ஒரு சிறிய குளத்தில் தண்ணீரின் மீது பள்ளிக் கொண்டு அருள்பாலிக்கிறார். ஆகையால், இவரை ``ஜல நாராயணப் பெருமாள்’’ என்று அழைக்கிறார்கள்.
அனைத்து சந்நதிகளும் ஒரே இடத்தில்
இக்கோயிலை, ``சிவா - விஷ்ணு’’ கோயில் என்று கூறுகிறார்கள். காரணம், ஒரே திருக்கோயிலில் சிவபெருமான் சந்நதியும், விஷ்ணு பெருமாள் சந்நதியும் இருக்கிறது. மேலும், இவ்விருவரும் கோயில்கொண்டிருக்கும் கோயிலை பெரும்பாலும், சிவா - விஷ்ணு கோயில் என்றே அழைப்பார்கள். தமிழ்நாட்டில் எண்ணற்ற பல சிவா - விஷ்ணு ஆலயம் இருந்தாலும், இங்கு என்ன சிறப்பம்சம் என்று சொன்னால், எல்லா ஸ்வாமிகளும் ஒருமித்தே காட்சியளிக்கிறார்கள்.
பொதுவாக நாம் திங்கட்கிழமை ஒரு கோயில், செவ்வாய் முருகன் கோயில், புதன் ஒரு கோயில், வியாழன் மகான்களின் கோயில், வெள்ளி அம்பாள் கோயில், சனி அன்று பெருமாள் கோயில் என ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்றாற் போல் ஒரு கோயிலுக்கு செல்வோம். ஆனால், இந்த கோயிலில் எல்லா தெய்வங்களும் இருப்பதால் எல்லா நாட்களிலும் இந்த கோயிலுக்கு சென்றாலே போதும் போலும். இதோ... எல்லா தெய்வங்களை பற்றியும் பட்டியலிடுகிறோம்.
விநாயகர் முதல் பாபா வரை
கோயிலின் உள்ளே நுழைந்ததும், முதலில் செல்வ விநாயகரை தரிசிக்கலாம். இவரை ``செல்வ வரமருளும்’’ கணபதியாக பக்தர்கள் கருதுகிறார்கள். அவரை சுற்றி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜக ஜோதியாக ஜொலிக்கிறார், செல்வ விநாயகர். அவரை சேவித்துவிட்டு பிராகாரத்தை பிரதட்சணமாக வந்தோமேயானால், அங்கும் ஒரு விநாயகரின் சந்நதி உள்ளது, அவர் பெயர், கன்னி மூலகணபதி.
அதன் பின் ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ கோதண்டராமர் சந்நிதானம் மிக அழகாக உள்ளது. அதே போல், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணரை தரிசித்துவிட்டு அப்படியே வலம்வந்தால், ஸ்ரீ னிவாச பெருமாளும் பத்மாவதி தாயாரும் தனித் தனி சந்நதிகளைக் கொண்டு பக்தர்களை அருள்கிறார்கள்.
வேறெங்கும் தனி சந்நதியில்லை
பச்சை நிறப் புடவையை உடுத்திக் கொண்டும், கழுத்தில் பல ஆபரணங்களை தரித்துக் கொண்டும், பலவகை புஷ்பங்களை சாற்றிக் கொண்டும் நம்கண்களே பட்டுவிடும் அளவிற்கு பத்மாவதி அம்மவாரு காட்சியளித்தார். அம்பாளுக்கு சற்றும் குறையாத ஸ்ரீ னிவாசப் பெருமாளும் சிறியதாக இருந்தாலும் அழகு குறையாது காணப்பட்டார்.
அதே போல், மிக முக்கியமாக இங்கு சிவன், ``புஷ்பவனேஸ்வரர் என்னும் திருநாமத்திலும், அம்பாள், ``பூங்குழலி’’ என்னும் திருநாமத்திலும் காட்சித் தருகிறார்கள். புஷ்பவனேஸ்வரரின் மீது ஐந்து தலைக் கொண்ட சேஷன் படையெடுத்து காட்சிதரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை. அருகில் வள்ளி - தெய்வானை சமேத முருகன் சந்நதி ஆகியவை நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.
இக்கோயிலின் இன்னொரு சிறப்பம்சம், `` ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன்’’, தனி சந்நதிக் கொண்டு அருள்கிறார். கன்னிகா பரமேஸ்வரிக் கென்று இத்தகைய தனிச் சந்நதி வேறு எங்கும் காணமுடியாது.
அறிக்கையாக பெருமானுக்கு சமர்ப்பணம்
கல்விக்கு அதிபதி (God Of Education For Children) என்று சொல்லக் கூடிய லட்சுமி ஹயக்ரீவர், இங்கு பிரதான மூலவர் சந்நதியாக இருந்து அருள்பாலித்து வருகிறார். மேலும், சிவன் கோயில் என்று சொன்னாலே பைரவர் கண்டிப்பாக இருப்பார். இங்கும் பைரவர் சந்நதி உள்ளது.
தினமும் கோயிலுக்கு எத்தனை பக்தர்கள் வருகை புரிகிறார்கள்! அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பதனை அறிந்து பெருமானுக்கு அறிக்கையாக கொடுத்துவரும் சண்டிகேஸ்வரர் இங்கு அருபாலித்து வருகிறார். அதுமட்டுமா..!
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர், தட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆதிசங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர், ராமலிங்க ஸ்வாமிகள், அகஸ்தியர், கருடாழ்வார், 63 நாயன்மார்களில் பத்து நாயன்மார்கள் ஆகியவை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள்.
முருகப் பெருமானின் சிறந்த பக்தராக விளங்கிய கிருபானந்த வாரியாரின் நினைவாக, அவரின் திருவுருவ சிலை அப்படியே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, இங்கு தனி சந்நதியை கொண்டு பூஜிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அதே போல், ஒரு பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இக்கோயிலில் சீரடி பாபாவும் தனி சந்நதியில் இருக்கிறார். ஆக, இங்கில்லாத தெய்வங்களே இல்லை என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது இக்கோயில். மேலும், இக்கோயிலில் சுயம்பு மூர்த்திகள் எதுவுமே கிடையாது. ஆகையால், அனைத்தும் தெய்வமூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. அதன் காரணமாக, இக்கோயிலுக்கென்று தனி வரலாறுகள் எதுவும் கிடையாது. அதேபோல், இங்குள்ள அனைத்து மூலவரின் சிலா ரூபங்களை மகாபலிபுரத்தில் செய்திருக்கிறார்கள். உற்சவர்களை கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் செய்திருக்கிறார்கள். இங்கிருக்கும் அத்தனை மூலவருக்கும் உற்சவர்கள் இருக்கிறார்கள்.
நர்த்தனமாடும் ஜலநாராயணப் பெருமாள்
மேலும், இக்கோயிளுக்கு வலுசேர்க்கும் விதமாக பதினொன்று தலைக் கொண்ட ஆதிசேஷனோடு ``ஜல நாராயணப் பெருமாள்’’ கோயில் கொண்டு அனைவரையும் காத்து வருகிறார். வைகுண்டத்தில் எப்படி பெருமாள் பாற்கடலில் இருக்கிறாரரோ.. அது போல, பூலோகத்தில் பெருமாள் சிறிய அளவிலான குளத்தில் சதாசர்வ காலமும் தண்ணீரிலேயே இருந்து, நர்த்தன கோலத்தில் அனந்த சயனம் கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
நர்த்தன கோலம் என்பது, ஜலநாராயணனின் இரண்டு பாதங்களும் நர்த்தனம் ஆடுவது போல் காணப்படும். அனந்தசயன கோலம் என்பது, பெருமாளின் திருமுகம் ஆகாயத்தை பார்த்தும், ஸ்வாமியின் வலதுகையில் அட்சய பாத்திரம் கொண்டு பக்தர்களின் கல்வி, வேலை, தொழில், திருமணம், குழந்தை பேறு முதலிய வேண்டுதல்களை நிறைவேற்றி தருகிறார், ஜல நாராயணப் பெருமாள். மேலும், ஜலநாராயணப் பெருமாளின் இடதுபக்கத்தில் ஜலநாராயணி தாயாரும் இருக்கிறாள்.
இந்தியாவிலேயே முதல் முறையாக
இத்தகைய ஜலநாராயண பெருமாள், இந்தியாவிலேயே முதல் முதலாக இந்த கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவை தவிர்த்து பார்த்தோமேயானால், நேபாளத்தில் உள்ள காத்மாண்டு (kathmandu nepal city) என்னும் பகுதியில் ஜலநாராயணன் இருக்கிறார். இங்கு தாயார் கிடையாது. இக்கோயிலில் ஜலநாராயணர் அருகில் ஜலநாராயணி என்னும் தாயார் இருக்கிறார். இங்கு முறைப்படி அஷ்டபந்தனம் செய்து, ஆகமம் விதிப்படி செய்திருக்கிறார்கள்.
மாதத்தில் வருகின்ற இரண்டு ஏகாதசி தினங்களில், ஜலநாராயணருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி, பால் ஆகியவைகளைக் கொண்டு விசேஷ அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அன்றைய தினம், பரிகார பூஜையும் நடைபெறும்.
நினைத்ததை நிறைவேற்றி தரும் பரிகாரப்பூஜை
பரிகார பூஜை என்பது என்ன என்று கேட்டால், பக்தர்களின் கைகளில் வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்து, அதில் பன்னீரும், அதன் மீது புஷ்பமும் அதனுள் நெல்லிக் கனியையும் கொடுத்து, (நெல்லிக்கனி மகாலட்சுமியின் அம்சம்) பக்தர்களின் வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு, ஜல நாராயணரை மூன்று முறை வலம் வந்தபின்னர், மூன்றாவது முறை ஸ்வாமியின் பாதத்தில் விழும்படியாக கைகளில் இருக்கும் பன்னீரை அபிஷேகம் செய்ய வேண்டும்.
இது போல், இந்த பரிகார பூஜையை மூன்று ஏகாதசியில் செய்யவேண்டும். இந்த பரிகார பூஜையில் மேற்கொள்ளும் முந்தைய (Prefix) பிந்தைய (Suffix) நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். அதுயென்ன முந்தைய பிந்தைய? என்று கேட்டால், உதாரணத்திற்கு; வியாழக் கிழமையில் ஏகாதசி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் அசைவம் சாப்பிடக் கூடாது.
வியாழக் கிழமையில் வெறும் வயிற்றில் அதாவது எதையும் சாப்பிடாமல், பரிகார பூஜை செய்ய வேண்டும். பூஜை முடித்த பின்னர் கோயில்களிலேயே அன்னதானம் வழங்கப்பட்டும், அதனை உட்கொள்ளலாம்.
வீட்டிற்கு சென்றவுடன், நெல்லிக் கனியை வீட்டினுள்ள சாமி படங்களுக்கு முன்பு வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளித்துவிட்டு எதையும் உண்ணாமல் வேண்டும் காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு, நெல்லிக் கனியை உண்ண வேண்டும். அதன் பின்னர், வெள்ளிக் கிழமையும், சனிக்கிழமையும் அசைவம் சாப்பிடக்கூடாது. இதுவே பரிகார பூஜையை மேற்கொள்வதன் வழிமுறைகள்.
சிலருக்கு இரண்டு ஏகாதசியில்கூட காரிய சித்தியாகியிருக்கிறது. இன்னும் சிலருக்கோ.. ஒரே ஏகாதசியில்கூட மனதில் நினைத்த காரியங்கள் ஜெயம் ஆகியிருக்கிறது.
தொடர்புக்கு:
வெங்கடராமன் - 9940894148
விழாக்கள்
பொதுவாக பங்குனி உத்திரத்தில் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு திருக் கல்யாணமும், சிவன் கோயிலில் சிவனுக்கு திருக் கல்யாணம் வைபவம் நடைபெறும். ஆனால், இக்கோயிலில் இருவரும் இருப்பதால், சிவனுக்கும் - விஷ்ணுவிற்கும் ஒரே சமயத்தில் உற்சவருக்கு திருக் கல்யாணம் நடைபெறும். இந்த வைபவம் மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பிரசாதம்
தினமும் காலையில் ஏதேனும் கலவை சாதம் இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
எப்படி செல்வது
ரயில் மார்க்கமாக வருவோர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து (காக்களூர் வீர ஆஞ்சநேயரையும் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தால்) புட்லூரில் இறங்கி அங்கிருந்து, ஆட்டோவில் வழியில் காக்களூரில் உள்ள அனுமனை தரிசித்துவிட்டு ஜலநாராயணப் பெருமாள் கோயிலுக்கு செல்லலாம். இல்லை என்றால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி கோயிலை அடைந்துவிடலாம். பேருந்து மார்க்கமாக வர விரும்புவோர், திருவள்ளூர் தேரடி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து அதே போல், ஷேர் ஆட்டோவில் பயணிக்கலாம்.


