Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இறையச்சத்தின் பயிற்சிப் பாசறை

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்ச முள்ளவர்களாய்த் திகழக்கூடும். (குர்ஆன் 2:183) இஸ்லாம் அருளியுள்ள வாழ்வின் அடித்தளமே இறையச்சம்தான். வழிபாடுகளின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் அனைத்துமே இறையச்சம்தான். ஒருவருடைய இதயத்தில் இறையச்சம் இல்லை எனில், பிறகு அவருடைய வாழ்வில் எந்த நன்மையும் இருப்பதில்லை. ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’தான். ஒரு முறை நபிகளார் கூறினார்கள்: “இரண்டு துளிகளையும் இரண்டு அடையாளங்களையும்விட இறைவனிடத்தில் விருப்பத்திற்குரியவை வேறு எதுவும் இல்லை.”அது என்ன இரண்டு துளிகள்?

முதல் துளி, இறைவனைப் பற்றிய அச்சத்தால் வெளியாகின்ற ஒரு துளி கண்ணீர். இரண்டாவது துளி, இறைவழியில் சிந்தப்படுகின்ற ரத்தத் துளி. (நூல்:திர்மிதி) இரண்டு அடையாளங்கள் என்பன, அறவழியில் நன்மைக்காகப் போராடும்போது ஏற்படும் விழுப்புண் அடையாளமும், தொழுகை போன்ற வழிபாடுகளால் ஏற்படும் ஆன்மிக அடையாளமும் ஆகும்.இறையச்சத்தால் விழுகின்ற கண்ணீர்த்துளிகள் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அது ஒருவரின் உள்ளத்தூய்மையை வெளிப்படுத்துகிறது. கண்ணியத்துக்குக் கட்டியம் கூறுகிறது. அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் மனிதனிடம் பேணுதலான இறையச்சமுள்ள நடத்தையை உருவாக்குவதே ஆகும். ரமலான் நோன்பின் நோக்கமும் அதுதான். ஒருவர் அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், இச்சைகளில் ஈடுபடாமல் முழுக்க முழுக்க இறைநினைவிலேயே வாழ்கிறார். இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், என்ற எண்ணம்.

கண்காணித்துக் கொண்டிருக்கிஎன்ற எண்ணம் அவரிடம் எப்போதும் குடிகொண்டிருக்கிறது. மறைவாக சாப்பிட்டாலோ அருந்தினாலோகூட யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனால் ஒரு நோன்பாளி அப்படிச் செய்வதில்லை. காரணம், இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் எண்ணம்தான்.உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உணவையும் தண்ணீரையும்கூட ஒருவர் இறைவனுக்காகத் துறக்கத் தயார் எனும் தியாக மனப்பான்மையை நோன்பு பயிற்றுவிக்கிறது. இந்தப் பயிற்சியைப் பெற்ற ஒருவர் இறைவனை மறந்து பெரும் பாவங்களில் ஈடுபடுவார் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது.நோன்பு இறையச்சத்திற்கான பயிற்சிப் பாசறை ஆகும்.

- சிராஜுல் ஹஸன்.