Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடன் தீர்க்கும் காகபுஜண்டர்

திருச்சி லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலய ரகசியம்

திருச்சியிலிருந்து சுமார் 20கி.மீ தொலைவில் உள்ள லால்குடி திருத்தவத்துறை (சப்தரிஷீஸ்வரர்) ஆலயம், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, இது காலச் சக்கரத்தின் ஒரு முக்கிய மையமாக, ஆன்மிகப் பெரியோர்களால் கருதப்படுகிறது.

சித்தர்களின் தலைமைப்பீடம்

இந்த ஆலயத்தின் மிக முக்கியமான ரகசியம், இங்குள்ள காகபுஜண்டர் சித்தரின் இருப்பு. பதினெண் சித்தர்களுக்கே குருவாகக் கருதப்படும் காகபுஜண்டர், இன்றும் இக்கோயிலின் ஒரு குறிப்பிட்ட தூணில் சூட்சுமமாக வசிப்பதாக நம்பப்படுகிறது.

ரகசியம்

மற்ற கோயில்களில் சித்தர்கள் தனிச் சந்நதியில் இருப்பார்கள். ஆனால் இங்கு, அவர் ஒரு தூணில் அமர்ந்து ஈசனை நோக்கியபடி தவம் செய்து கொண்டிருக்கிறார். இந்தத் தூணுக்கு அருகாமையில் நின்று மனதார வேண்டினால், தீராத கடன்சுமைகளும், மன அழுத்தங்களும் விலகும் என்பது ஐதீகம்.

ஏழு ரிஷிகளின் தவம்

இங்குள்ள ஈசனை அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரசர் ஆகிய சப்தரிஷிகளும் ஒரே இடத்தில் அமர்ந்து பூஜித்ததால் இது `சப்தரிஷீஸ்வரர்’ தலம் என்று அழைக்கப்படுகிறது.

சூட்சுமம்

இந்த ஏழு ரிஷிகளின் ஆற்றலும் இக்கோயிலின் கருவறையில் இன்றும் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவேதான், இங்கு செய்யப்படும் தியானம் மற்ற இடங்களைவிட ஏழு மடங்கு அதிக பலனைத் தரும்.

சூரியஒளியின் ரகசிய வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நேராகக் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழும்.

விசேஷம்

இந்த ஒளி விழும் போது, லிங்கத் திருமேனி ஒருவித பொன்னிற ஒளியுடன் பிரகாசிக்கும். அந்தச் சமயம் கருவறைக்கு வெளியே நின்று தரிசிப்பவர்களுக்கு `ஜோதி தரிசனம்’ கண்ட புண்ணியம் கிடைக்கும்.

சகல தோஷ நிவர்த்தி

இக்கோயிலில் உள்ள அம்பிகை `ஸ்ரீமதி’ (பெருந்திருப்பிராட்டி) என்று அழைக்கப்படுகிறாள். திருமணத் தடைகள் மற்றும் குடும்பப் பிணக்குகள் உள்ளவர்கள், அம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது பலரது அனுபவ உண்மை.

சித்தர்களின் சூட்சுமப் பாதை

இந்த ஆலயத்தின் கருவறைக்கும், காகபுஜண்டர் தவம் செய்யும் இடத்திற்கும் இடையே ஒரு `சூட்சுமப் பாதை’ இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காகபுஜண்டர் பல கோடி யுகங்களாக வாழ்ந்து வருபவர். அவர் ``காகம்’’ வடிவில் இக்கோயிலின் தல விருட்சமான வில்வ மரத்தில் அமர்ந்து இன்றும் ஈசனை வழிபடுவதாக ஒரு ஐதீகம் உண்டு.அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4:00 முதல் 5:30 வரை) இக்கோயிலில் தியானம் செய்பவர்களுக்கு, காற்றில் ஒருவித இனிய நாதம் கேட்பதாகப் பல பக்தர்கள் உணர்ந்துள்ளனர். இது சித்தர்கள் ஓதும் மந்திர ஒலி என்று சொல்லப்படுகிறது.

சப்தரிஷிகளின் ஏழு நிலைகள்

இக்கோயிலில், சப்தரிஷிகளும் தனித் தனி நிலைகளில் தவம் செய்துள்ளனர். இந்த ஏழு ரிஷிகளும் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிப்பதாக ஞானிகள் கூறுகின்றனர்.

மந்திர ரகசியம்

ஒவ்வொரு ரிஷியும் ஒரு குறிப்பிட்ட மந்திர அதிர்வை இக்கோயிலின் தூண்களில் நிலை நிறுத்தியுள்ளனர். இக்கோயிலின் பிரகாரத்தை வலம் வரும்போது, நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் வரிசையாகத் தூண்டப்பட்டு, மனத் தெளிவும் உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது. குறிப்பாக, ஜாதகத்தில் `ரிஷி தோஷம்’ இருப்பவர்கள் இங்கு வந்து ஒரு நாள் தங்கி வழிபட்டால், அவர்களின் ஏழு தலைமுறை பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

கட்டுமானத்தின் அறிவியல் அதிசயம்

இக்கோயில், சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், இதன் அடிப்படை அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது.

நிழல் விழாத அமைப்பு

கோபுரத்தின் குறிப்பிட்ட பகுதிகள் சூரியனின் நகர்வுக்கு ஏற்ப நிழலை மாற்றி அமைக்கும் விதம் பிரமிக்கத்தக்கது.

ஒலி அதிர்வு

கருவறைக்குள் ஓதப்படும் `ஓம்’ என்ற பிரணவ மந்திரம், கோயிலின் குறிப்பிட்ட நான்கு மூலைகளில் உள்ள தூண்களில் எதிரொலிக்கும் வகையில் கற்கள் செதுக்கப்பட்டுள்ளன.இது பக்தர்களின் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

திருமணம் மற்றும் சந்தான பாக்கியம்

இங்குள்ள அம்பிகை `ஸ்ரீமதி’ சந்நதியில் ஒரு விசேஷ ரகசியம் உண்டு. அம்பிகையின் பாதங்களுக்கு அடியில் ஒரு அபூர்வமான `ஸ்ரீசக்கரம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருமணத் தடை உள்ளவர்கள், ஒரு மஞ்சள் கயிற்றில் அம்பிகையின் பாதத்தில் வைத்து பூஜித்து, பின் அதைத் தங்கள் கையில் கட்டிக்கொண்டால், அடுத்த சில மாதங்களிலேயே நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. அதேபோல், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்துத் தீர்த்தத்தில் நீராடி ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், வம்சவிருத்தி ஏற்படும்.

கடன் நிவர்த்தி மற்றும் தொழில் மேன்மை

காகபுஜண்டர் சித்தர், காலத்தை வென்றவர் என்பதால், ஒருவரது ஜாதகத்தில் உள்ள `கர்ம வினைகளை’ மாற்றியமைக்கும் சக்தி அவருக்கு உண்டு. செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் இக்கோயிலுக்கு வந்து, காகபுஜண்டர் வீற்றிருக்கும் தூணுக்கு அருகே ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து, `ஓம் காக புஜண்டாய நமஹ’ என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால், தீராத கடன் சுமைகள் குறையும் என்றும், தொழிலில் இருந்த முட்டுக் கட்டைகள் விலகிப் பெரும் லாபம் கிட்டும் என்பதும் அனுபவ ரீதியான உண்மை!

ஹேமா மாலினி