Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தடைகளைத் தகர்க்கும் கால பைரவர்

பைரவர் என்றால் பயங்கரமானவர் அல்லது அச்சுறுத்து பவர் என்று பொருள். கால பைரவர், சிவபெருமானின் உக்கிர ரூபமான அவதாரம் ஆவார். உண்மையான நம்பிக்கையுடன் அவரிடம் சரணடை பவர் மிக விரைவாக மகிழ்ச்சி அடைகிறார். அவருடைய சக்திவாய்ந்த மந்திரங்களைத் தவறாமல் உச்சரிப்பது கால பைரவரின் அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்.

சிவன் மற்றும் சக்தி தேவியின் ஒவ்வொரு கோவிலிலும் கால பைரவர் நிச்சயமாக எழுந்தருளியுள்ளார். கால பைரவப் பெருமான் காசியின் அதிபதி ஆவார்.

அனைத்து ஆலயங்களில் கூட காக்கும் கடவுளாக இருக்கக் கூடியவர் கால பைரவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டுவதோடு நமக்கு காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களின் அருளையும் நம்மால் ஒருசேரப் பெறமுடியும். அப்படிப்பட்ட கால பைரவரை வழிபாடு செய்வதற்குரிய வளர்பிறை அஷ்டமி நாளில் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான வழிபாடு நம்முடைய தடைகளையும் தடங்கல்களையும் நீக்கும். சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக் கூடியவர் கால பைரவர் என்றும் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு துர்மரணங்கள் ஏற்படாது என்றும், எதிரிகளின் தொல்லை நீங்கும் போன்ற பலவிதமான நன்மைகள் உண்டாகும். மேலும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானின் குருவாக இவர் திகழ் வதால் நவகிரக தோஷத்தை நீக்கி நமக்கு நல்வழியை காட்டுவார். தேய்பிறை அஷ்டமியில் கடன் பிரச்னை தீருவதற்காக காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலம் அற்புதமான பலனை பெற முடியும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்படுகிறது.

காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்குரிய வழிபாட்டையும் வளர்பிறை அஷ்டமியில் நம்முடைய செல்வவளம் அதிகரிப்பதற்குரிய வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டும். அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை முற்றிலும் நீக்கும். செயலைச் செய்யும் பொழுதும் தடை வந்து கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் வளர்பிறை அஷ்டமியிலோ அல்லது தேய்பிறை அஷ்டமியிலோ அல்லது பைரவருக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

இந்த வழிபாட்டைச் செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக் கூடியது வெட்டிவேர் மாலை. வெற்றிகளை வாரி வழங்கக் கூடிய ஒரு வேராகத்தான் இந்த வெட்டி வேர் திகழ்கிறது. இதை மாலையாக தொடுத்து ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு சாற்ற வேண்டும். காலபைரவர் வாசனைப் பிரியர் என்று கூறப்படுவதால் வெட்டிவேருடன் சேர்த்து ஜவ்வாது, புனுகு போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதன் மூலம் காலபைரவர் மனம் மகிழ்ந்து நம்முடைய செயல்களில் இருக்கக் கூடிய தடைகளை நீக்குவார். மேலும் நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். தடைகள் நீங்கி காரியம் வெற்றிகரமாக நடைபெற்று விட்ட பிறகு கால பைரவருக்கு அபிஷேகத்திற்கான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதோடு வஸ்திரமும் வாங்கி கொடுத்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது நல்லதாகும்.

கால பைரவர் மந்திரம்

ஓம் காலகாலய வித்மஹே,

கலதிதாயே தீமஹி

தன்னோ கால பைரவ் பிரச்சோதயாத்

கால பைரவரின் மந்திரத்தை நீங்கள் தவறாமல் உச்சரித்தால், தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள், நிதிச் சிக்கல்கள் மட்டுமின்றி, பற்று, பேராசை மற்றும் மேலோட்டமான தடைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும். மேலும், உண்மையான பக்தி இருந்தால், கால பைரவர் தனது பக்தர்களுக்குத் தரிசனம் அளிக்கிறார்.