Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனதில் மறைந்து கிடக்கும் புதையல்கள்

வாலிபன் ஒருவன் வயலில் வேலை செய்யும்போது வெள்ளிக்காசுகள் சில அவ்வபோது அகப்பட்டன. அவன் புதையல் கிடப்பதாக எண்ணி, அந்த நிலத்தை மிகவும் உற்சாகத்தோடு தோண்ட ஆரம்பித்தான். பின் அவனுக்குள்ளேயே ஒரு சந்தேகம் எழுந்தது. தன் சட்டைப்பையை தடவி பார்த்தபோது அது ஓட்டையாக இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான், அகப்பட்டது அனைத்தும் இவனுடைய காசுகள் என்று. இறைமக்களே, ஆசீர்வாதங்களை வெளியில் தேடி அலைவதை நிறுத்துங்கள். தேவன் உங்களுக்குள் வைத்திருக்கும் புதையலை கண்டெடுத்து, அதை வளர்த்து, அதை பயன்படுத்துங்கள். நீங்கள் கைப்பற்ற வேண்டியது தொலைவில் இல்லை. உங்களுக்குள்ளே இருக்கிறது! இன்று முதல், தேவன் உங்களில் வைத்துள்ள தாலந்துகள் மூலம் பலரை ஆசீர்வதிக்கும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்போம். தேவன் நமக்குள் வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் என்பது வெறும் பொருளாதாரம் மட்டும் அல்ல; அது விசுவாசம், தைரியம், நம்பிக்கை, திறமை, பொறுமை, ஞானம், சாட்சியம், சேவை மனம், அருள் வரங்கள் முதலானவைகள் ஆகும். இவைகளை எல்லாம் உலகம் “வெளியில் தேடு” என்று தூண்டுகிறது. ஆனால் தேவன் “உன்னுள் இருப்பதை அறிந்து கொள்” என்று அழைக்கிறார்.

தேவன் நமக்குள் வைத்துள்ள தாலந்துகள் (Talents) என்பது தேவன் நமக்கு கொடுத்த பொறுப்பும் வாய்ப்பும். ஒருவருக்கு பாடும் திறன், ஒருவருக்கு பேசும் திறன், ஒருவருக்கு சேவை செய்யும் மனம், ஒருவருக்கு ஆலோசனை தரும் ஞானம், ஒருவருக்கு கருணை நிறைந்த இதயம் - இவை அனைத்தும் தேவன் தந்த வரங்கள். ஆனால் அவைகளை பயன்படுத்தாமல் புதைத்து வைத்தால், ஆசீர்வாதம் மறைந்து கிடக்கும் புதையல் போல ஆகிவிடும். திறமை இருந்தும் அதை பயன்படுத்தாதவன், செல்வம் இருந்தும் அதை அனுபவிக்காதவன் போன்றவன்.எனவே நாம் ஆசீர்வாதத்தைத் தேடி அங்கும் இங்கும் அலைய வேண்டியதில்லை. “இந்த வழிதான் வெற்றி, அந்த இடம்தான் உயர்வு” என்று ஓடிக்கொண்டே அல்லது எண்ணிக்கொண்டே இன்றைய வாழ்வை இழந்து விடாதிருங்கள். ஆம், புதையல்கள் மணலில் மட்டும் மறைந்து கிடைப்பது இல்ல. உங்கள் மனதிலும் விலையுயர்ந்த புதையல்கள் மறைந்துள்ளது. எனவே உங்களுக்கும் இருக்கும் உள்ளாற்றலை கண்டுபிடித்து பேராற்றலாக்குங்கள்.

- அருள்முனைவர். பெவிஸ்டன்.