ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் காலபைரவர்
12-11-2025- காலபைரவாஷ்டமி
கால பைரவாஷ்டமி
பெருமாளுக்கு உரிய அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். துர்க்கைக்கு உரிய அஷ்டமி திதியை துர்காஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். அதுபோல் சிவ பெருமானுக்கு உரிய அஷ்டமி திதியை கால பைரவ அஷ்டமி என்று மிகச் சிறப்பாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவது சாலச் சிறந்த நன்மையைத் தரும் . இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமன வேளையில் பைரவரையும் சென்று வழிபட வேண்டும். அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி தரிசனம் செய்வதன் மூலமாக நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண்டாகும். சுபகாரியத் தடைகள் தூள் தூளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும்.
கால பைரவர்
சிவபெருமான் உருவத்திலும், அருவத்திலும்,அருஉருவத்திலும் காட்சி தருவார். இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர். அவருடைய திருமேனி வடிவங்கள் 64 என்பர். 64 திருமேனி வடிவங்களில் ஒன்று வைரவர் எனப்படும் பைரவர். ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். கால பைரவர் ஆக உலகைக் காக்கிறார். காலாக்கினி பைரவராக உலகை பிரளய காலத்தில் ஒடுக்குகின்றார். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் திகம்பர ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமிதான் காலபைரவாஷ்டமி. சிவனுக்கு ரிஷப வாஹனம் இருப்பது போல பைரவருடைய வாகனமாக நாய் அமைந்திருக்கிறது. அதனால் நாய்களுக்கு பைரவர் என்ற பெயர் உண்டு.
எட்டு திசைகளுக்கு அஷ்ட பைரவர்கள்
அட்ட பைரவர்கள் என்பவர்கள் எண் திசைகளுக்கு ஒன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் ஆவார். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள்.
யார் யார் இந்த பைரவர்கள். அவர்கள் பெயர் என்னென்ன...
*அசிதாங்க பைரவர்
*ருரு பைரவர்
*சண்ட பைரவர்
*குரோதன பைரவர்
*உன்மத்த பைரவர்
*கபால பைரவர்
*பீக்ஷன பைரவர்
*சம்ஹார பைரவர்
சிவனுக்கு அட்ட வீரட்ட தலங்கள் உண்டு. அதைப்போல அஷ்ட பைரவ தலங்களும் தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி அருகில் உண்டு.
பைரவர்களின் திருநாமங்கள்
கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.
1. நீலகண்ட பைரவர் , 2. விசாலாக்ஷ பைரவர், 3. மார்த்தாண்ட பைரவர், 4. முண்டனப்பிரபு பைரவர், 5. ஸ்வஸ்சந்த பைரவர், 6. அதிசந்துஷ்ட பைரவர், 7. கேர பைரவர், 8. ஸம்ஹார பைரவர், 9. விஸ்வரூப பைரவர், 10. நானாரூப பைரவர்,11. பரம பைரவர், 12. தண்டகர்ண பைரவர், 13. ஸ்தாபாத்ர பைரவர், 14. சீரீட பைரவர், 15. உன்மத்த பைரவர், 16. மேகநாத பைரவர், 17. மனோவேக பைரவர் 18. க்ஷத்ர பாலக பைரவர், 19. விருபாக்ஷ பைரவர், 20. கராள பைரவர்,21. நிர்பய பைரவர், 22. ஆகர்ஷண பைரவர், 23. ப்ரேக்ஷத பைரவர், 24. லோகபால பைரவர், 25. கதாதர பைரவர், 26. வஞ்ரஹஸ்த பைரவர், 27. மகாகால பைரவர், 28. பிரகண்ட பைரவர், 29. ப்ரளய பைரவர், 30. அந்தக பைரவர், 31. பூமிகர்ப்ப பைரவர்,
வெவ்வேறு பெயர்கள்
32. பீஷ்ண பைரவர், 33. ஸம்ஹார பைரவர், 34. குலபால பைரவர், 35. ருண்டமாலா பைரவர், 36. ரத்தாங்க பைரவர், 37. பிங்களேஷ்ண பைரவர், 38. அப்ரரூப பைரவர், 39. தாரபாலன பைரவர், 40. ப்ரஜா பாலன பைரவர், 41. குல பைரவர், 42. மந்திர நாயக பைரவர், 43. ருத்ர பைரவர், 44. பிதாமஹ பைரவர், 45. விஷ்ணு பைரவர், 46. வடுகநாத பைரவர், 47. கபால பைரவர், 48. பூதவேதாள பைரவர், 49. த்ரிநேத்ர பைரவர், 50. திரிபுராந்தக பைரவர், 51. வரத பைரவர், 52. பர்வத வாகன பைரவர், 53. சசிவாகன பைரவர், 54. கபால பூஷண பைரவர், 55. ஸர்வவேத பைரவர், 56. ஈசான பைரவர், 57. ஸர்வபூத பைரவர், 58. ஸர்வ பூதபைரவர், 59. கோரநாத பைரவர், 60. பயங்க பைரவர்,61. புத்திமுக்தி பயப்த பைரவர், 62. காலாக்னி பைரவர், 63. மகாரௌத்ர பைரவர், 64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்.
பைரவர் என்ற பெயர் ஏன் வந்தது?
பைரவர் என்ற பெயர் ஏன் வந்தது என்று பார்க்க வேண்டும். பைரவர் என்கிற பெயர் பீரு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. பீரு என்றால் பீதி, அச்சம் என்று பொருள். எதிரிகளுக்கு பீதியைத் தரக்கூடியவர். ஆனால் அதே நேரம் தன்னை அண்டிய பக்தர்களுக்கு அபயம் தந்து அருள் பாலிப்பவர். மேலும் பைரவர் என்ற சொல்லுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் ஆற்றுபவர் என்ற பொருளும் இருக்கிறது. உலகத்தை எல்லாம் அழித்து, தன்னுள் ஒடுக்கிக் கொள்பவர் என்கிற பொருளும் உண்டு. இந்த முத்தொழிலையும் முறையே பரணம், ரமணம், வமனம் என்று சொன்னார்கள். பரணம் என்பது படைப்பு. ரமணம் என்பது காத்தல் .வமனம் என்பது அழித்தல். அசுர சக்திகள் வேறு எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதபடி ஓங்கி நிற்கும் போது சிவபெருமானே பைரவராக வந்து அவற்றையெல்லாம் அழித்து மக்களை காக்கிறார். வஜ்ரம்போல மக்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறார் என்பதால் அவரை வஜ்ரமூர்த்தி அல்லது வைரவ மூர்த்தி என்றும் அழைப்பதுண்டு.
பைரவ தீபம்
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் நிறைவு வழிபாடு பைரவருக்கு நடைபெறும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் கோயிலுக்கு (அதாவது சிவாலயத்தில் உள்ள பைரவர் சந்நதிக்குச் சென்று) வணங்கி வழிபாடு நடத்துவதன் மூலமாக எல்லையில்லாத நன்மைகளைப் பெறலாம். அன்று பைரவர் சந்நதியில் பிரத்தியேகமாக தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்துக்கு பைரவ தீபம் என்றே பெயர். சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். இதை முறையாக பெரியோர்களிடம் கேட்டுச் செய்ய வேண்டும். இந்த தீபத்தின் வெளிச்சத்தில் அச்சம் விலகி ஓடும் மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும் பிறகு வெற்றி தானே வந்தடையும்.
காயத்ரி மந்திரங்கள்
ஜாதகத்தில் 6ம் இடம் கெட்டுவிட்டால் பகையும் நோயும் கடனும் வளரும். எட்டாம் இடம் கெட்டுவிட்டால் ஆயுள் தோஷம் ஏற்படும். சனி - செவ்வாயின் தீய ஆதிக்கம் அந்த இடங்களுக்கு இருந்தால் வெட்டு, குத்து, என்று பயங்கரமாக இருக்கும். எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள, தினமும் பைரவர் காயத்ரி மந்திரங்களை சொல்லி வரலாம். பைரவரை முறைப்படி பக்தி சிரத்தையுடன் வணங்கி வர, தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
1. ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
2.ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
3.ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
இந்த மந்திரங்களை ஜெபிப்பதாலும், அஷ்டமியில் பைரவரை வழிபடுவதாலும் சகல கிரக தோஷங்களும் நீங்கும். தடைகள் விலகும். பொய் சொல்லுதல், அடுத்தவர் குடும்பத்தைக் கெடுத்தல், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், ஒழுக்கக் குறைவாக இருத்தல், பிறர் சொத்துக்களை அபகரிக்க நினைத்தல், முதலிய குற்றங்களோடு பைரவ வழிபாடு செய்தால், அது செய்பவர்களுக்கே வினையாக முடியும். பைரவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, பைரவ வழிபாடு என்பது எச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் செய்ய வேண்டிய வழிபாடு ஆகும்.
காலபைரவாஷ்டமி என்ன செய்ய வேண்டும்?
காலபைரவாஷ்டமி நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால் மன அழுத்தம், பயம் நீங்கி, தைரியமும் தன்னம்பிக்கையும், வீரியமும் வேகமும், உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள். சிவபெருமான் அபிஷேகப்பிரியன். பைரவர் சிவ அம்சம் என்பதால், கால பைரவருக்கு சந்தன அபிஷேகம் சிறப்பானது. உக்கிர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க சந்தனம் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்கள். கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.