Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்கள் திருமணம் காதல் திருமணமா?

ஒரு ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப் படைப் பாவங்களை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இந்த பாவங்கள் ஒருவருடைய சிந்தனைகள், ஆசைகள், அதிர்ஷ்டங்கள் முதலியவற்றைச் சுட்டிக் காட்டும். அதில் முக்கியமான 5ம் பாவம் ஆசையின் வளர்ச்சியைச் காட்டும். அன்பின் வளர்ச்சியை காட்டும்; சிந்தனையின் வளர்ச்சியைக் காட்டும். உயிர் பரிணாமத்தைக் காட்டும். பூர்வ புண்ணிய பாவம் என்று அழைக்கப்படும் 5ம் பாவம். இன்னொரு விதத்தில் அன்பின் மையப் புள்ளியாகத் திகழ்வதால், “காதல் பாவம்” என்று சொல்வார்கள்.

ஜாதகர் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஐந்தாம் பாவத்தையும் ஏழாம் பாவத்தையும் லக்ன பாவத்தையும் இணைத்துச் சொல்லும் வழக்கம் உண்டு.எதிர்பாலினரை ஈர்க்கும் பாவம் 5ம் பாவம். அன்பின் வெளிப்பாட்டைச் சொல்லும் பாவம். பெரும்பாலும் ஒன்று, ஐந்து, ஏழு பாவங்கள் இணைந்திருந்தால் அவர்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதோடு சந்திரன் புதன் சுக்கிரன் இணைந்திருந்தால் அல்லது ஐந்தாம் பாவாதிபதி இவர்களோடு இணைந்து இருந்தால் கிட்டத்தட்ட அந்த திரு

மணம் காதல் திருமணமாக இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகம். ஆனால், இதில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். காதல் என்பது நாம் நினைப்பது போல அல்ல. பல ஜாதகங்களில் இந்த இணைப்பு இருந்தும் கூட காதல் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அந்த தம்பதியர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், எப்படி வாழ்வார்களோ அப்படி உயிர்ப்புடன் வாழ்கிறார்கள். கும்ப லக்ன ஜாதகம். ஐந்தாம் பாவாதிபதி புதனும் ஏழாம் பாவாதிபதி சூரியனும் லக்னத்தில் இருக்க, லக்னாதிபதி மூன்றாம் பார்வையாக 11-ஆம் இடத்தில் இருந்து இவர்களைப் பார்க்கிறார். இப்பொழுது 1, 5, 7 தொடர்பு ஏற்பட்டு விட்டது. திருமணம் காதல் திருமணம் அல்ல. ஆனால், தம்பதியர் இணைந்து அன்போடு வாழ்கிறார்கள். எனவே, ஐந்தாம் பாவம் காதல் எனும் அன்பு தருகின்ற பாவமாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர, காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வலியுறுத்திக் கூற முடியாது.

ஆனால், இப்பொழுது உள்ள காலச் சூழ்நிலையில் கல்லூரியில் படிக்கக்கூடிய அல்லது வேலை பார்க்கக்கூடிய ஒரு பெண்ணின் அல்லது ஆணின் ஜாதகத்தில் ஒன்று, ஐந்து, ஏழு பாவங்கள் இணைந்திருந்தால், அதுவும் அந்தந்த தசா புத்திகள் நடப்பில் இருந்தால், இக்காலச் சூழலில் காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லலாம். ஜாதக பலன்களை காலதேச வர்த்தமானத்தைஅனுசரித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். ஆறாம் பாவம் இணைந்தால், வேலை பார்க்கும் இடத்தில் காதல் நடக்கும். நாலாம் பாவம் கிடைத்தால் உள்ளூரில் அந்தக் காதல் நடக்கும் அல்லது படிக்கும் இடத்தில் காதல் நடக்கும்.ஏழாம் பாவம் இணைந்தால், பொது வெளியில் சந்தித்துக் கொண்டு அந்தக் காதல் மலர்ந்திருக்கும்.

இது காதலர்களுக்கு மட்டுமல்ல, ஆழமான நட்புக்கும் இந்த பாவங்களை இணைக்கலாம். காரணம், ஏழு என்பது களத்திரம் மட்டுமல்ல; நண்பர்களையும் சுட்டிக் காட்டுகின்ற பாவம். ஐந்து, ஏழாம் பாவம் லக்னத்தோடு தொடர்பு கொண்டால் அந்த ஜாதகத்தில் ஆழமான நட்புப் பிணைப்பு இருப்பதைக் காணலாம். 5ம் பாவம் 11-ஆம் பாவத்தோடு இணைகின்ற பொழுது, காலம் கடந்த காதல் சிலருக்கு உருவாகி விடும் (தசாபுத்தி உதவினால்). ஒரு உதாரண ஜாதகம். மிகப்பெரிய கலைஞர். இப்பொழுது அவர் உயிருடன் இல்லை. ரிஷப லக்ன ஜாதகம். ஐந்துக்குரிய புதன் 11. ல் நீசம்.. 10-க்குரிய சனி ஐந்தில்.

பத்தாம் பாவமும் ஐந்தாம் பாவமும் இணைந்தாலும் அல்லது 5க்குரியவன் பத்தில் இருந்தாலும், அவர்கள் கலைத்தொழிலில் பிரகாசிக்கும் வாய்ப்பு அதிகம். ஐந்தாம் பாவம் கலையையும் பத்தாம் பாவம் ஜீவனத்தையும் சுட்டிக் காட்டும். இந்த இரண்டும் இணையும் பொழுது கலை வழியாக ஜீவனம் என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். ஜாதகத்தில் 10 க்குரிய சனி 5ல் ; 5 க்குரிய புதன் 11ல்; இவருடைய பிற்காலத்தில், ஒரு காதல் உருவாகி குடும்பத்தில் புயல் வீசியது. காரணம் இங்கே 5, 11 இணைந்திருக்கிறது. ஐந்து என்பது அன்பு. 11 என்பது ஆசை. 11 என்பது 12-ஆம் பாவத்துக்கு முந்தைய பாவம் என்பதால், காலம் கடந்த ஆசையைக் குறிக்கிறது.

என்னுடைய நண்பர் ஒருவரின் ஜாதகம். சிம்மலக்னம். இரண்டுக்குரிய புதன் ஐந்தில்; ராசிக்கு 5ல் சுக்கிரன். லக்னப்படி புதனும், ராசிப்படி சுக்கிரனும் இணைந்த இந்த ஜாதகத்தில், 24 வயதில் காதல் திருமணம் நடந்தேறியது. அவர்கள் இப்பொழுது ஒரு பெண் குழந்தையுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு ஜாதகம். கன்னி லக்னம். ஐந்தாம் இடத்தில் குரு. அவர் 4 க்கு

உரியவர். நாலு என்பது வீடு. ஐந்து என்பது அதிர்ஷ்டம். நல்ல அதிர்ஷ்டமான வீடு இவருக்கு அமைந்தது. நாலாம் பாவம் ஐந்தாம் பாவத்திற்கு 12 ஆம் பாவம் என்பதால், ஏற்கனவே சொல்லியபடி இந்த வீடு இவருடைய பூர்வீகத்தில் இல்லை வெளியூரில் அமைந்தது.

கன்னி லக்னத்திற்கு ஏழாம் அதிபதி குரு அல்லவா. ஏழு என்பது மனைவி. அவர் ஐந்தில் அமைந்ததால் காதல் திருமணம். 7,4 க்கு உரியவர் 5 ல் அமைந்ததால் மனைவி அமைந்தபின் இந்த வசதியான வீடு அவருக்கு அமைந்தது. காரணம் ஏழு மனைவி; ஐந்து காதல் மற்றும் அதிர்ஷ்டம்; நான்கு என்பது வீடு.

பொதுவாக ஐந்தாம் இடம் பலமாக இருந்தால் அவர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாக, எளிதாக எந்த விஷயத்தையும் நிர்வாகம் செய்யக் கூடியவர்களாக, எந்த கஷ்டத்தையும் ஜீரணித்து அதற்கான தீர்வைக் காண்பவர்களாக விளங்குவார்கள். ஐந்தாம் பாவம் வலிமையாக இருக்கின்றவர்கள் குலதெய்வக்கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். எது எப்படி ஆயினும் வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இவர்களுக்கு நிறைய இருக்கும். 5ம் பாவம் நல்லபடியாக அமைந்தால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு; ஏற்றம் உண்டு; புகழ், பொருள் உண்டு. ஐந்தாம் பாவம் மாறாக அமைந்தால் அதே பிள்ளைகளால் அதிர்ச்சி உண்டு; வருத்தம் உண்டு; அவமானம் உண்டு; துன்பம் உண்டு.

ஐந்தாம் பாவம் சரியாக அமையாமல் அல்லது அந்த ஐந்தாம் பாவத்தோடு ஏதேனும் தீய கிரகம் பார்த்தாலும் சேர்ந்தாலும் அவர்களுக்குப் பிள்ளைகள் பற்றிய கவலை மனதில் அரித்துக்கொண்டே இருக்கும். ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவாதிபதியும் எட்டாம் பாவாதிபதியும் இணைந்திருந்தால், அவர்களுக்கு நிச்சயம் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அது கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் எப்பொழுதும் பிள்ளைகள் அப்படி இல்லையே, இப்படி இல்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.ஐந்தாம் பாவத்தின் அற்புதத்தை இன்னும் காண்போம்.