?ராமாவதாரத்திற்கும் கிருஷ்ணாவதாரத்திற்கும் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
- ஆர்.இந்துஜா, போரூர் - சென்னை.
ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களே. இரண்டுமே பரிபூரணமான அவதாரங்கள். உலகில் தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பகவான் எடுத்த அவதாரங்கள். இதில் ஒற்றுமை என்னவென்றால், இரண்டிலும் பகவான் மனிதனாக அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து, தம்முடைய தெய்வீக குணங்களை வெளிப்படுத்தினார்.
வேற்றுமையைப் பார்த்தால், ராமாவதாரம் திரேதாயுகத்திலும், கிருஷ்ணாவதாரம் துவாபரயுகத்திலும் நிகழ்ந்தவை. பகவானிடம் எண்ணற்ற கல்யாண குணங்கள் உள்ளன. அவற்றில் சௌசீல்யம் மற்றும் சௌலப்யம் ஆகிய இரண்டு குணங்களை ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் மிக அழகாக வெளிப்படுத்துகின்றன. சௌசீல்யம் என்பது உயர்ந்த நிலையில் இருப்பவர், தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களோடு எந்த வேறுபாடும் பாராமல் எளிமையாகப் பழகுவது. ராமாவதாரத்தில் இந்த சௌசீல்ய குணத்தைத் தெளிவாகக் காணலாம்.
குகன், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்களிடம் ராமன், தானே சென்று அன்புடன் பழகினான். அவர்களை அரவணைத்தான். அவர்களுடைய தோளில் கைபோட்டுக் கொண்டான். ஆனால், அவர்கள் ராமனைத் தங்களுடைய தலைவனாகவும், அரசனாகவும், வணக்கத்திற்குரியவனாகவுமே கருதினார்கள். கிருஷ்ணாவதாரத்தில் இதைவிட ஒரு படி மேலான சௌலப்யம் வெளிப்படுகிறது. ஆயர்பாடியில் கிருஷ்ணன் ஆயர்களோடும் ஆய்ச்சியர்களோடும் குழந்தைகளைப் போலப் பழகினான்.
யசோதையால் கட்டப்பட்டான். ஆயர்கள் அவனுடன் விளையாடினார்கள். அவன் தோள்மீது ஏறி நின்றார்கள். அவனைத் தங்களுள் ஒருவனாகவே கருதினார்கள். பகவானின் பரம்பொருள் தன்மையை மறந்து, அவரிடம் மிகவும் நெருக்கமாகப் பழகும் அளவுக்கு கிருஷ்ணன் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டான்.அதனால், ராமன் பக்தர்களிடம் சென்று அவர்களை அரவணைத்துக்கொண்ட சௌசீல்யத்தை வெளிப்படுத்தினான்.
கிருஷ்ணன், பக்தர்களுக்கு மிகவும் எளியவனாகி, அவர்களே தன்னை அணைத்துக் கொள்ளும் சௌலப்யத்தை வெளிப்படுத்தினான். ஒருவகையில் சொன்னால், ராமாவதாரம் “பகவான் நம்மிடம் வந்து நெருங்குகிறார்” என்பதை உணர்த்துகிறது. கிருஷ்ணாவதாரம் “நாம் பகவானிடம் சென்று அவரை நம்முடையவனாகவே அனுபவிக்கலாம்” என்பதை உணர்த்துகிறது. எனவே, இரு அவதாரங்களிலும் பகவானின் பரிபூரணத்தன்மை ஒன்றே என்றாலும், ராமாவதாரத்தில் சௌசீல்யமும், கிருஷ்ணாவதாரத்தில் சௌலப்யமும் சிறப்பாக வெளிப்பட்டன என்பதே இந்த இரண்டு அவதாரங்களின் அழகான வேறுபாடு.
?பக்தி என்றால் என்ன?
- சுகந்தி ராஜகோபாலன், திருச்சி.
இறைவனை நினைப்பது மட்டும் பக்தி அல்ல. இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற நினைவோடு வாழ்வதே உண்மையான பக்தி.
?சாமியாடல் என்பது உண்மையா?
- கனகவல்லி, சிதம்பரம்.
உண்மைதான். சாமியாடல் என்று சொல்லப்படுவது குறித்து பல கருத்துகள் இருக்கலாம். ஆனால், பலமுறை இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் திருப்பதி ஏழுமலையானை வேண்டிக்கொண்டு, வீதி வலம் வந்து, மடிப்பிச்சை ஏந்தி, பாதயாத்திரையாகத் திருப்பதிக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அப்படி பக்தர்கள் கூட்டமாக ஊர்வலமாகச் செல்லும்போது, சிலருக்கு சாமி வருவதை நேரில் பார்த்திருக்கிறேன்.
அந்த நிலையில் அவர்கள் சில நேரங்களில், நாம் மறந்துவிட்ட விஷயங்களைக்கூடச் சரியாகச் சொல்வார்கள். நாம் செய்த சில தவறுகளைக்கூடத் தெரிவிப்பார்கள். நாமே மறந்துபோன ஒரு விஷயம் இவர்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று ஆச்சரியப்படத் தோன்றும். ஆனால், அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
இதுபோன்ற குறிப்புகள் நம்முடைய பழைய தமிழ் இலக்கியங்களிலும் காணப் படுகின்றன. சங்க இலக்கியம் தொடங்கி, ஆழ்வார்களின் பாசுரங்கள் வரையிலும் சாமியாடல் போன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் உள்ளன.குறிப்பாக, அகத்துறைப் பாடல்களில், தலைவனை நினைத்து, பிரிவுத் துயரால் மெலிந்து போகும் தலைவியின் நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பார்கள். அப்போது சாமியாடல் வந்த பெண் ஒருத்தி, அந்தப் பெண்ணின் நிலைக்கான காரணத்தை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகளும் இலக்கியங்களில் வருகின்றன.
இதனால் சாமியாடல் என்ற பெயரில் நடப்பவை அனைத்தையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதில் சில போலிகளும் இருக்கலாம். ஏமாற்றுபவர்களும் இருக்கலாம். ஆனால் அதற்காக, நம் முன்னோர்கள் அனுபவித்ததும், இலக்கியங்களில் பதிவாகியிருப்பதும், நேரில் நாம் காண்பதும் என அனைத்தையும் பொய் என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
?இறைவனுக்கு மிகவும் பிடித்த காணிக்கை எது?
- சந்தானகோபால கிருஷ்ணன், திருப்பதி.
தங்கமும் வெள்ளியும் அல்ல. “நான்” என்ற அகங்காரத்தை இறைவனிடம் ஒப்படைப்பதே மிகப் பெரிய காணிக்கை.
?ஏன் கோயிலைச் சுற்றி வருகிறோம்?
- மு.கிரிராஜன், முசிறி.
நம் வாழ்க்கையின் மையம் நாமல்ல, இறைவன்தான் என்பதை உணர்த்துவதற்காகவே பிரகாரத்தைச் சுற்றி வருகிறோம்.
?கர்மாவை மாற்ற முடியுமா?
- ஜெ.வினோத்பாபு, தரமணி - சென்னை.
கடந்த கர்மாவின் விளைவுகளை முழுவதும் தவிர்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால், நல்ல செயல், பக்தி, இறை அருள் மூலம் அதன் தாக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.
?இறைவன் நம் பிரார்த்தனையைக் கேட்கிறாரா?
- சு.ராமய்யா, மதுரை.
வார்த்தைகளாகச் சொல்லும் பிரார்த்தனையைவிட, கண்ணீராக வெளிப்படும் பிரார்த்தனையை இறைவன் நிச்சயம் கேட்கிறார்.
?வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வம் எது?
- பாரதி கண்ணம்மா, திருநெல்வேலி.
பணம் இருந்தால் வசதி கிடைக்கும்; நிம்மதி இருந்தால் வாழ்க்கையே செல்வமாகிவிடும்.
?ஏன் பெரியவர்கள் தினமும் நாமஸ்மரணம் (நாமத்தையே நினைத்தல்) செய்யச் சொன்னார்கள்?
- வசந்தா, கும்பகோணம்.
மனம் எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறுகிறது. இறைவனை நினைத்தால் மனமும் இறைவனை நோக்கியே மாறுகிறது. இதற்கு நாமஸ்மரணம் உதவும்.
?மனிதனின் மிகப் பெரிய எதிரி யார்?
- வாசுதேவன், ஈரோடு.
வெளியில் இருப்பவர் அல்ல. நம்முடைய கோபம், ஆசை, அகங்காரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நாமே நமக்கு எதிரி.
?இறைவனுக்கு அருகில் இருப்பது எப்படி?
- உஷா கந்தசாமி, திண்டிவனம்.
ஆயிரம் மைல் பயணம் செய்து, கோயிலுக்குச் செல்வதைவிட, ஒரு நல்ல செயல் செய்து இறைவனுக்கு அருகிலும் செல்லலாம். நற்செயலே இறைவனின் அருளால்தான் நடக்கிறது.
?இறைவனை அடைவதற்கு எளிய வழி எது?
- சுதர்சனம், கோவை.
பெரிய தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. அன்புடன் இறைவன் நாமத்தைச் சொல்லுங்கள்; அதுவே எளிய வழி.
?நோய்களைத் தீர்க்கும் மந்திரங்கள் உண்டா?
- ஸ்ரீநிவாசன், காஞ்சிபுரம்.
நோய்கள் மருத்துவத்தாலும், மருந்துகளாலும் குணமாகும் என்பது உண்மை. நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சையைப் பெறுவது அவசியம். அதே நேரத்தில், மருந்தின் பயனை அதிகரிக்கவும், நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், நோயாளிக்கு மனத்துணையையும் நம்பிக்கையையும் அளிக்கவும் மந்திரபாராயணம் உதவுகிறது என்ற நம்பிக்கையும் நம் மரபில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அண்மையில் ஒரு நண்பர் எனக்கு ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். அதில் ``முத்ரா மோசன சூக்தம்’’ என்ற மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது. இது அதர்வண வேதத்தின் சௌனக சாகையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரிய வேத மந்திரப் பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இதைப் பாராயணம் செய்யும் வேத பண்டிதர்களும் மிகவும் அரிதாக இருக்கிறார்கள்.
அந்தக் காணொளியில் கீழ் ஸ்தாயியிலும் மேல் ஸ்தாயியிலும் மந்திரத்தைப் பாராயணம் செய்திருந்தார்கள். அதன் கீழே பலர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருந்தனர். சிலர் அந்த மந்திர பாராயணத்தால் தங்களுக்கு ஏற்பட்டதாக நம்பும் பலன்களையும் பதிவு செய்திருந்தார்கள். இத்தகைய அனுபவங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
இதேபோல, மதுரையில் என் நண்பர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு. நண்பர் மகன் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் கீழே விழுந்து, வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய தொண்ணூறு வயதான தந்தை, மகனுக்காகத் திரும்பத் திரும்ப விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். அதே இரவு எதிர்பாராதவிதமாக அந்த மருத்துவமனைக்கு வந்த ஒரு சிறந்த மருத்துவர், நிலைமையைப் பார்த்தவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவருடைய உயிரைக் காப்பாற்றினார். மருத்துவர்கள் செய்த சிகிச்சையும், அந்தத் தந்தையின் ஆழ்ந்த பிரார்த்தனையும் இணைந்து அமைந்த அந்த நிகழ்வை அவர்கள் இன்றும் மறக்க முடியாத ஓர் அனுபவமாகக் கருதுகிறார்கள்.
இப்படி பல நிகழ்வுகளை நாம் கேள்விப் படுகிறோம். இவற்றை அறிவியல் ரீதியாக எல்லாவற்றிற்கும் ஒரே விளக்கத்தை அளித்துவிட முடியாது. அதே நேரத்தில், பக்தியின் அனுபவங்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, மருத்துவத்தை நம்புவதும் மந்திரத்தை நம்புவதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. நோய் வந்தால் முதலில் உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும். அதனுடன் மன அமைதிக்காகவும், நம்பிக்கைக்காகவும், இறை அருளை வேண்டியும் மந்திர பாராயணம் செய்யலாம்.
மருத்துவம் தன் கடமையைச் செய்யட்டும். மந்திரம் நம் மனத்திற்கு நம்பிக்கையைத் தரட்டும். இறைவனுடைய அருள் நமக்கு துணையாக இருக்கட்டும். ஆனால் மந்திரத்தின் பலனை உணருவதற்கு ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும், மன ஒருமைப்பாடும் வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களின் அனுபவம்.
?கோயில்களில் யாகபேரர் என்ற மூர்த்தி ஏன்?
- சுமதி வரதராஜன், சேலம்.
ஆகம விதிகளின்படி, கோயில்களில் ஒரே ஒரு உற்சவ மூர்த்தி மட்டுமே இருப்பதில்லை. கோயிலில் நடைபெறும் வெவ்வேறு உற்சவங்களுக்கும், திருக்காரியங்களுக்கும் ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி இருப்பார்கள். ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு குறிப்பிட்ட பணியும், அதற்கேற்ற திருநாமமும் உண்டு. அவற்றில் யாக பேரர், சயன பேரர், தீர்த்த பேரர் போன்ற திருநாமங்கள் குறிப்பிடத்தக்கவை. யாகபேரர் என்பது யாகசாலையில் எழுந்தருளும் மூர்த்தி. பிரம்மோற்சவம் போன்ற முக்கியமான உற்சவங்களின்போது யாக சாலையில் நடைபெறும் ஹோமங்கள் மற்றும் வேத பாராயணங்களைக் காணும் வகையில், இந்த மூர்த்தி அங்கு எழுந்தருளுவார். மூலவர் சந்நதியிலிருந்து யாகசாலைக்கு எழுந்தருளி, அங்கு நடைபெறும் யாக காரியங்களை ஏற்றுக்கொள்வதாக ஆகம மரபு கூறுகிறது.
தீர்த்த பேரர், தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகளில் எழுந்தருளுவார். உற்சவத்தின் நிறைவாக நடைபெறும் தீர்த்தவாரியில், இந்த மூர்த்தியே தீர்த்தமாடுவார். சயன பேரர், தினசரி பள்ளியறை சேவைக்காக எழுந்தருளுபவர். இரவு நேரத்தில் பள்ளியறைக்கு எழுந்தருளி, பள்ளியறை சேவையை ஏற்றுக்கொள்வார். இதுபோல, கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுக்கும் அதற்குரிய மூர்த்தி எழுந்தருளும் மரபு இருக்கிறது. இது வெறும் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறை அல்ல. ஆகம விதிகளின்படி, ஒவ்வொரு திருக்காரியத்திற்கும் உரிய முறையில் பகவானை எழுந்தருளச் செய்து, அந்தக் காரியத்தை நிறைவேற்றும் ஒரு சிறப்பான வழிபாட்டு அமைப்பு.
பொதுவாக, இந்த மூர்த்திகள் பிரதான உற்சவ மூர்த்தியைவிட அளவில் சிறியதாக இருப்பார்கள். ஆனால், அளவில் சிறியவர் என்பதால் இவர்களின் முக்கியத்துவம் குறைந்து விடுவதில்லை. எந்த நிகழ்வுக்காக யார் எழுந்தருளுகிறாரோ, அந்த நிகழ்வில் அவருக்குரிய முக்கியத்துவம் முழுமையாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நம் கோயில் வழிபாட்டு மரபில், ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு முறை, ஒவ்வொரு சேவைக்கும் அதற்குரிய மூர்த்தி, ஒவ்வொரு திருக்காரியத்திற்கும் அதற்குரிய ஆகம விதி என்று எவ்வளவு நுட்பமான அமைப்பு இருக்கிறது என்பதை நாம்
புரிந்துகொள்ளலாம்.
தேஜஸ்வி



