Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

வேலி அடைத்து காத்துக்கொள்

இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர். அவர்களிடம் தரிசாய் போன விளைநிலம் இருந்தது. அந்த வருடத்தில் நல்ல மழை பெய்தது. அந்த நண்பர்கள் நமது நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பேசி கொண்டனர். தக்காளி பயிரிடலாம் என யோசித்து மறுநாளே அதற்குரிய வேலையை தொடங்கினர். விதைத்தனர், செடி சற்று வளர்ந்தது. முதல் விவசாயி தன் தோட்டத்தை சுற்றிலும் வேலியடைத்தான். அவ்வப்போது வந்த செடியில் நடுவில் வளரும் களைகளை பறித்து போட்டான். ஒவ்வொரு நாளும் கவனமாய் நீர்ப்பாய்ச்சினான். இரண்டாம் விவசாயி, இவனுக்கு வேலையில்லை, இதற்கெல்லாம் வேலி போட்டு களை பிடுங்க வேண்டுமா, தண்ணீர் பாய்ச்சினால் போதாதா? என்று கிண்டலாக அவ்வப்போது முதல் விவசாயியிடம் கூறுவான். கனி தரும் காலம் வந்தது. இரண்டு தோட்டத்திலும் காய் காய்த்து குலுங்கியது. தினமும் மாலை இருவரும் தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி ‘நான் வேலி அடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை, ஆனாலும் என்னுடைய தோட்டமும் நன்றாக காய்த்திருக்கிறதுதானே, நீ வேலி அடைத்து உன் பணத்தையும், களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கிவிட்டாய். நீ வெட்டி வேலை செய்திருக்கிறாய்’ என்று ஏளனம் செய்தான். ‘தக்காளிகளெல்லாம் நன்றாக முற்றிவிட்டது. நாளை பறித்தால் சரியாக இருக்கும். ஆகவே நாளை காலையிலேயே இவற்றை பறித்து சந்தையில் போய் போடுவோம்’ என்று பேசி கொண்டார்கள்.

சாக்குகளோடு மறுநாள் அதிகாலமே தோட்டத்திற்கு வந்தனர். வேலியடைக்காத தோட்டத்திலுள்ள காய்கள் எல்லாம் பறிக்கப்பட்டு தோட்டமே அலங்கோலமாக கிடந்தது. காரணம் யாரோ நெடுநாளாய் இந்த தோட்டத்தை கவனித்து வந்துள்ளனர். பறிக்க சரியான நேரம் பார்த்திருந்தனர். வேலியும் இல்லாததால் எந்த சிரமுமின்று பறித்து சென்று விட்டனர். இதை கண்டவுடன் இரண்டாவது விவசாயிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. துக்கத்தோடு திரும்பி சென்றான்.இறைமக்களே, ‘‘எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்’’ (நீதிமொழிகள் 4:23) என்று இறைவேதம் சொல்கிறது. நம் இருதயத்தை எப்படி காத்து கொள்வது? கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து சோதனை வரும்போதும், பிரச்னைகள் வரும்போதும் அவற்றை உபயோகித்து, நம்மை காத்துக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து நாற்பது நாள் இரவு பகலும் உபவாசிமிருந்து முடித்த போது, அவருக்கு பசியுண்டான நேரத்தில் பிசாசானவன் வந்து அவரை சோதித்தான். கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும் என்று அவரிடம் ஆசை காட்டினான். அவரால் அப்படி முடியு மென்றாலும், அப்படி செய்யவில்லை.

கர்த்தருடைய வார்த்தைகளினால் அவனை வென்றார். ‘மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே’ என்று கூறி அந்த சோதனையையும், மற்ற சோதனைகளையும் கர்த்தருடைய வார்த்தைகளை பேசி பிசாசானவனை வென்றார்.நல்ல அறுவடையை பெற்று கொண்ட விவசாயி தோட்டத்தை சுற்றி வேலியடைத்ததை போல நாமும் நம் இருதயத்தை, சிந்தனையை, கண்களை, காதுகளை, கைகளை, கால்களை, வார்த்தைகளை பரிசுத்தமாக காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கட்டுப்பாடற்ற நிலையில் அல்லது திறந்துவிடப்பட்ட நிலையில் நம் மனம் அலைபாய்வதை கட்டுப்படுத்த வேண்டும். கர்த்தருடைய வசனம் என்னும் வேலியினால் காத்து கொள்வோம். இதைச் செய்தால் அநேகர் நம்மை பார்த்து ஆச்சரியப்படும் படியாக தேவன் உயர்த்துவார். கர்த்தரை பின்பற்றி தீமைக்கு விலகி ஜீவிக்கும் நமக்கு, ‘‘முடிவு ஜீவஊற்றைப் போல’’ அமையும் என்பதில் சந்தேகமில்லை.

- அருள்முனைவர்:

பெ.பெவிஸ்டன்.