Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு என்பது திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படும் முக்கியமான நிகழ்வாகும். கணவனும் மனைவியும் இல்லற தர்மங்களைக் கடைப்பிடித்து, மனமொத்த தம்பதியராக வாழ வேண்டும். குடும்பத் தலைவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். மனைவி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிற வகையில் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு. மாசியும், பங்குனியும் சேரும் நாளில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

கார் என்றால் இருள். இருள் சூழ்ந்திருக்கும் எமப்பட்டினத்தை அடையாதவன் கார் - அடையான். இந்த விரதத்தை சுமங்கலிகள் அனுஷ்டித்தால் அவர்களுடைய கணவன்மார்கள் எமப்பட்டினத்தை அடையார் என்பதே இந்த நோன்பின் பெயர்க்காரணமாகும். இந்த நாளில் காமாட்சி அம்மன் படம் அல்லது மகாலட்சுமி படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய், பூ, மாலை ரவிக்கை துண்டு சுற்றி வைக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு அம்மனை வழிபட்டு, தூப தீபம் நிவேதனம் காட்டி விரதத்தை முடிப்பார்கள். பின்னர் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பு. உப்பு அடையும், வெல்ல அடையும் செய்து, ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம்தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்கும் வழக்கமும் உண்டு. அவரவர் குடும்ப வழக்கத்தைப் பின்பற்றலாம்..

சாவித்திரி தேவி காட்டில் விரதமிருக்கையில் கார் அரிசியில் காராமணிப் பயறு சேர்த்து வெண்ணெய் கலந்து தயாரித்த வெல்ல அடை மற்றும் கார அடைகளை நிவேதனம் செய்ததின் நினைவாக, இன்றும் கார அடையும் வெல்ல அடையும் நிவேதனம் செய்யப்படுகிறது. நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி முடிந்ததும், மஞ்சள் சரடை மாங்கல்ய சரடுடன் அணிந்து கணவரை நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் மாமனார் - மாமியாரை நமஸ்கரித்து கணவருக்கும் மாமனார் மாமியாருக்கும் காரடைகளைப் பிரசாதமாக அளிக்க வேண்டும். வீட்டிலுள்ள மற்ற பெரியோர்களை நமஸ்கரித்தபின் சுமங்கலிப் பெண்கள் காரடை உண்டு நோன்பை முடிக்க வேண்டும். சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.