வேதங்களும், சாஸ்திரங்களும் பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் உறைவதாக உறுதியாகக் கூறுகின்றன. மகாலட்சுமியின் பூரண அம்சமும், உறைவிடமுமே பசுதான். பசுவின் குளம்படி தூசுகள் பாவத்தையும் சேர்த்து பறக்கடிக்கும். ‘‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’’ என்று திருமூலர் வேண்டுகோள் விடுக்கிறார்.
இறைவன் எடுக்கும் எல்லா அவதாரங்களும் பசுக்களோடு அன்யோன்யமும், நெருக்கமும் கொண்டிருப்பதை புராணங்கள் வாயிலாகக் காணலாம். மேலும், இன்று நாம் வணங்கும் பெரிய தலங்கள் மற்றும் சிறிய கோயில்களில் உறையும் தெய்வங்களை ஆதிநாட்களில் பசுக்கள்தான் கண்டறிந்தன.
பசுக்களே அனுதினமும் பூசித்து மகிழ்ந்த கோயில்களும் பசுவின் பெயராலேயே ஈசன் விளங்கும் ஆலயங்களும் நிறைய உள்ளன. அவை பசுபதீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலன்று நாம் ஆவினங்களை தொழுவது மட்டுமல்லாது மற்ற நாட்களிலெல்லாம் கூட பசுக்கள் பூஜித்த தலங்களுக்குச் சென்று பசுக்களின் பக்தி நெறியினையும், அது காட்டும் மார்க்கத்தையும் அறிந்து கொள்வது
அவசியமாகிறது.
பசுவின் திருமுகமே தெய்வீகத்தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீர் வெளியேறும் நீரைப் பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுகத் தாமரை அத்தனை பவித்ரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர். பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப்போன்ற அமைப்பில் வைத்திருப்பர். பாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
தஞ்சாவூர் - திருவையாற்றை சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடைய தலங்களாகும். திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் போன்ற இந்த ஏழு ஊர்களுக்கும் நந்தியம்பெருமானின் திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும், அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவர்.
பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால் கோமுக்தீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் அருள்கிறார். கரூர் எனும் தலம் காமதேனுவால் பூசிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப்படுகிறார். கும்பகோணம் -திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார்.
தஞ்சாவூர் - அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதிகோயில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆகும். தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை எனும் தலம் காமதேனுவால் பூசிக்கப்பட்டு இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்
படுகிறார்.
அஷ்ட மங்கலச் சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபத்தை வைத்துள்ளனர். முக்கிய ஹோமங்களில் யாக குண்டலத்தைச் சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.
மாடுகளை கட்டும் மந்தைக்கு பட்டி என்று பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களுக்குப் பின்னால் பட்டி என்று சேர்த்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் எனும் தலத்தில் தேனுபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்கிறார். இது காமதேனுவால் பூசிக்கப்பட்டதாகும்
ஜெயசெல்வி


