Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கடக ராசியில் குரு! கனகமழை பொழிவாரா?

குரு பெயர்ச்சி : 26-5-2026

கனகமழை என்றால் பொன்மழை என்று பொருள் இதுவரையில், புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசியில் சஞ்சரித்த குரு பகவான், வைகாசி 12-ம் (26-5-2026) தேதியன்று, சந்திரனின் ராசியும், அவரது குருவின் உச்ச வீடானதுமான கடகத்திற்கு மாறுகிறார்!நவகிரகங்களில் குரு பகவானின் பெருமைகளையும், சக்திகளையும் மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன!!முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும், துறவிகளுக்கும் ஆசார்ய சீலராகப் பூஜிக்கப்படும் குரு பகவானுக்கு, "பிருஹஸ்பதி" என்ற பெருமை உண்டு!தேவர்களின் மன்னரான இந்திரனுக்கும், குரு பகவானே ஆசார்யனாவார்.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்திலும், தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளுக்கும் உரியவர் இவரே!!புனர் பூசம், விசாகம், பூரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கும், நாயகன் குரு பகவானே!

தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கும் உரியவரும் குருவே ஆவார். ஒவ்வொருவர் ஜனன கால ஜாதகத்திலும், கடகம் இவரது உச்ச ராசியாகும்.மகரம் நீச்ச வீடாகும்.

நவகிரகங்களில், சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூவரும் உங்களுக்கு நட்பு கிரகங்களாவர். புதனும் சுக்கிரனும் பகைவர்கள்.

பிறவியில் ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? அல்லது துன்பத்தில் அல்லல் படுவாரா? என்பதை குருவின் நிலையைக் கொண்டே ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்!ஜனன கால ஜாதகத்தில், குரு பகவான் சுப பலம் பெற்றிருப்பின், நல்ல தெய்வ பக்தியும், நற்குணங்களும், எதிர்காலத்தில் நல்ல பதவியும் கொண்டு திகழ்வர். களத்திர ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை அல்லது சேர்க்கை இருப்பின் நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமையப்பெறுவார் எனக் கூறுகிறது, "ஜோதிடப் பாரிஜாதம்" -எனும் மிகப் புராதன ஜோதிட நூல்!ஒருவரின் இல்வாழ்க்கை மகிழ்ச்சியும், மன நிறைவும் அமையப் பெறவேண்டுமாகில், இல்லாளைக் குறிக்கும் களத்திர ஸ்தானத்திற்கு, குரு பகவானின் சாந்நித்தியம் கிடைக்கப் பெற வேண்டும் எனக் கூறுகிறது, "காலப்பிரகாஸிகா" எனும் புராதன நூல்.

"ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நிர்ணயிப்பது, அவருக்கு அமையும் மனைவியைப் பொருத்தே உள்ளது...!" எனக் கூறுகிறார், மகா கவி காளிதாஸர்!

"நற்குணங்கள் அமையப் பெற்ற பெண், மனைவியாக அமையாவிடில், வேறொரு நரகமென்பதில்லை...!" எனக் கூறுகிறார், அந்த மகாகவி!!

ஆதலால், ஒவ்வொருவரின் ஜனன கால ஜாதகத்திலும், குரு பகவான் சுப பலம் பெற்றிருக்க வேண்டும்.

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் குருபகவானுக்கு நண்பர்கள்.

புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்களாவர்!

பார்வை பலம்...!

ஜனன கால ஜாதகத்தில், தான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்குக் குரு பகவானின் சுபப் பார்வை கிடைக்கிறது!

எவ்விதத் தோஷமானாலும், குரு பகவானின் சுபப் பார்வை அந்தத் தோஷத்தைப் போக்கிவிடுகிறது என விவரித்துள்ளது, "பிருஹத் ஜாதகம்" எனும் பிரசித்திப் பெற்ற, பழமையான ஜோதிடக் கிரந்தம்.

ஒருவரின் வாழ்க்கை, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்குமா? அல்லது, போராட்டமாகவே அமையுமா? என்பதை ஜாதகத்தில் குருவின் நிலையைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்.

ஒருவருக்கு, நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், மனதிற்குத் திருப்தியளிக்கும் உத்தியோகம், கடனற்ற வாழ்க்கை, சொந்த வீடு ஆகிய பேறுகள் கிடைக்குமா? என்பதை ஜனன கால ஜாதகத்தில் குரு பகவானின் சஞ்சார நிலையைக் கொண்டே முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தில், சுக ஸ்தானத்திற்கு குரு பகவானின் ஆதிக்கம் கிடைக்கவில்லையென்றால், அவரது வாழ்க்கை, போராட்டமாகவே அமையும் எனக் கூறுகிறது, "ஜோதிட ரத்னாகரம்".

அந்த அளவிற்கு ஒவ்வொருவர் வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது, ஜனன கால ஜாதகத்தில் குரு பகவானின் சஞ்சார நிலை!

ஜனன கால ஜாதகத்தில், குரு பகவான் சுப பலம் பெற்றிராவிடில், வாழ்க்கையே பிரச்னையாக இருக்கும் எனவும் கூறுகிறது, அந்நூல்.

ஒவ்வொரு கிரக தோஷத்திற்கும், பலவீனத்திற்கும் ஏற்ற பரிகாரங்கள் உள்ளன.

மானிட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிர்ணயிப்பது நவகிரகங்களேயாகும்!

இவற்றில், ராகு, மற்றும் கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்களாவர்.

ஜோதிடக் கலையில் அனைத்து கிரக தோஷங்களுக்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள் உள்ளன.

இத்தகைய தெய்வீகப் பெருமைகளும், சக்தியும் கொண்டு, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் சுக - துக்கங்களை எடுத்துக்காட்டும் குரு பகவான், இந்த ஆண்டு வைகாசி 12-ம் தேதிக்கு சரியான ஆங்கிலதேதி 26-5-2026 அன்று மிதுன ராசியை விட்டு, அவரது உச்ச வீடான கடக ராசிக்கு மாறுகிறார்.

இனி, ஒவ்வொரு ராசியினருக்கும், குரு பகவானின் இந்த ராசி மாறுதல், எத்தகைய பலன்களை அளிக்க இருக்கிறது என்பதை ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, ஆராய்ந்து பார்ப்போம்! எளிய ஆனால், சக்தி வாய்ந்த பரிகாரங்களைக் கொடுத்து இருக்கின்றோம். "தினகரன்" வாசக அன்பர்கள் அந்தந்த ராசிகளுக்குரிய பரிகாரங்களைச் செய்து, எல்லா வளமும், நலமும் பெற்று வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுமாய் எனது நித்திய ஆராதனைத் தெய்வமாகிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பிரார்த்திக்கின்றோம். வாழ்க வளமுடனும், உடல் நலமுடனும்!

குரு பகவான் பார்வை கோடி தோஷங்களைப் போக்க வல்லது!

குரு பார்வை கோடி புண்ணிய பலனைத் தரவல்லது!

அறுபத்து நான்கு கலைகளையும் கசடறக் கற்றறிந்தவரும், பாற்கடலிலிருந்து தோன்றியவரும், கறந்த பசுவின் பால், தயிர், பனித்துளி, வெண்சங்கு நிறத்துடையோனும், பரமேஸ்வரரின் ஜடாமகுடத்தில் ஒய்யாரமாக அமர்ந்து, திருமுடியைஅலங்கரிப்பவராகவும், வெண்முயலை சின்னமாகக் கொண்டவரும், நான்கு வேதத்தினாலும், “ஸோமன்” என்றழைக்கப்படுபவரும், நவகிரகங்களில் மாத்ரு தேவனாக அறியப்படுபவருமாகிய, சந்திர பகவானுக்கு, ஜோதிடத்தைத் திறம்படக் கற்க வேண்டுமென்ற தீரா ஆசை உண்டாயிற்று.

உடனே அவர், குரு பகவானை அணுகி, தன் சிரசானது, குருபகவானின் திருவடித் தாமரையில் படும்படி, பூமியில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, தன் மனக் கிடக்கை, கைகட்டி, வாய்புதைத்து எடுத்துரைத்தார், சந்திர பகவான்!

குரு பகவானும், ஜோதிட நுணுக்கங்கள் அனைத்தையும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காவண்ணம் எடுத்தியம்பினார்!

ஜோதிடக் கணக்குகள் மற்றும் ஏனைய நுணுக்கங்களைக் கற்றறிந்த சந்திர பகவானைப் பரிசோதனை செய்ய ஆவல் கொண்ட குரு பகவான், “பூலோகத்தில், தற்சமயம் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி” அறிய ஆவல் கொண்டிருப்பதாகவும், அந்தக் குழந்தைக்குத் தகுந்த ஜாதகம் தயாரித்து, அதற்குரிய பலா - பலன்களைச் சொல்லுமாறு பணித்தார், குரு பகவான்!

குரு இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமானார், சந்திரன்! பூலோகத்தில் பிறந்த குழந்தை பிறந்த தேதி, நேரம், இடம் அனைத்தையும் அறிந்து, துல்லியமான ஜாதகத்தையும் தயாரித்து அதற்குரிய பலன்களை, குருபகவானிடம், “அக்குழந்தை, ஒரு குறிப்பிட்ட நாள் நேரத்தில், அற்ப ஆயுளில் முடியும்!” எனவும் அறுதியிட்டுக் கூறினார்.

குரு பகவானுக்கு தன் சிஷ்யனின் கூற்று சரியா என்பதையறிய விரும்பி, சந்திர பகவானுடன் குழந்தை இருக்குமிடத்தை இருவரும் வந்தடைந்தனர்.

குறிப்பிட்ட அந்த நேரமும் வந்தது! தொட்டிலைச் சுற்றி பூச் சரங்களுடன் குழந்தையின், சுருண்ட கேசமும், கொவ்வைச் செவ்வாயும், மாம்பழக் கன்னங்களுடனும், துரு துரு கண்களும், எடுப்பான நாசியும், பார்ப்போரைக் கவர்ந்திழுத்தது. அள்ளி அணைக்க எத்தனித்தனர் அனைவரும்!

பூச்சரங்களுடன் ஆடிக்கொண்டிருந்த தொட்டிலில் ஒரு பூநாகமும் ஆடியவாறே குழந்தையை நோக்கியவண்ணம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருசமயத்தில் பூநாகத்தின் வால் பகுதி, தொட்டில் இரும்புச் சங்கிலியில் மாட்டிக் கொண்டுவிட்டது. வால் பகுதியை விடுவிக்க யத்தனித்த பூநாகம் தன் தலைப் பகுதியை அவ்விடத்திற்குக் கொண்டு சென்றபோது, தலைப் பகுதியும் சங்கிலியில் மாட்டிக்கொண்டு இரண்டு துண்டாகிக் கீழே விழுந்து மடிந்ததைக் கண்ட சந்திரபகவான், தான் முதன்முதலாகக் கணித்த ஜாதகம் இவ்விதமாகப் பொய்த்துப் போய்விட்டதே..! “ஒருவேளை குரு பகவான் நமக்குச் சரியாகச் ெசால்லிக் கொடுக்கவில்லையோ?!” என்ற சந்தேகக் கண்களுடன், குரு பகவானை நோக்கி, “நான் கணித்த ஜனன ஜாதகத்தில் அனைத்தும் சரியாகத்தானே இருக்கின்றது...? குழந்தை தப்பித்தது எங்ஙனம்?” என்று கேட்டார் குழம்பிய மனத்துடன்! அதற்கு புன்முறுவலுடன் குரு பகவான், “ஜனன ஜாதகத்தில் என் பார்வை இல்லாவிடில் என்ன? எனது நேத்திரங்கள் அருட்கடாட்சம்தான், குழந்தை மீது இதுகாரும் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது? இது போதாதா?!” என்று வினவ, “குரு பார்வை கோடி தோஷங்களைப் போக்க வல்லது!” என்பதை சந்திர பகவான் மட்டுமல்லாது, நாமும் உணர்ந்து கொண்டோமல்லவா?

பாரத தேசமே ஒரு திருக்கோயில்! தமிழகமே அத்திருக்கோயிலின் கருவறை! குரு பகவான் கோயில் கொண்டுள்ள திருக் கோயில்கள்!

1.காஞ்சி மாவட்டத்தில், எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ பெரும்புதூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதும், "என்றென்றும் குன்றாத இளமையுடனும், யோகாப்பியாசத்துடன்கூடிய திவ்ய ஹஸ்த்தத்துடன் அருள்பாலித்திருக்கும்படி" எம்பெருமானின் திருவாக்கினாலேயே அருளப்பெற்ற திருத்தலமாகவும், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் அமையப்பெற்றுள்ள எலுமியன் கோட்டூர் தலத்தில் அரம்பேஸ்வரர்கோயிலில் அருள் பாலித்த வண்ணம் ஸேவை சாதிக்கின்றார்.

2.திருப்புலிவனத்தில், உத்தரமேரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்!

3.பெரியபாளையத்திற்கு அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமையப்பெற்ற திருக்கோயிலில் குரு பகவான் திவ்ய மங்கள சேவை சாதித்தருள்கிறார்.

4.திருநெல்வேலி மாவட்டத்தில், செங்கோட்டையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில், சிவ பெருமானையும், குருபகவானையும் ஒருசேர தரிசிக்கும் வண்ணமாக காட்சிதந்தருள்கிறார்.

5.திருப்பாற்கடலைக் கடைந்தபோது, உண்டாகிய விஷத்தைக் கண்டு அஞ்சி நடுநடுங்கி ஓடினர், தேவர்கள்! உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றும் பொருட்டு, சிவபெருமான் ஆலகால விஷத்தைப் பருகிய காரணத்தால், ஆலங்குடி என்ற காரணப் பெயராயிற்று!) பிரதான குரு திருத்தலமாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மட்டும்தான், குரு பகவான் தேரில் உலா வருவது விசேஷமானது.

6.சென்னை - பாடி-திருவலிதாயத் திருத்தலத்தில், தனக்கு சாப விமோசனமளித்த சிவபெருமானைத் துதிக்கும் வகையில் மேற்குநோக்கிய நிலையிலும் நமக்குக் காட்சியளிக்கின்றார்.

7.சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கல திருத்தலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். விசேஷமாக, மண்டபத்தில் ராசிக்கட்டம் கற்சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

8.தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடி திட்டையில், வசிஷ்டேஸ்வரருக்கும் - மங்களாம்பிகை தாயாருக்கும் நடுவில்" ராஜகுரு"வாக அருள்பாலித்தருள்கிறா.

9.மதுரையில், சோழவந்தான்னில் குரு. - சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

10.அரக்கோணத்தில்கம்மவார்ப்பாளையத்திலிருந்து கோவிந்தவாடி திருத்தலத்தில் வியாக்யான குரு பகவானாக அருள்பாலிக்கின்றார்.