Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரைக்கால் அம்மையாருக்கு முக்தியளித்த தலம்!

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நாம் ஆட்டோவில் பயணித்தோம். நாம் சென்றிருந்த சமயத்தில்தான், கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது. ஆகையால், கோபுரம் முதல் கோயிலின் உள்பிராகாரம் வரை, வண்ணமயமாக அழகாக காணப்பட்டிருந்தது. மூன்று பிராகாரங்கள் கொண்ட இக்கோயில், பல சிறப்புகளை பெற்றிருக்கிறது. படிக்க படிக்க பல ஆச்சரிமூட்டும் தகவல்கள் இந்த தொகுப்பில் இருக்கின்றன!

பெயர் காரணம்

தற்போதுள்ள திருவாலங்காடு ``ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோயிலில்’’ இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், ``பழையனூர்’’ என்னும் ஊர் இருக்கிறது. முன்னொரு காலத்தில், இவ்விடம் சுடுகாடாக இருந்ததாகவும், பழையனூரில்தான் சுவாமி வடாரண்யேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதாகவும் கூறப்படுகிறது. முற்கால சோழ மன்னர் காலத்தில், கூட்டமாக மாடுகளை மேய்த்து வந்தவரின் ஒரு மாடு மட்டும், ஆலமரத்தடியில் இருக்கும் மேட்டுப்பகுதிக்கு சென்று, தானாக தினமும் பால் சுரத்து வந்திருக்கிறது. இதனை ஒரு முறை, மாட்டின் உரிமையாளர் கவனித்துவிட, பால் சுரக்கும் இடத்தை கடப்பாரை மற்றும் மண்வெட்டியை கொண்டு தோண்டி பார்த்திருக்கிறார். அப்போது சுயம்புவாக சிவன் அங்கு இருப்பதைக் கண்டு பரவசமடைந்தார். பல ஆண்டுகளாக ஆலமரத்தடியில் சிவன் அருள்பாலித்து வந்தார். அதன் பின், ஆலமரத்தடியில், ஆலங்காட்டில், சுவாமி சுயம்புவாக தோன்றியதன் காரணமாக, இவருக்கு ``வடாரண்யேஸ்வரர்’’ என்று பெயர் ஏற்பட்டது. அதாவது ``வடம்’’ என்றால் ஆலமரத்தை குறிக்கும். ``ஆரண்யம்’’ என்றால் காடு. ஆகையால் வடாரண்யேஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.

காளி தோன்றுதல்

மேலும், சும்பன் - நிசும்பன் என்னும் இரண்டு அசுரர்கள், இப்பகுதியில் (பழையனூர்) வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு வரத்தை பெற்றிருந்தார்கள். ``தங்களின் ஒரு சொட்டு ரத்தமானதுகூட கீழே சிந்தினாலும், மீண்டும் மீண்டும் தங்களைப் போலவே பல அசுரர்கள் பிறப்பார்கள்’’ என்கின்ற விசித்திரமான வரத்தை பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக, யாராலும் தங்களை அசைக்க முடியாது என்கின்ற ஆணவத்தில் இவ்விருவரும், ரிஷிகள் மற்றும் சாத்வீக மக்களை கடுமையாக துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாது, நேராக ஈசனிடத்தில் முறையிடுகிறார்கள். அதன் பின், இரண்டு அசுரர்களை வதம் செய்ய பலரையும் அனுப்புகிறார், ஈசன். ஆனால், சும்பன் - நிசும்பனை வதம் செய்யும் போது, அவர்களின் ரத்தம் கீழே சொட்ட, மேலும்மேலும் பல அசுரர்கள் தோன்றினார்கள். இதனால் சினம் கொண்ட ஈசன், தன் மனைவியான பார்வதிதேவியை ``காளி’’ ரூபத்தில் மாற்றி, அசுரர்களை வதம் செய்ய அனுப்பினார். காளியின் தோற்றத்தை கண்டு, சும்பனும் - நிசும்பனும் அஞ்சி நடுங்கினர். இருவரையும் காளி வதம் செய்கிறாள். ரத்தம் கீழே சொட்டாமல் இருக்க, தலையினை கொய்து, ரத்தம் முழுவதையும் ஒரு கபாலத்தில் தாங்கிப் பிடிக்கிறாள். பிறகு ஆவேசம் தணியாது, ரத்தத்தை அருந்திவிடுகிறாள். இதனால், காளிக்கு அசுரர்களின் தன்மை ஏற்படுகிறது. அதன் காரணமாக, ஈசனிடத்திலேயே சண்டைக்கு செல்கிறாள், காளி.

இரு நடுவர்கள்

``இந்த உலகத்துக்கே தாய் - தந்தையாக நீங்கள்தான் செயல்படுகிறீர்கள். ஆகையால், நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டால் உலகமானது ஸ்தம்பித்துவிடும். ஆகையால் சண்டை இட்டுக் கொள்ளாது, இருவரும் நடனத்தில் வல்லவர்கள். வேண்டுமானால், நீங்கள் இருவரும் நடனப் போட்டியை வைத்துக் கொள்ளுங்கள்’’ என தேவர்கள் தெரிவிக்க, இதற்கு ஈசனும் ஒப்புக் கொள்கிறார்.`இத்தகைய பெரிய நடனப் போட்டியை நடத்த (நடுவராக இருக்க) எங்களுக்கு தகுதியில்லை. ஆகையால், ஈசனே... யார் நடுவராக இருக்க வேண்டு மென்று நீங்களே கூறுங்கள்’’ என தேவர்கள் வணங்கினர்.``முனிவர்களிலே சிறந்து விளங்கும் ``கார்கோணகர்’’ மற்றும் ``முஞ்சிகேச முனிவர்’’ ஆகிய இருவரும், நடுவர்களாக இருந்து வழிநடத்துவார்கள். அவர்களை நீங்கள் அழைத்து வாருங்கள்’’ என்று ஈசன் தெரிவிக்க, காடுகள், மலைகள் என பல இடங்களில் தேடியும் சிக்கவில்லை. சில நாட்களுக்கு பின், இரு முனிவர்களும் பழையனூரில் தியானம் செய்து வந்ததை கண்டுபிடித்தார்கள். அவர்களை சந்தித்த தேவர்கள், நடந்தவற்றை முனிவர்களிடத்தில் தெரிவித்து, அவ்விருவரையும் அழைத்துவந்தார்கள். ஆக, கார்கோணகர் மற்றும் முஞ்சிகேச முனிவர் ஆகியோர் தவம் புரிந்த இடமும் பழையனூரில்தான் என்பது சிறப்பு!

நடனப் போட்டி

ஈசனுக்கும் - காளிக்கும் போட்டி ஆரம்பமானது. ஈசன், 17 வகையான தாண்டவத்தை நடனமாக ஆடுகிறார். அதை அப்படியே காளியும் தாண்டவம் புரிகிறாள். எப்போதுமே, ஆண்களைவிட பெண்களே நாட்டியத்தில் சற்று நன்கு ஆடக்கூடியவர்கள். காளிக்கு மட்டும் விதிவிலக்காயென்ன? மிக அருமையாக நடனமாடினார். ஈசனுக்கு ஈடுகொடுத்து ஆடும் காளியை, இறைவனால் வெல்ல முடியவில்லை. காளி, மிக சிறப்பாக நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறாள். எப்படியாவது காளியை வென்றாகவேண்டும் என்று எண்ணிய இறைவன், ஈசன் நடனம் ஆடிக்கொண்டே காதில் இருக்கும் குண்டலத்தை கழற்றி வேண்டுமென்றே கீழே போடுகிறார். நடனத்தை விடாமல், அதனை எடுக்க தனது இடது பாதத்தை குண்டலத்தின் மீது வைத்து, அதனை அப்படியே பாதத்தினாலேயே எடுத்து, பாதத்தை தலைக்கு மேலே உயர்த்தி காதில் அணிகிறார். இந்த கோலமே `` ஊர்த்துவதாண்டவம்’’ என்று சொல்கிறார்கள். அதன் பின் காளியும், ஈசனைப் போலவே ஒரு பாதத்தை உயர்த்தி நடனம் ஆடும்போது, `நீங்கள் பெண்ணாக இருப்பதால், இறைவனை போல் பாதத்தை உயர்த்தி ஆடுவது என்பது பெண்ணிற்கு அழகல்ல’’ என்று தேவர்கள்கூற, காளிக்குள் இருக்கும் அசுர தன்மை கொஞ்சம் கொஞ்சமாக விலகி, மீண்டும் பெண்ணின் தன்மையை அடைகிறாள். தன் நிலையை உணருகிறாள், காளி. இதனால், ஈசன் வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இறைவன், இறைவியை வென்றதாக இவ்விடத்தின் ஐதீகம். மேலும் கார்கோணகர், முஞ்சிகேச முனிவர் ஆகிய இரண்டு முனிவர்களும், இந்த தலத்திலேயே முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், இத்தலம் முக்திஸ்தலமாகவும், காசிக்கு நிகரான தலமாகவும் பார்க்கப்படுகிறது.

அம்பாளுக்கு அருமையான தமிழ் பெயர்

இக்கோயில், சுமார் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாக இருக்கலாம் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2-ஆம் நூற்றாண்டில், முற்கால சோழர்கள், இக்கோயிலை கட்டியதாக, கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள இறைவியின் பெயர் ``வண்டார்குழலி’’ என்பதாகும். காரணம்; அம்பாளின் கூந்தலில் இயற்கையாகவே மணம் அதிகமாக இருப்பதால், அந்த மணம் வீசும் கூந்தலில், பல தேனீக்கள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் இடுமாம். ஆகையால், வண்டார்குழலி என பெயர் பெற்றாள். இப்பெயரை இன்னும் விரிவாக பார்தோமேயானால், வண்டார்குழலி என்பதைப் பிரித்து பொருள் பார்க்கும் போது, வண்டு + ஆர் + குழலி.வண்டு என்பது - தேனீக்களையும்,ஆர் என்பது - நிரம்பிய (அ) நிறைந்த என்பதனையும், குழலி என்பது - கூந்தல் உடையவள் (பெண்) என்பதனையும் பிரித்து பொருள் உணரலாம். அதாவது, வண்டுகள் சூழ்ந்து மொய்க்கும் அளவிற்கு, மணமும் அழகும் கொண்ட கூந்தல் உடையவள் என்பது இதன் முழு விளக்கமாகும்.

(இன்னும் பார்ப்போம்...)