Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தேவைக்காக அல்ல,தேவையாக மாற்றிக்கொள்ளுங்கள்

மிகவும் செழித்து வளர்ந்து கனி கொடுக்கும் ஆப்பிள் மரம் அது. சிறுவன் ஒருவன் அதனடியில் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பான். அந்த மரத்தோடு நண்பனைப்போல பழகி வந்த அவன் இரவு நேரம் வரும்போதுதான் வீடு திரும்புவான். பள்ளிக்குச் செல்லும் அவன் பருவத்தை அடைந்த அவன் சிலகாலம் அங்கு வருவதை நிறுத்தினான்.ஒருமுறை அந்த மரத்தினருகே வந்தபோது ஆப்பிள் மரம் அவனைப் பார்த்து, “தம்பி ஏன் இப்போதெல்லாம் இந்தப்பக்கம் வருவது இல்லை, உனக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன்” என்றது.

அதற்குச் சிறுவன், “நான் மரத்தடியில் விளையாடும் பருவத்தை கடந்து விட்டேன், இப்போது எனக்கு விளையாடுவதற்கு விளையாட்டுப்பொருட்கள்தான் தேவை, உன்னால் எப்படி என்னை சந்தோஷப்படுத்த முடியும்” என்று கேட்டான். அதற்கு அந்த மரம், “என்னிடம் அப்படிப்பட்ட பொருட்கள் இல்லை உண்மைதான். ஆனால் நான் ஒன்று செய்கிறேன். நீ என்னிடம் உள்ள பழங்களை எல்லாம் விற்று உனக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொள்” என்று சொன்னது. அவனும் மரம் சொன்னபடியே பழங்களை எல்லாம் விற்று தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டான். அதன் பின் அவன் சிலகாலம் அங்கு வரவில்லை.

பின்பு ஒருநாள் சோகமான முகத்தோடு வந்த அவனிடம், ஆப்பிள் மரம் “நீ எப்படி இருக்கிறாய்?, ஏன் உன் முகம் சோகமாக இருக்கிறது? “என்றுவிசாரித்தது. அதற்கு அவன்,” நான் விளையாடிய காலங்களெல்லாம் முடிந்து விட்டது, இப்போது நான் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும். என்னிடம் கையில் பணம் ஒன்றும் இல்லை” என்று சொல்லி வருத்தப்பட்டான். “கவலைப்படாதே, என்னுடைய கிளைகள் இப்போது வளர்ந்து இருக்கின்றன, கிளைகளை எல்லாம் நீ வெட்டி எடுத்துக்கொள். அதை விற்று நீ கல்லூரியில் சேர்ந்து படிஎன்றது. அவனும் அதன்படியே செய்தான். அதோடு அவன் மரத்திடம் வருவதையும் நிறுத்திக் கொண்டான்.காலங்கள் கடந்தது. ஒருநாள் வயதான ஒரு மனிதனாக அந்த மரத்திடம் வந்த அவனை மரம் அடையாளம் கண்டு கொண்டது.

அவன் மிகவும் கஷ்டத்தோடு இருப்பதை பார்த்த மரம், என்னிடத்தில் இப்போது கிளைகளும் இல்லை, அதனால் பழங்களும் இல்லை, என்னுடைய வேர்களைக் கொண்டு ஏதோ நான் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறேன், உனக்கு உதவி செய்யும் நிலையில் நான் இல்லையே” என வருத்தப்பட்டது. அதற்கு அந்த மனிதன் “எனக்கு குடும்பம் குழந்தைகள் என்றாகிவிட்டது, என்னுடைய மனதில் நிம்மதிதான் இல்லை. நீ எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம், உன்னுடைய வேர்களில் நான் சிறிது சாய்ந்து கொள்கிறேன். எனக்கு அதுவே ஆறுதலாக இருக்கும்” என்றான். உடனே அந்த மரம் வேர்களால் அவனை அணைத்துக்கொண்டு ஆறுதலைக் கொடுத்தது.

இறைமக்களே, தேவனை தேவைகளுக்காய் தேடுகிறவர்கள் பலர் உண்டு. தேவைகளுக்காக அல்ல தேவனையே உங்கள் தேவையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என இக்கதை நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில் நம்மை எந்த சூழ்நிலையிலும் நேசிப்பவர் தேவன் ஒருவரே, அவர் ஒருபோதும் நம்மை புறம்பே தள்ளுவது இல்லை. இதுபோலவே நம் பெற்றோரை எப்போதும் கனம் பண்ண வேண்டும் என்பதையும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. தேவை உள்ளவரை பயன்படுத்திக்கொண்டு தேவை இல்லாதபோது பெற்றோரை மறந்து போகும் அல்லது தூக்கியெறியும் மனநிலை நம்மை விட்டு மாற வேண்டும். “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக”. (யாத்.20:12)

- அருள்முனைவர். பெவிஸ்டன்