Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செல்வம் செழிக்கச் செய்வாள் கமல யோகினி

எல்லா செல்வங்களையும் அருளக்கூடிய யோகினியாக இந்த யோகினி கூறப்படுகிறாள். இந்த யோகினியின் அருளால் ஒரு மனிதன் அனைத்து செல்வங்களையும் அடைய முடியும் என்று தந்திர சாஸ்திர நூல்கள் சொல்கிறது.ஒரு பெரும் செல்வந்தன் இருந்தானாம். அவனை தீய கிரகங்கள் பிடித்து ஆட்டும் போது, அவனை விட்டு அஷ்ட லக்ஷ்மிகளும் நீங்கக்கூடிய நேரம் வந்தது. இருப்பினும் அவனிடம் நல்ல குணங்கள் அளவிட முடியாமல் இருந்ததால், லட்சுமி தேவி, அஷ்ட லட்சுமிகளில் ஒரு லட்சுமி மட்டும் அவனிடம் இருப்பாள். மற்ற லட்சுமிகள் சென்றுவிடுவார்கள். ஆனால் எந்த லட்சுமி அவனிடம் தங்க வேண்டும் என்பதை அவனே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று ஒரு வரம் தந்தாள்.

அதன்படி அந்த செல்வந்தன், தைரிய லட்சுமி தன்னோடு இருந்தால் போதும் என்று வரம் கேட்டான். அவனிடம் காரணத்தை மற்ற லட்சுமிகள் வினவியபோது, எல்லா செல்வங்களையும் இழந்தாலும் ஒரு மனிதன் தனது தைரியத்தை தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால், அவன் இழந்த அனைத்து செல்வத்தையும் அடையலாம் என்று சொன்னான். அந்த வகையில், அனைத்து செல்வத்தையும் கொடுத்து, செல்வத்தை இழந்தால் அதை மீண்டும் சம்பாதித்துக் கொள்ளத் தேவையான தைரியத்தை கொடுப்பவள் இந்த யோகினி.

பத்ம நிதியும் கமல யோகினியும்

பத்மநிதி என்பது, ஒன்பது விதமான செல்வங்கள் என்று அழைக்கப்படும் நவ நிதிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த ஒன்பது செல்வங்களில் அல்லது நிதிகளில் முக்கியமானதாக கருதப்படுவது, சங்க நிதியும் பத்ம நிதியும். பத்ம நிதியை அடையும் நபர்கள் போரில் சிறந்த திறமை, வீரத்திறன் பெறுவதோடு, அனைத்து மனிதர்களின் செல்வத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெறுவார்கள். சங்கநிதி மற்றும் பத்ம நிதி ஆகிய இரு நிதிகளும் மனிதர்களுக்கு உலகியலான இன்பங்களையும், விண்ணுலக ஆனந்தத்தையும் வழங்குகின்றன.

பத்ம நிதி மூலம் கிடைக்கும் செல்வம், உலகியலான சுகங்களை அனுபவிக்க உதவுகிறது.சங்க நிதி அளிக்கும் யோக சக்திகள், பிறவியற்ற முக்தியில் இருந்து தோன்றும் ஆனந்தத்தை வழங்குகிறது.இந்த இரு நிதிகளே உண்மையில் மற்ற அனைத்து நிதிகளையும் கட்டுப்படுத்துவதால், தென் இந்தியக் கோயில்களின் வாயில்களில், சிற்ப வடிவங்களில் சங்க நிதி மற்றும் பத்ம நிதி மட்டுமே இருபுறங்களிலும் அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் நவ நிதிகளில் முக்கியமானதாக கருதப்படும் பத்மநிதியின்வடிவாக இருப்பவள் இந்த யோகினி கமல யோகினியின் தோற்றம் பத்மாசனா என்ற லலிதா சஹஸ்ர நாமத்தின் 278 நாமம் சொல்வது போல, அன்று அலர்ந்த தாமரைப்பூவில் அமர்ந்த வண்ணம் இந்த யோகினி காட்சி தருகிறாள். இந்த யோகினி அமர்ந்திருக்கும் தாமரை செக்கச் சிவந்த தாமரையாக இருக்கிறது.நான்கு திருக்கரங்களைக் கொண்டிருக்கிறாள் இந்த யோகினி. அமைதி ததும்பும் முகமும், இளமை பொங்கும் உடலும், பூரித்த தனங்களும் கொண்டு காட்சி தருகிறாள் இந்த யோகினி. உதிக்கின்ற செங்கதிரின் செம்மை நிறம் கொண்டவளாக இந்த யோகினி காட்சி தருகிறாள்.

கையில் தாமரை ஏன்?

இந்த யோகினியின் நான்கு கைகளில் ஒரு கையில், தாமரை மலர் ஒன்றை உயர்த்திப் பிடித்து இருக்கிறாள். இந்த தாமரை வெற்றியின் சின்னமாகவும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. தனது அடியவர்களுக்கு, இந்த யோகினி, அதை வாரி வாரி வழங்குகிறார் என்பதை இது காட்டுகிறது. ஆழ்ந்து கவனித்தால் இதில் இன்னொரு தத்துவம் இருப்பது தெரியும். மனிதனின் நாபிக்கு ஒரு அங்குலத்துக்கு மேல், இதயத்தின் அருகில் சூட்சுமமான தாமரைப்பூ வடிவில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்று சொல்வார்கள். இதற்கு தகராகாசம் என்று பெயர். இங்குதான் மனிதனின் ஆன்மா இருக்கிறது என்று உபநிஷத்களும் வேதங்களும் சொல்கிறது. இப்படி தாமரை வடிவில் இருக்கும் இதய கமலத்தில் இருக்கும் இறைவனை உணர்த்தவே இந்த யோகினி தனது கையில் தாமரையை தாங்குகிறாள் என்றும் கொள்ளலாம்.

யோக சாஸ்திரத்தின் முதுகுத் தண்டில், ஆறு ஆதார சக்கரங்களும், அதன் உச்சியில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ வடிவில் சஹஸ்ரார சக்கரமும் இருக்கிறது. ஒரு மனிதன் யோக சாதனையில் முன்னேறும்போது, மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி ஆனது மெல்ல எழுந்து, ஒவ்வொரு யோக சக்கரத்தையும் கடந்து, சஹஸ்ரார சக்கரத்தை அடைகிறது. அங்கே இறைவனோடு இரண்டறக் கலந்து ஆனந்தத்தில் திளைக்கிறது. இந்த யோக சக்கரங்களைக் குறிக்கும் வகையில் இந்த யோகினி கையில் தாமரை தாங்கி இருப்பதாக நாம் கருத வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.

கையில் இருந்து எழுத்துக்கள்தோன்றுவது ஏன்?

இந்த யோகினியின் மற்றொரு கரத்தில் இருந்து, அனைத்து எழுத்துக்களும் தோன்றுகிறது. ஆகவே சிறந்த கலை ஞானத்தையும், கவி பாடும் திறத்தையும், கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும் இந்த யோகினி தனது உபாசகனுக்கு தருகிறாள் என்பதை இது காட்டுகிறது.

அபய ஹஸ்தத்தின் பொருள்

இந்த யோகினியின் நான்கு காரணங்களில் ஒரு கரம் அபய ஹஸ்தமாக இருக்கிறது. அபாயம் என்பவருக்கு இல்லை பயம் என்பது போல இவளது கரம் காட்சி தருகிறது. தனது உபாசகர்களின் பயத்தை போக்குபவளாக இவள் இருப்பதை இது காட்டுகிறது.அபய கரத்தின் மேல் நோக்கிய விரல்கள், இந்திர லோகம் முதலிய மேலான உலகங்களின் போகங்களை அளிப்பவள் இந்த யோகினி என்று காட்டுகிறது. மெய், வாய், செவி, நாசி மற்றும் விழி எனப்படும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும் என்பதையும், அதை அடக்க உதவுபவள் இந்த யோகினி என்பதையும், ஐந்து விரல்களோடு கூடிய அபய ஹஸ்தம் காட்டுகிறது.

கமல யோகினியும் சிவப்பு நிறமும்

இந்த யோகினி செக்கச்சிவந்த தாமரையில், செக்கச்சிவந்த ஒளி அல்லத் தேஜஸோடு கூடியவளாக காட்சி தருகிறாள். இவளது தியானம், இவள் கண்கள் தாமரை, கைகள் தாமரை, கால்கள் தாமரை, உடல் தாமரை, என இந்த யோகினியின் அனைத்து அங்கங்களும் தாமரை மலரைப்போலவே இருப்பதாகச் சொல்கிறது.கருணையின் வண்ணமாக கருதப்படுவது சிவப்பு. ஆகவே, மற்றொரு மனிதனின் உயிரைக் காக்கும் மருத்துவர்களின் சின்னமாக சிவப்பு கிராஸ் இருக்கிறது. அதனால்தான் கருணையே வடிவான அம்பிகை செக்கச் சிவந்தவளாக, “சிந்தூராருண விக்ரஹாம்” என்று சொல்வதற்கு ஏற்ப, சிவப்பு நிற காந்தியோடு கூடியவளாக இருக்கிறாள்.

சிவப்பு வாழ்க்கையின் ஆற்றலைக் குறிக்கும் நிறம். இது மனித உணர்வுகளை மேம்படுத்தும், மேன்மேலும் தூண்டி உயர்வதற்கு ஊக்குவிக்கும் நிறமாகச் சொல்லப்படுகிறது. சிவப்பு நிறம் எதிர் பாலினத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இது வெப்பத்தையும், செயல்படும் திறனையும் குறிக்கிறது. சிவப்பு நிறம் கண்களை எளிதில் கவர்கிறது. வெகு தூரத்தில் இருந்தே இதைப் பார்க்க முடியும். ஆகவே, சாலைப் போக்குவரத்து சமிக்ஞையில் அபாயம் அல்லது நில் என்பதை குறிக்க சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.

ஞானம் என்னும் கனி தொலை தூரத்தில் இருக்கிறது. அதை சிவப்பு நிறத்தில் இருக்கும் அம்பிகை நமக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறாள் என்பதை இது காட்டுகிறது.இந்த நிறத்தை விரும்பும் மக்கள் தைரியமானவர்களாகவும், தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை எதிர்க்கும் துணிவுடையவர்களாகவும் இருக்கிறார்கள். தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதவர்கள், பிடிவாத குணம் உடையவர்கள், போராட்டம் ஆகியவற்றுக்கும் சிவப்பு நிறம் குறியீடாக இருக்கிறது.இப்படி இந்த யோகினியின் சிவப்பு நிறத்துக்கு பின்னே ஆயிரம் ரகசியங்கள் இருக்கிறது.

ஜி.மகேஷ்