Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜீவன்களை காத்தருளும் ஜீவாஞ்சநேயர்

பழமை மாற கோயில்

ஆந்திர - கர்நாடக எல்லைப் பகுதியை ஒட்டி இருக்கும் பிரபலமான இடம்தான் பெல்லாரி. பெல்லாரியில் பல பழமைவாய்ந்த கோயில்கள் காணப்படுகின்றன. மத்வ மகான் ஸ்ரீவியாச ராஜர்  பிரதிஷ்டை செய்த அனுமன் கோயிலும், மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். பெல்லாரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., பயணித்தால், இந்த ஜீவாஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலை அடைந்துவிடலாம்.மிகப் பெரிய பாறை. அதன் நடுவில் அழகிய ஜீவாஞ்சநேயர், செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜீவாஞ்சநேயஸ்வாமியின் இருதயத்தில் வெள்ளியினால் ஆன ராமர் மற்றும் சீதாவின் உருவங்கள் பொருத்தப்பட்டிருந்தது.

இரு விளக்குகள்

24 மணிநேரமும் ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு முன்பாக இரு குத்துவிளக்குகள் எரிந்துக் கொண்டே இருக்கிறது. மழை போன்ற பேரிடர் காலங்களில், மின்சாரம் தடைப் பட்டால் இந்த இரு குத்துவிளக்குகள் மட்டுமே ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு முன்பாக எரிந்துக் கொண்டிருக்கும். ஹாஹா... அப்போது காணவேண்டும் அனுமனை. மிக அழகாக இருப்பார், என்று ஒரு பக்தர் நம்மிடையே தெரிவித்தார்.

அமிர்தமான பஞ்சாமிர்தம்

அதே போல், இங்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மிகவும் பிரசித்தமானவை. எங்குமே இல்லாத அளவிற்கு சுவையாக இருக்கிறதாம். ஆப்பிள், மாதுளை, மாம்பழம், ஆரஞ்சு, பலாப்பழம் ஆகிய ஐந்து வகை பழங்களும், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர்திராட்சை ஆகியவையோடு நெய், தேன், கற்கண்டு, பேரீச்சம்பழம், வெல்லம் ஆகியவை சேர்த்து ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற விசேஷ நாட்களில், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது.

வெறும் பழங்களினாலோ அல்லது பிஸ்தா முந்திரிகளினாலோ பஞ்சாமிர்தம் சுவையாக இல்லை. மாறாக, ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யும் போது, ``ஹரி வாயு ஸ்துதி’’, ``பலிதா (Balitha) ஸூக்தம்’’ முதலியன மந்திரங்களை சொல்லி பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதால், பஞ்சாமிர்தமானது அமிர்தம் போல் தித்திக்கிறது. அதுதான் காரணம்!

காரியசித்தி

ஜீவாஞ்சநேயஸ்வாமி படிப்பு, வேலை என தேடுவோருக்கு உடனடியாக அருளி, அவர் களின் வாழ்விற்கு ஒளியேற்றுகிறார். காரியசித்தி ஆனவுடன், ஜீவாஞ்சநேயஸ்வாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும் என அர்ச்சகர் தெரிவித்தார். மேலும், பிரபலமான பெல்லாரி கோட்டை, ஜீவாஞ்சநேயஸ்வாமி கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ஆகையால், ஜீவாஞ்சநேயரை தரிசித்த பின்னர், பெல்லாரி கோட்டையையும் ஒரு விசிட் செய்யலாம்.

அமைவிடம்: பெல்லாரி பேருந்து நிறுத்தம், பெல்லாரி கண்ட்ரோல்மெண்ட், காயத்திரி நகர் ஆகிய பகுதியில் இருந்து மிகமிக அருகில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.

ஜி.ராகவேந்திரன்