Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைசாய்ந்த ஈசன்!

பகுதி - 1

குங்கிலிய கலய நாயனார் சரிதம்

கலயர் என்பவர் பித்தளையிலான குங்கிலியப் பாத்திரத்தைத் தொட்டு வணங்கினார். பாதப்பகுதி அகன்று, தலைப்பகுதி குறுகிய வடிவில் இருக்கும் அந்தக் கலயம்தான் அவரின் உயிர்.

அந்தப் பாத்திரம், குடுவை என்றும் சொல்ல முடியாத, சொம்பு என்றும் சொல்ல முடியாத வடிவத்தில் இருந்தது. பித்தளையில் கைப்பிடி பொருத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒரு நீண்ட மரக்கழி இணைக்கப் பட்டிருக்கும். அதிகாலையில் தன் அனுதினம் கடமைகளை முடித்ததும், கலயர், ஸ்ரீருத்ர ஹோமம் செய்வார். அதன் பின் அந்த ஹோமத் தீயுடன் சமித்துகளையும், சந்தனக் கட்டைகளையும் கொண்டு குங்கிலியப் பாத்திரத்தை நிரப்புவார். எப்பொழுதும் கையில் வைத்திருக்கும் இரட்டை விசிறியைக் கொண்டு தணல் மூட்டுவார். பின், திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குப் புறப்படுவார்.

பஞ்சகச்சமாக அணிந்த உடை, உத்தரீயத்தை ஒட்டிய அங்கவஸ்திரம், அழுத்திக் கட்டிய கட்டுக்குடுமி, நெற்றியில் விபூதிப் பட்டை, சிறிய கீற்றாகக் கருப்பு நிறத்தில் ஹோம ரட்சை, அபிராமி சந்நதியின் குங்குமம், வேதங்களும் மந்திரங்களும் சொல்வதனால் உண்டான தேஜஸ், வலது கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் குங்கிலியப் பாத்திரம், தோளில் தொங்கும் குங்கிலியம் நிரப்பப்பட்ட மஞ்சள் வண்ணத் தோல்பை, அதனுள் வெள்ளிக் கரண்டி.

இடது கையில் இரட்டை விசிறி. அவர் கோயிலுக்குச் செல்லும் அழகே ஒரு சுவாமி புறப்பாடு மாதிரிதான். அவரின் மனைவி திலகவதிக்கும், நான்கு பிள்ளைகளுக்கும் அவரின் தோற்றம் மிகவும் பிடிக்கும். அவர் கோயிலுக்குக் கிளம்புகையில், எல்லோரும் நமஸ்கரிப்பார்கள். அவர் கோயிலைச் சென்றடையும் வரையில் வீதியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

கலயர், கோயிலை அடையும் தருணம், எப்பொழுதும், சுவாமிநாத ஓதுவார் அவருடன் இணைந்து கொள்வார். ஓதுவார் தாளம் போட்டபடி கலயருக்கு மிகவும் பிடித்த பதிகத்தைத் துவங்குவார்.

``தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய

பெம்மானிவ னன்றே’’

கலயர், குங்கிலியத்தைத் தூவி நறுமணப் புகை மூட்டுவார். உள்ளம் கவர் கள்வன் என்ற வரிகளில் மனம் கசிவார். குங்கிலியத்தைப் போட்டு, பின், விசிறியினால் விசிறியபடி அவர், அமிர்தகடேஷ்

வரின் சந்நதியில் நுழைவார். அந்தத் தருணம், அந்த ஈசனே, தான் கைலாயத்தில் இருக்கிறோமா அன்றி, கடவூரில் இருக்கிறோமா என்று வியந்துபோவார்.

கலயருக்கு விழித்திருக்கும் நேரமெல்லாமே சிவ நினைப்புத்தான். ஆனாலும், எப்பொழுது சிவனைப் பார்த்தாலும் கண் களில் நீர் பொங்கும். அப்பொழுதெல்லாம் குங்கிலியத்தை அதிகமாகத் தணலில் சேர்ப்பார். அந்த நறுமணப் புகையில் தன் கண்ணீரை மறைத்துக் கொள்வார். சிவனுக்கு அவரின் நெகிழ்ச்சியிலும், குங்கிலிய வாசனை இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்.

கலயருக்கு அன்று தன் மனம் மிகுந்த பூரிப்பில் இருப்பதாகத் தோன்றியது. மெல்லியதான குரலில் சிவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் பேசலானார்.

`‘சிவனே! என் நாதனே! உனக்கு ஐம்புலன்களும் இருப்பதாகவே நான் நினைப்பேன். அது உண்மையும்கூட. உன் கண்களுக்கு ஏற்றாற்போல் அழகிய வண்ண மலர்கள், மாலைகள், அலங்காரங்கள் உண்டு. அவைகள் எல்லாமும் உன் கண்கள் வரைதான். உன் உள்ளே நுழையாது தானே! உன்னைத் தொட்டுச் செய்யப்படும் அத்தனை அபிஷேகங்களும் உன் மேனி வரைதான். உன் உள்ளே நுழையாதுதானே! உனக்காக இசைக்கப்படும் பதிகங்கள், வேத கோஷங்கள் என எல்லாமும் உன் செவிகள் வரைதான். உன் உள்ளே நுழையாதுதானே. சிந்தையில் வேண்டுமானால் கொஞ்சம் நுழையலாம். அவ்வளவே! உனக்குச் சமர்ப்பிக்கப்படும் நிவேதனங்கள் அனைத்தும் உன் செவ்வாய் வரையில்தானே சுவைக்கும். உன் உள்ளே நுழையாதுதானே! ஆனால், என் குங்கிலிய வாசனையை நீ நுகர்வாய். அந்த நறுமணப்புகை உன் சுவாசத்தோடு கலக்கும்தானே! உன்னிலேயே, உனக்குள்ளேயே தங்கிவிடும்தானே!’’ என்று அழுகையுடன் கலயர் சொல்வதைக்கேட்ட சிவன்;  `‘ஆமாம்’’ என்று தலையசைத்ததாக கலயருக்குப் பட்டது. குங்கிலியப்புகை, கலயரையும் சிவனையும் பிணைத்தது. அவருக்கு ``குங்கிலியக் கலயர்’’ என்று பெயராயிற்று. வெகுநாட்கள் இது தொடர்ந்தது. சிவனுக்கு, குங்கிலியப் புகைவாசத்துடன் கொஞ்சம் சுவாரசியமும் வேண்டுமென்று தோன்றியது. திருவிளையாடல் துவங்க முடிவானது.

கலயர் செல்வந்தராய் இருந்தபோதும், குங்குலிய வாசனைப் புகையாகச் செல்வமெல்லாம் கரைந்தது. வறுமையின் விளிம்புக்கே கலயர் குடும்பம் வந்துவிட்டது. அவரின் மனைவி ஒவ்வொன்றாய் விற்று குழந்தைகளுக்கு உணவளித்தாள். கலயருக்கு, சிவனுக்கு குங்கிலியமிட்டு நறுமணப் புகைபோடுதல் தவிர எதுவும் முக்கியமாகத் தெரிந்ததில்லை. ஒரு நாள் அவரின் மனைவி, தன் தாலியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.

`‘நான் ஒரு மஞ்சள் கிழங்கை இந்த தாலிச்சரடில் கட்டிக் கொள்கிறேன். இதோ, இந்தத் தாலியை விற்று, நம் குழந்தைகள் பசியாற அரிசி வாங்கி வாருங்கள். நாம் வணங்கும் அந்த அமிர்தகடேஸ்வரர் நமக்கு விரைவில் அருளட்டும்!’’ என்றார். திருமாங்கல்யத்தை வாங்கிய கலயர், அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். மனைவியின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார். கடைத் தெருவில் நடக்கும்போது, மனதில் பசியுடன் வாடும் குழந்தைகள் வந்து போனார்கள்.

`‘நமச்சிவாய வாழ்க!’’ மந்திரமாய் மனதில் வியாபிக்கத் துவங்கியது. அதே சமயம், எப்பொழுதும் அவருக்குக் குங்கிலியம் விற்கும் வியாபாரி எதிரில் வர, அவரின் எண்ணம் முற்றிலும் மாறிப்போனது. திருமாங்கல்யத்தை அவரின் கையில் திணித்தார். வியாபாரி திகைத்தார். இது எதற்கு? என்பது போலப் பார்த்தார். கலயருக்கு, குங்கிலிய மூட்டையை, தாயை ஏக்கத்துடன் பாலுக்காகப் பார்க்கும் பச்சைக்

குழந்தையைப் போலப் பார்த்தார்.

வியாபாரிக்கு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவர் கொடுத்தக் குங்கிலிய மூட்டையைச் சுமந்தபடி நேராக சிவன் சந்நதிக்குச் சென்றார்.

``பாருரு வாய பிறப்பறவேண்டும்,

பத்திமையும் பெற வேண்டும்,

சீருரு வாய சிவபெருமானே,

செங் கமல மலர்போல்,

ஆருரு வாயஎன் னார முதேஉன்,

அடியவர் தொகை நடுவே,

ஓருருவாய நின் திருவருள் காட்டி,

என்னையும் உய்யக்கொண் டருளே’’

- என்று பதிகம் பாடியபடி, தணல் மூட்டினார்.

அன்று அவருக்கு இந்தப் பதிகத்தைத் திரும்பத் திரும்பப் பாட வேண்டும் போல் இருந்தது. இப்பொழுதுதான் முதன்முதலாய் சிவனைப் பார்ப்பது போலப் பார்த்தார். நெடுநேரம் ஆகிவிட்டதோ என்றபடி பரபரத்தார்.

`‘என் ஈசனே! என் குங்கிலிய சேவை இதோ தொடங்குகிறது. ஏற்றுக்கொண்டு என்னையும் உய்யக் கொண்டருளே!’’ தன் மனைவியை மறந்தார். அவள் தந்த திருமாங்கல்யத்தை மறந்தார். குழந்தைகளை மறந்தார். அவர்களின் பசியை மறந்தார். குங்கிலியப் புகையில் சிவனோடு ஐக்கியமானவர் போல் உலகையே மறந்தார். சந்நதியின் அருகிலேயே உன்மத்த நிலையில் தன்னை மறந்து அயர்ந்தார்.

சிவனுக்கு, கலயரைப் பார்க்கப் பார்க்க அருள் சுரந்தது. கலயரின் மனைவியின் கனவில் தோன்றி ஆசி கூறினார். அவர் இல்லம் முழுவதும் பொன்னும், பொருட்களும், செல்வம் அனைத்தும் நிறையச் செய்தார். காலையில் விழித்தெழுந்த கலயர், வீடு திரும்ப, விவரம் அறிந்தார். அவர் மனைவி சொன்ன `‘நற்றுணையாவது நமசிவாயவே’’ என்ற ஒற்றை வாக்கியத்தில் அவருக்கு எல்லாமும் புரிந்து போனது. சிவனை நன்றியுடன் வணங்கினார். நாட்கள் கடந்தன. கலயர், குங்கிலியப் புகையிடும் சிவத்தொண்டை தொடர்ந்து வந்தார்.

ஒரு நாள் கலயர், திருக்கடவூர் கோயிலுனுள் நுழைகையில், ஓதுவாரின் வாட்டமான முகத்தைக் கண்ணுற்றார். விவரம் கேட்க, ஓதுவார்,

``வாருங்கள். இந்த மண்டபத்தில் அமருவோம். நானே இதுபற்றி உங்களிடம் பகிர வேண்டும் என நினைத்தேன். திருப்பனந்தாள் ஊரிலே உள்ள சிவன் மிகவும்

பிரசித்தம். நம் சம்பந்தர்,

``விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச

எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும்

பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்

தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரம’’

- என்று பதிகம் பாடியிருக்கிறார்.

பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டதனால், திருப்பனந்தாள் ஆயிற்று. தாலவனேஸ்வரர் என்பது நம் ஈசனின் திருநாமம். அந்த ஊரில் குடியிருந்த தாடகை எனும் ஒரு மங்கை, குழந்தை வரம் வேண்டி தினமும் வில்வ இலைகளைக் கொண்டு ஒரு மாலை தொடுப்பாள். அதனுடன் மகிழம்பூக்களைக் கொண்டு இன்னுமொரு மாலை தொடுப்பாள்.

நேராக சிவனிடம் சென்று,

`‘உன் மனம் மகிழ வில்வ மாலையைச் சூடிக்கொள். என் மனம் மகிழ இந்த மகிழம்பூ மாலையையும் சூடிக்கொள்’’ என்று அணிவிப்பாள். அன்பே சிவம். அன்புக்கு அடிமையும் சிவம். மங்கையின் அன்பையேற்று சிவன், சூட்டப்படும் மாலைகளைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வான். தாடகை, தினமும் தானே வில்வ இலைகளையும், மகிழம்பூக்களையும் கொணர்வாள். வாழை நார் கொண்டு,

`‘நமசிவாய’’ நாமம் சொல்லியபடி தொடுப்பாள். சிவனுக்குச் சூட்டும்வரையில், நீர்கூட பருகமாட்டாள். சிவனுக்கு அவளின் பக்தியும், அவள் சூட்டும் மாலைகளும் மிகவும் பிடித்திருந்தது. வெயிலோ மழையோ எதுவானாலும் தொண்டு தொடர்ந்தது. தாடகை, கர்ப்பிணியானாள். நிறைமாத கர்ப்பிணியான போதும், அவள் மாலைகள் சிவனுக்குச் சூட்டுவதைத் தொடர்ந்தாள். யாரேனும், தாங்கள் அந்தக் கைங்கர்யத்தைச் செய்வதாகச் சொன்னபோதும், அவள் மறுத்தாள்.

`‘முன்பு இது ஒரு வேண்டுதல். ஒரு பிரார்த்தனை, அவ்வளவே! இப்பொழுது இது நன்றி சொல்லுதல். மாலைகள் சூட்டுவது என் மொழி. மேலும், சிவனுக்கு மாலைகள் சூட்டும்போது, ஒரு நெகிழ்வு தோன்றுமே! அது, எனக்குக் கிடைத்த பிள்ளை வரத்தை விடவும் கோடி பங்கு சந்தோஷம்’’ என்றபடி மலர்கள் தொடுப்பாள். யாரோ என்றோ அவளிடம் சொன்ன பதிகம்

``தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி,

ஓதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம்,

மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய,

வாய்ந்த போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே!’’

- என்பதை நினைத்து மகிழ்வாள்.

``வகுளம்’’ என்றால் ``மகிழம்பூ’’ என்று சொன்ன ஞாபகம் வரப் புன்னகைப்பாள். இன்றோ நாளையோ தனக்கு மகவு பிறக்கும் என்று, உள் மனது அவளுக்குச் சொல்லிய வண்ணமிருந்தது. அன்றும் வழக்கம்போல், வியர்க்க விறுவிறுக்க மாலைகளைத் தொடுத்தாள். வலது கையில் மாலைகளை எடுத்துக் கொண்டாள். இடது கையால் தன் இடுப்பைப் பிடித்தபடி, அடி மேல் அடி வைத்து கோயிலுக்குள் நுழைந்தாள். கால்கள் சற்று வீங்கியிருப்பதனால் நடப்பது சற்று கடினமாயிருந்தது. மேல் மூச்சு வாங்கியது. உள்ளேயிருக்கும் குழந்தையின் அசைவை உணர்ந்தாள். தன் வயிறைத் தடவியபடி, குழந்தையிடம் பேசினாள்.

`‘நீயும் நம் சிவனை வேண்டிக்கொள். எல்லாம் நல்லபடியாக ஆகும். நற்றுணையாவது நமசிவாயவே!’’ உடல் அயற்சியாயிருந்தது. மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்தாள்.

`‘ஈசா! என்னை உன் அருகில் கொண்டு சேர்த்துவிட்டேன். மாலைகளை உனக்கு சூட்டிவிட்டால் போதும், எனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை’’ சொல்லும்போதே கண்களில் நீர் கசிந்தது.

உள்ளேயிருந்த சிவன் அவளுக்கு அந்த சக்தியை அளித்தான். அவள் தன் அருகில் மாலைகளுடன் வரவேண்டும் என சிவனும் நினைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக, தூண்களைப் பிடித்துக் கொண்டே சந்நதியை அடைந்தாள். சிவனருகில் சென்றாள். தன் எண்ணம் நிறைவேறப் போகிற ஆனந்தம்.

கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. ஒரு கையில் இருந்த மாலைகளை இரு கைகளிலும் சிவனுக்குச் சூட்டுவதற்காக ஏந்திக்கொண்டாள். சிவன், மாலைகளை வாங்கிக் கொள்ளத் தயாரானார். இரு கைகளிலும் மாலைகளை ஏந்தியிருந்தாள். வலது கையில் இரு மாலைகளும் பாரம் தாளாமல் சரியத் துவங்கியது. மனதில் பதற்றம். அந்தக் கணத்தில் அவளுக்கு என்ன செய்வதென்றே அறியாத மனநிலை.

`‘நமசிவாயா’’ வார்த்தை வாயிலிருந்து வராமல் நெஞ்சிலேயே தங்கிவிட்டது. சிவன் அதனை உணர்ந்தார். தலையைச் சாய்த்துக் கொண்டார். மாலைகளை ஏந்திக் கொண்டார்.

அவள் சிவனை உணர்ந்தாள். உணர்வு மேலிட அவள் இரு கைகளையும் கூப்பி;

`‘என் சிவனே! என் சிவனே!’’ என்று தொழுதாள். கண்களிலிருந்து ஆறாக பொங்கிய கண்ணீரின் ஒரு துளி மகிழம்பூ மாலையில் விழுந்தது. சிவனின் பெருங்கருணையை எண்ணியெண்ணி, வியந்து கைகூப்பிய

படியே நின்றிருந்தாள்.

`‘என் தெய்வமே! என் ஈசனே! என் பொருட்டு உன் தலையைச் சாய்த்துக் கொண்டாயா!’’ சிவன் சாய்ந்த கோலத்தில், வில்வ, மகிழம்பூ மாலைகளுடன் புன்னகைத்தது அவளுக்குக் காட்சியானது. அவள் மனதிலேயே அந்தக் கணம் அப்படியே உறைந்து போனது. வெளியே லேசாக மழைச்சாரல் வீசியது. குளிர்ந்த காற்று, சிவனையும் அவளையும் சூழ்ந்தது.

பின், அவள் நலமுடன் பிரசவித்து, குழந்தை பெற்று சீருடன் இருக்கிறாள். ஆனால், நம் சிவன் இன்னமும் சாய்ந்த நிலையிலேயே தலையை வைத்துக்கொண்டு தரிசனம் தருகிறார். நம் மகிழ்ச்சோழ அரசர், ஆம், நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தைதான். வேள்விகள் செய்தார். பதிகங்கள் பாட வைத்தார்.

விரதங்கள் இருந்தார். ஆனால் தலை நிமிர்ந்தபாடில்லை. சிவன் தலைநிமிர்ந்தால் போதும் என்று, அவனையே வேண்டிக்கொண்டு, குதிரைகளைக் கொண்டும், யானைகளைக் கொண்டும், இழுத்தும் பார்த்தாகிவிட்டது. சாய்ந்த தலை நிமிரவேயில்லை. எல்லோரையும் காக்கும் ஈசன், தலை சாய்ந்திருப்பது எல்லோர் மனதிலும் ஒரு மாறாத வடுவாக உறுத்திக்கொண்டிருக்கிறது.

``என்றைக்கு விடிவு பிறக்குமோ? யார் இதற்கு தீர்வு காண்பாரோ? அந்த ஈசனுக்கே வெளிச்சம்’’

- அடுத்த இதழிலும் தொடரும்.