Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விலையேறப்பெற்ற பொக்கிஷம்!

மைக்கேல் என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவன் பிறந்தநாள் வந்தபோது, அவன் பெற்றோர் அவனுக்கு மூன்று அழகான பரிசுகளை அளித்தார்கள். பலவிதமான சாக்லேட்டுகள், ஒரு அழகிய கைக்கடிகாரம், மேலும் ஒரு அழகிய வேதபுத்தகம். சிறுவனாக இருந்த மைக்கேல் அந்த மூன்றையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான். காலம் கடந்தது. மைக்கேல் வளர்ந்து வாலிபனானான். ஒருநாள் ஒரு நற்செய்தி கூட்டத்தில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்டான். அவன் இவ்வாறு கூறினான்;

“என் சிறுவயதில் பெற்றோர் எனக்கு பலமுறை சாக்லேட்டுகளை பரிசாக கொடுத்தார்கள். ஆனால், சில நாட்களிலேயே அவற்றை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டேன். அவை என் வாழ்க்கையில் ஒரு குறுகிய நேர மகிழ்ச்சியை மட்டும் தந்தன. ஒருமுறை அவர்கள் எனக்கு அழகான கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார்கள். அது சில வருடங்கள் நன்றாக ஓடியது. ஆனால், ஒரு காலத்திற்குப் பிறகு அது பழுதடைந்து பயனற்றதாகிவிட்டது. ஆனால், அவர்கள் எனக்கு அளித்த வேதபுத்தகம் மட்டும் வேறுபட்டது. அது இன்று வரை என்னை வழிநடத்தி வருகிறது. அது என் மனதை மாற்றியது. என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தது. நான் பேசும் வார்த்தைகளிலும், நான் நடக்கும் பாதையிலும் அது வெளிப்படுகிறது. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு உண்மையான வழிகாட்டியாக இருக்கும் பொக்கிஷம் அதுவே.”

இந்த சாட்சியை கூறிய மைக்கேல், வேதத்தை நேசித்து தினமும் வாசித்து தியானித்தான். அதன் வழிகாட்டுதலின்படி வாழ்ந்தான். அதன் விளைவாக எண்ணற்ற மக்களை தேவனுடைய பாதைக்கு நடத்தும் பிரசித்திபெற்ற சுவிசேஷகராக வளர்ந்தான். இறைமக்களே, வேதவசனத்தை நேசித்து அதில் தியானித்து அதன் படி நடக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். வேதம் நமக்கு வழிகாட்டும் ஒளி.நித்திய ஜீவனை அடையவும் பரலோக ராஜ்யத்தின் பாக்கியத்தை பெறவும் தேவையான உண்மையை நமக்குகாட்டுவது வேதமே. எனவே நாம் வேதத்தை நேசிப்போம். அதை தினமும் வாசிப்போம். அதில் தியானிப்போம். அதன்படி வாழ்வோம். அப்பொழுது கர்த்தரின் ஆசீர்வாதங்கள் நம் வாழ்க்கையில் நிறைந்திருக்கும். இதுபற்றி இறைவேதம் கூறுவதை கவனியுங்கள்;

“கர்த்தருடைய வேதத்தில், பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் கனியைத் தருகிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:2-3). எனவே வேதத்தை நேசிப்போம், பாக்கியம் காணுவோம்.

- அருள்முனைவர். பெவிஸ்டன்