Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பசித்திருப்பதுதான் நோன்பா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்: “எத்தனையோ நோன்பாளிகள் இருக்கிறார்கள். பசியோடு இருந்ததைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. எத்தனையோ பேருக்கு இரவில் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை.”ஏன், என்ன காரணம்? நோன்பின் மாண்பை உணர்ந்து அவர்கள் நோன்பை மேற்கொள்ளாததுதான். பகல் நேரங்களில் உண்ணாமலும் பருகாமலும் இருந்தால் போதும், நோன்புக் கடமை பூர்த்தியாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. நோன்பு வைத்துக்கொண்டு சிலர் புறம் பேசுவார்கள். கோள் மூட்டுவார்கள். சிலர் பொய் சொல்வதையும் அதன்படிச் செயல்படுவதையும் கைவிட மாட்டார்கள். சிலர் சண்டை சச்சரவுகளில்கூட ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபடும்போது வாயில் இன்ன வார்த்தைதான் வரும் என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்டவர்களின் நோன்பினால் எந்தப் பயனும் இல்லை என்று நபிகளார் எச்சரித்துள்ளார்:

“ஒருவர் பொய் சொல்வதையும் அதன்படிச் செயல்படுவதையும் விட்டுவிடவில்லை எனில் அவர் பசியோடு இருப்பது குறித்தோ தாகத்தோடு இருப்பது குறித்தோ இறைவனுக்கு எந்தக் கவலையும் இல்லை.”

ஆகவே, நோன்பாளியாக இருப்பவர் தம் சொல், செயல் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரேனும் அவரிடம் சண்டை போட வந்தால், “நான் நோன்பாளி” என்று சொல்லி விலகிவிட வேண்டும்.ஆண்டு முழுவதும் எப்படி எப்படியோ வாழ்ந்துவிட்டு ரமலான் வந்ததும் ஒரு பக்திப் போர்வையைப் போர்த்திக்கொண்டு பள்ளிவாசல் நோக்கி ஓடுவதால் என்ன பயன்? இந்த மாதத்திலும் கூட நோன்பின் மாண்பையும் கண்ணியத்தையும் பேணாமல், தவறான சொல், செயல் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்காமல் நோன்பு வைப்பதில் பொருளே இல்லை.அதனால்தான் நபிகளார் கூறினார்கள்: “எத்தனையோ நோன்பாளிகள் நற்பேறு அற்றவர்களாய் உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும் தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை. மேலும் நோன்புக் கால இரவில் தராவீஹ் தொழுபவர் பலர் உள்ளனர். கண் விழித்திருந்ததைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.”ஆக, ரமலானின் நோக்கம் வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. வயிற்றைப் பட்டினிபோட்டு ஆன்மாவை இறையச்சத்தாலும் இறைஉணர்வாலும் நிரப்ப வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான நோன்பாளிகள் ஆவோம்.

- சிராஜுல்ஹஸன்