சிவபெருமானைப் போன்று தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் தானும் அவரைப் போன்றே முழுமுதற்கடவுள் என்று கூறி செருக்குற்றிருந்த பிரம்மாவின் செருக்கை அடக்கும் பொருட்டு, சிவபெருமான் தன்னுடைய அம்சமாக ஸ்ரீ கால பைரவரைத் தோற்றுவித்து, பிரம்மாவின் ஐந்தாவது சிரசைக் கொய்யச் செய்தார் என்று பைரவர் தோன்றிய கதையை பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. சிவபெருமானின் உருவத் திருமேனிகள் 64ல் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர் போன்றவை பிரபலமான திருமேனிகளாகும்.
பிரம்மாவின் தலையைக் கொய்ததால் பால பைரவரின் கரத்தில் பிரம்ம கபாலம் ஒட்டிக் கொண்டதோடு, அவருக்கு பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டதால் அவரை காசிக்குச் செல்லுமாறு சிவபெருமான் அறிவுறுத்தியதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. சிவபெருமானின் கட்டளையை ஏற்று ஸ்ரீ கால பைரவர் காசித் தலத்தை அடைந்தவுடன் அவரது கரத்தில் இருந்த கபாலம் அகன்றதோடு, அவருடைய பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியதாம். இன்றும் காசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடுத்து மிகப் பிரபலமான ஆலயமாக காசி கால பைரவர் ஆலயம் திகழ்கிறது. இங்குள்ள ஸ்ரீ கால பைரவர் காசித் தலத்தின் (கோத்வால்) பாதுகாவலராக கருதப்படுகிறார். இவரை தரிசித்தால் பக்தர்களின் அனைத்துப் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை. இது போன்றே மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ கால பைரவர் ஆலயமும் மிகப் பிரபலமானது.
மேலும், சிவாலயங்களின் வெளிப் பிராகாரத்தில் ஈசானியம் என்ற வடகிழக்கு மூலையில் பைரவருக்கென்று தனிச் சந்நதியைக் காணலாம். பரிவார தேவதைகளில் ஒருவரான ஸ்ரீ பைரவரை ஆலயத்தின் பாதுகாவலராக வழிபடுகிறார்கள். இந்தியா முழுவதும் பைரவருக்கென்றே பல சிறப்பான ஆலயங்கள் இருக்கின்றன.
காசித் தலத்திற்கு அடுத்து, உஜ்ஜயினி போன்றே மிகப் பிரபலமான இன்னொரு கால பைரவ ஷேத்திரம் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், இஸ்ஸன்னப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. தட்சிண காசி என்று போற்றப்படும் இத்திருத் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காலபைரவரை தரிசித்தால் காசி கால பைரவரைத் தரிசித்த பலன் கிட்டும் என்ற ஐதீகம் உள்ளது.
ஆலயத்திற்கு முன்பாக வரவேற்பு வளைவை அடுத்து, விசாலமான மஹாமண்டபம், கருவறையோடு காட்சி தரும் இந்த ஸ்ரீ கால பைரவர் ஆலயக் கருவறையில் சுமார் ஒன்பது அடி உயரத்தில் ஸ்ரீ காலபைரவ ஸ்வாமி நின்ற கோலத்தில் முறுக்கிய மீசை, மற்றும் இரு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். (பொதுவாக ஸ்ரீ கால பைரவரை நான்கு கரங்களுடன் மட்டுமே நாம் தரிசிக்கலாம்) இங்கு வலக்கையில் திரிசூலம், இடக்கையில் கபால பாத்திரம் ஏந்தியுள்ள
ஸ்ரீ கால பைரவரின் சிரசின் மேலே ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. இடது தோளின் மேற்புறத்தில் சர்ப்பம் ஒன்று காணப்படுகிறது. இந்த சர்ப்பத்தின் வால் அவருடைய இடக் கால் வரை நீண்டுள்ளது. மஹாமண்டபத்தின் மேற்புறம் சுற்றிலும் அஷ்ட பைரவர் திருக்கோலங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மீது ஐந்து நிலை விமானம் உள்ளது.
பொதுவாக கால பைரவரின் பின்புறம் நாய் வாகனம் காணப்படும். ஆனால் இங்கு ஸ்ரீ கால பைரவர் நாய் வாகனமின்றி இரண்டே கரங்களுடன் பக்தர்களுக்குக் காட்சி தருவது ஒரு சிறப்பாகும்.
இருப்பினும் மண்டபத்திற்கு வெளியே கருங்கல்லில் தத்ரூபமாக வடிக்கப்பட்ட நாய் வாகனம் சந்நதியை நோக்கியவாறு இருப்பதைக் காணலாம். திகம்பரராகக் காட்சி தரும் ஸ்ரீ கால பைரவரின் திருமேனி முழுவதும் தினந்தோறும் அனுமனைப் போன்றே சிந்தூரப் பூச்சு பூசுவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். (பொதுவாக அனுமன் ஆலயங்களில் தான் இதுபோன்ற சிந்தூரப் பூச்சினை நாம் காண முடியும்)
இஸ்ஸன்னப்பள்ளி ஸ்ரீ காலபைரவர் ஆலய வளாகத்தில் சிவபெருமானுக்கு தனிச் சந்நதியும், பிராகாரத்தில் அரசு வேம்பு மரங்களின் கீழ் மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இரட்டை நாகரம் (ஜண்ட நாகம்) சந்நதியும் உள்ளன. ஆலயத்திற்கு வெளியே பெரிய புஷ்கரணி உள்ளது. காசி ஸ்ரீ கால பைரவருக்கு நிகராகப் போற்றப்படும் இஸ்ஸன்னப்பள்ளி ஸ்ரீ கால பைரவரை தரிசித்தால் பக்தர்களைப் பீடித்திருக்கும் பூத, பிரதே, பிசாச உபாதைகள், மன நோய்கள், பயம் போன்றவை விலகும் என்று பக்தர்கள் மனதார நம்புகின்றனர். இந்த ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் வெளியே உள்ள புஷ்கரணியில் புனித நீராடி ஸ்ரீ கால பைரவர் கருவறையை எட்டு முறை வலம் வருகின்றனர்.
பொதுவாக கருவறையில் மூலவருக்கு அனைத்துத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்வதை நாம் காணலாம். ஆனால் இங்கு ஸ்ரீ கால பைரவருக்கு சுத்த நீரால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
வேறு அபிஷேகத் திரவியங்கள் பயன்படுத்துவதில்லை. மிக அரிதாக பால் அபிஷேகத்தை தரிசிக்கலாம். விசேஷ நாட்களில் பைரவரின் முகத்திற்கு மட்டும் வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு மலர் மாலைகள் கொண்டு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை நாளன்றும் நடைபெறும் அன்னபூஜை சிறப்பு வழிபாட்டில் பைரவரின் திருப்பாதங்களில் வெள்ளி கவசம் அணிவித்து, அதன் மீது அன்னம் குவியலாக வைக்கப்படுகிறது. அர்ச்சனை ஆரத்திக்குப் பின்னர் இந்த அன்னத்தை பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுக் கொள்கின்றனர். மாதந்தோறும் கிருஷ்ணபட்ச அஷ்டமி நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும், உற்சவர் பல்லக்கு சேவையிலும் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கார்த்திகை மாதம் பைரவ ஜயந்தியான ஸ்ரீ கால பைரவாஷ்டமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். ஆண்டு தோறும் ஜாத்ரா, ரத உற்சவம், அக்னி குண்டம் போன்றவை நடைபெறுகின்றன.
இந்தக் கிராமத்தின் எட்டு மூலைகளிலும் அஷ்ட பைரவர்கள் சூட்சுமமாக எழுந்தருளியிருப்பதாகவும், ஈசான திக்கில் உள்ள இந்த கால பைரவரே பிரதானமாக வழிபடப்படுவதாகவும் கூறுகின்றனர். ஸ்ரீ கால பைரவர் ஆலயத்திலிருந்து சுமார் 2 பர்லாங் தொலைவில் இத்தலத்தின் சிவாலயம் உள்ளது. இங்கு சிவபெருமான் காசி போன்றே ஸ்ரீ அன்னபூர்ணா சமேத ஸ்ரீ காசிவிஸ்நாதராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அனுமன், பண்டரிநாதர் ஆகிய சந்நதிகள் உள்ளன.
ஆலய இருப்பிடம்: மாநிலத் தலைநகர் ஐதராபாத்திலிருந்து 130 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைநகரான நிஜாமாபாத்திலிருந்து 65 கிமீ தொலைவிலும், உள்ள இஸ்ஸன்னப்பள்ளியில் ஸ்ரீ கால பைரவேஸ்வர ஸ்வாமி ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி: ஸ்ரீ கால பைரவேஸ்வர ஸ்வாமி ஆலயம், இஸ்ஸன்னப்பள்ளி, ராமாரெட்டி கிராமம், காமாரெட்டி வட்டம், நிஜாமாபாத் மாவட்டம், தெலங்கானா. இந்த ஆலயம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்படுகிறது.
