதராஜ பெருமாளை வழிபட்டு வணங்கினால், வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இத்தலத்தில் கரிவரதன் எப்படி எழுந்தருளினார். இவரின் பெருமை என்ன? முக்காலத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தமிழ்நாட்டை ஆண்டனர். கி.பி 3-ஆம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டு வரை, தொண்டை மண்டலத்தைத் தலைநகரமாகிய காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்தனர். பல்லவர் காலம் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய பொற்காலமாக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
பல்லவர்கள் காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்
* முற்க்காலப் பல்லவர்கள் - பிராகிருத மொழியைப் பயன்படுத்தியவர்கள்.
* இடைக்காலப் பல்லவர்கள் - சமஸ் கிருதம் மொழியைப் பயன்படுத்தியவர்கள்.
* பிற்காலப் பல்லவர்கள் - கிரந்தம், தமிழ் மொழியைப் பயன்படுத்தியவர்கள்.
இரண்டாம் நந்திவர்மன்
இரண்டாம் பரமேசுவரவர்மன் இறந்துவிட, அவருக்கு பின் அடுத்தவர் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய மகன் சித்திரமாயன் தகுதியற்றவராக இருந்தமையால், மக்களே தங்களுக்குத் தேவையான அரசரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். அதனால், சிம்மவிஷ்ணுவின் உடன்பிறந்தவரான பீமவர்மனின் பரம் பரையில் வந்து இரணியவர்மனைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இரண்யவர்மன் அரசு பதவி ஏற்க விரும்பவில்லை.
அரச பதவி வேண்டாம் என மறுத்துவிட்டு, தனது 13 வயது மகனான இளவரசர் பல்லவ மல்லனை அரியணையில் அமர்த்தினார். இளவரசர் பல்லவ மல்லன் கல்வி, கேள்வி, போர்க்கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதுடன், பக்தியும் தொண்டுள்ளம் கொண்டவராகவும் விளங்கினார். இவரே இரண்டாம் நந்திவர்மன் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில், கல்வெட்டுகளில் தமிழ் மற்றும் கிரந்தம் ஆகிய இரண்டும் சிறப்பிடம் பெற்றிருந்தன.
இரண்டாம் நந்திவர்மர் திருமணம்
இரண்டாம் நந்திவர்மன், தனது ஆட்சியை வலுப்படுத்தினார். பின்னர், ராட்ஷ்டி கூடக் மன்னரின் மகளான இளவரசி ரேவாவைத் திருமணம் செய்து கொண்டார். தீவிரமான வைணவப் பக்தராகத் திகழ்ந்தார். திருமாலின் மீது கொண்ட மாறாத பக்தியால், காஞ்சியில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டுவித்தார்.
வடக்கு நோக்கிப் போர்
ஒரு முறை வடக்கு நோக்கிப் போருக்குச் செல்ல, இரண்டாம் நந்திவர்மன் புறப்பட்டார். திருப்பதிக்குச் செல்லும் போது, வழியில் உள்ள ``மகாதவபுரம்’’ என்னும் காட்டில் தம் படைகளுடன் கூடாரம் அமைத்து தங்கினார். காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாளை மனமுருகி நினைத்து, போரில் வெற்றி பெற்று, மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார். பின்னர் போரில் வெற்றி பெற்று நாடு திரும்பிய மன்னர், தாம் முன்னர் தங்கிய அதே காட்டுப் பகுதியில் அதே இடத்தில் மீண்டும் கூடாரம் அமைத்து தனது படைகளுடன் தங்கினார். அன்று இரவு வரதராஜபெருமாள், மன்னரின் கனவில் தோன்றி, அருள்காட்சி அளித்ததாகத் தல புராணத்தில் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது.
எனவே, மன்னர் எம்பெருமானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் பொருட்டு, இவ்விடத்தில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பி, வெங்கடேச வரதராஜன் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்தார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளைப் போன்றே இத்தலத்தில் உள்ள இறைவனும், இடக்கரத்தில் “கடிகாச முத்திரை”யைக் காட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் என்ற திருநாமத்தாலும், அழைக்கப்படுகிறார்.
தேன் உண்ட பெருமாள்
ஒரு முறை அர்ச்சகர், பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதற்காகத் தேனை எடுத்துச் சென்றார். அப்பொழுது தேன் இருந்த பாத்திரத்தை எம்பெருமான் அருகில் வைத்துவிட்டு, உத்திரணி (சிறு கரண்டி) எடுத்துக் கொண்டு பெருமாள் இதழ் அருகே செல்ல முற்பட்டார். அந்த வேளையில் எம்பெருமான் மனம் உகந்து அத்தேனை இதழ் வைத்து உறிஞ்சி குடித்ததாகத் தல வரலாறு கூறுகின்றது. அர்ச்சகர் இதனைக் கண்டு, மெய்சிலிர்த்து நின்றார். இறைவனின் அருளை எண்ணி வியப்பில் ஆழ்ந்தார். இவ்வாறு எம்பெருமான் தேனை விரும்பி நேரடியாக அருந்திய, திருவிளையாடலின் காரணமாக, இத்தலத்து எம்பெருமானை “தேனுண்ட பெருமாள்” என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். இது இத்தலத்தின் தனிச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
மேலும், ஹயக்ரீவருக்குத் தேனால் அபிஷேகம் செய்து, இந்தத் தேனை எடுத்துச் சென்று குழந்தைகள் நாவில் தடவினால், கல்வியில் சிறந்து விளங்குவர் என்றும், பேச முடியாத குழந்தைகள் பேசுவார்கள் என்றும் நம்பிக்கை பக்தர்கள் இடையே நிலவுகிறது.
மாதவரம் பெயர்க் காரணம்
முற்காலத்தில், இப்பகுதி முழுவதும் மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது. சிவபெருமானும் பார்வதி தேவியும், வனத்தில் தங்கி இருந்து தவம் புரிந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அருள்பாலித்ததாகத் தல புராணம் கூறுகிறது.மேலும், வியாச முனிவர் தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் புண்ணிய பூமியை ``மகாதவபுரம்’’ என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் “மகாதவபுரம்” என்றும் அதுவும் மருவி “மாதவரம்” என்று மாறிவிட்டது.
கல்வெட்டு
பல்லவ மன்னர் இரண்டாம் நந்திவர்மன், கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரால் வைணவக் கோயில் நிறுவப்பட்டது. மாதவரம், அக்காலத்தில் “ஏகதீர சதுர்வேதி மங்கலம்” என்று அழைத்ததாகக் கல்வெட்டில் குறிப்பு காணப்படுகிறது. “ஏகதீர” என்பது இரண்டாவது நந்திவர்மன் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.
“சதுர்வேத மங்கலம்” என்பது நான்கு வேதங்கள், ஓதக்கூடிய அந்தணர்கள் வாழக்கூடிய இடத்தைக் குறிக்கும். எனவே, ஏகதீர சதுர்வேதி மங்கலம் என்பது வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்ந்த பகுதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தகவல்கள், அருகில் உள்ள கைலாசநாதர் சிவன் கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றன. “கரிவரதராஜன்” என்ற பெயரில் “கரி” என்றால் யானை என்று பொருள். யானைக்கு மோட்சம் அளித்து அருள்புரிந்த வரதராஜன். கஜேந்திர மோட்சம் கதையுடன் தொடர்புப்படுத்தி விளக்கப்படுகிறது.
கிணற்றில் கிடைத்த உற்சவர்
முன்னோரு காலத்தில், இக்கோயில் வளாகம், தீயவர்களின் கூடாரமாகத் திகழ்ந்தது. அதன் பின்னர் அப்பகுதியில் குடியிருந்த அனைவரும் ஒன்றிணைந்து, 1984ல் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில் இருந்த கிணற்றைத் தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்றது. பணியாளர்கள் கிணற்றில் இறங்கி தூய்மைப்படுத்திய போது, அதில் ஓர் உற்சவ மூர்த்தி விக்ரகம் கிடைத்தது.
அந்த உற்சவ மூர்த்தியே ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்” எனக் கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள வரதராஜ புஷ்கரணி மிகவும் புனித தீர்த்தமாகக் கருதப்பட்டது. ஆனால், இக்காலத்தில் தீர்த்தமான புஷ்கரணி இல்லை. ஆனால், தல விருட்சமான வன்னிமரம் உள்ளது. கிணறும் உண்டு. மேலும், இந்த ஆலயத்தில் ஸ்ரீ ஆண்டாள், பக்த ஆஞ்சநேயர், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயகிரீவர், லட்சுமிவராகர், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோருக்கு தனித் தனி சந்நதிகள் உள்ளன.
தனியாகக் கண்ணாடி அறையும் அமைந்துள்ளது
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு காஞ்சி புரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். ஆனால், தொலைதூரம் செல்ல முடியாத பக்தர்கள், மாதவரம் கரிவரதராஜப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, நற்பலனைப் பெறுகின்றனர்.
சிவன்கோயில்
மாதவரத்தின் அருகிலேயே அருள்மிகு கைலாசநாதர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலும் பல்லவ மன்னர் நந்திவர்மனே கட்டியிருக்க வேண்டும் என்று கருதப்படு கிறது. பல்லவ காலக் கலைநயம் மிக்க சிங்கத்தூண்கள் முக்கிய சான்றாக விளங்குகிறது. அதன் பின்பு, சோழர் மற்றும் விஜயநகர அரசர்களின் காலத்திலும் இந்த கோயில் விரிவுபடுத்தப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது நந்திவர்மரே சிவன் கோயிலை எழுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கால வெள்ளத்தைப் பார்க்கும் போது, வேறுபாடு தெரிவதால் அதற்கு முன்பாகவே மற்றொரு பல்லவ மன்னவர் கட்டி இருந்து, பிறகு இவர் இதைச் சீரமைத்து இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கே கல்வெட்டு காணப்படுவதால், இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது.
சக்கரத்தாழ்வார்
ஒரு பக்கம் சக்கரமாகும் மற்றொரு பக்கம் நரசிம்மர் அமர்ந்துகொண்டு, மக்களுக்கு நல்லருள்புரிகிறார். இவரைத் தொடர்ந்து 48 நாட்கள் பிரதட்சணமாக வலம் வந்தால், நிம்மதி கிடைக்கும் என்று நம்புகின்றனர். சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்மருக்கு யாகம் வளர்த்து தங்கள் குறை, சங்கடங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
தாயார் பெருமை
தாயார் கனகவல்லி அன்னையை நாம் ஒரு பத்து நிமிடம் உற்று நோக்கி நம் குறைகளை எல்லாம் அவரிடம் கூறினால், புன் சிரிப்புடன் நம்மைப் பார்ப்பது போல ஒரு நிம்மதி ஏற்படும். எனவே, நாம் முதலில் தாயார் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கி நம் குறைகளை அவரிடம் கூறிவிட்டு, பின்னர் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாளிடம் செல்வதற்கு முன்பு, தாயார் அவரிடத்தில் நம் கோரிக்கையை முன் வைத்து நமக்காக அன்னை, திருமால் இடம் வேண்டுவதாக ஐதீகம். மக்கள் குறைகளும் நீங்கி இருப்பது நிதர்சனமான உண்மை.
நீராஞ்சன தீபம்
கேட்ட வரத்தை அருளும் பிரசித்தி பெற்றவர் நம் அன்னை. நம்பிக்கையோடு 12 வாரங்கள் வெள்ளிக் கிழமைகளில், நீராஞ்சன தீபம் ஏற்றி, வழிபடலாம்.
நீராஞ்சன தீபம் ஏற்றுவது எப்படி?
வாழை இலையில், பச்சரிசியை பரப்பி அதன் மீது தேங்காயை உடைத்து, இருபாகங்களாக வைத்து, நெய் ஊற்றி, வத்தி திரியைப் போட்டு விளக்கை ஏற்றி, மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும், 27 வாரங்கள் விரலி மஞ்சள் கிழங்கை மஞ்சள் நூலில் மாலையாகத் தொடுத்து (பூ கட்டுவது போல) அன்னைக்குச் சாற்றி வழிபட்டால், எண்ணியது நடக்கும். புத்திர பாக்கியம் பெறுவதற்கும், திருமணத் தடை நீங்குவதற்கும், எண்ணிய காரியங்கள் ஈடேறுவதற்கும் இந்தத் தீபத்தை ஏற்றியும், அன்னைக்கு மஞ்சள் கிழங்கு மாலையைச் சாற்றியும் மக்கள் வழிபடுகின்றனர்.
விழாக்கள்
வைகாசி மாதம், அஸ்த நட்சத்திரத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமர்சியாக நடைபெறும். புரட்டாசி மாதத்தில், ஐந்து கருடசேவை நடைபெறும். ராமர், சக்கரத்தாழ்வார், அனுமன், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் ஆகியோர் ஆலயத்தை வலம் வந்து மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தை, ஆடி வெள்ளிக் கிழமை குங்குமம் அர்ச்சனை, திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி உற்சவம், பங்குனி உத்திரத் திருக்கல்யாணம், தமிழ் வருடப்பிறப்பு, போன்றவை இவ்வாலயத்தின் முக்கிய விழாக்களாகும்.
சிறப்பு
* இக்கோயிலில், மூன்று கோபுரங்கள் உண்டு.
* 21 அடி உயரத்தில் சுதைச்சிற்ப ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
ஷேத்திரம்
* பெருமாள்,
* தாயார்,
* விமானம்,
* தீர்த்தம்,
* தல விருட்சம்.
இந்த ஐந்தும் உள்ள கோயில் புனித சேத்திரம் ஆகும்.
மூலவர்: ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்,
உற்சவர்: ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்,
தாயார்: கனகவல்லித் தாயார்,
விமானம்: புண்ணியகோட்டி விமானம்,
தல விருட்சம்: வன்னி மரம்,
தீர்த்தம்: வரத புஷ்கரணி.
நடைதிறப்பு:
காலை: 7:00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை: 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
அமைவிடம்: பெரம்பூரில் இருந்து 5கி.மீ., பயணித்தால், இக்கோயிலை அடையலாம்.
பொன்முகரியன்


