Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றிலையில் மை தடவி கணிக்கும் ஜோதிடம் பலிக்குமா?

?குரு எனப்படும் வியாழன் கிரகத்தை ஒன்பது துணைக் கோள்கள் சுற்றி வருவதாக சொல்கிறார்கள். அப்படி எனில் நமது ஜனன ஜாதகத்திலும் அதன் தாக்கம் இருக்குமா?

- ஜெ. மணிகண்டன், வேலூர்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள ஒரு துணைக்கோளைப் பற்றி மட்டும் ஜோதிடவியல் பேசுகிறது. சூரியனுக்கு காலன், சந்திரனுக்கு பரிவேடன், செவ்வாய்க்கு ம்ருத்யு, புதனுக்கு அர்த்தப்பிரகணன், குருவுக்கு எமகண்டன், சுக்ரனுக்கு இந்த்ரதனுசு, சனிக்கு குளிகன் எனப்படும் மாந்தி, ராகுவிற்கு சித்திரபானு மற்றும் கேதுவிற்கு தூமகேது ஆகிய ஒன்பது துணைக்கோள்களைப் பற்றி ஜோதிடவியல் பேசுகிறது. இவர்களுக்கான கிரஹஸ்புடம் போட்டு பலன் உரைக்கும் ஜோதிடர்களும்

இருக்கிறார்கள்.

?பஞ்ச பட்சி சாஸ்திரம் யாருக்காக யாரால் வெளியிடப்பட்டது?

- ஏ. ஜெரால்டு, வக்கம்பட்டி.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது தமிழர்களின் கண்டுபிடிப்பு. தமிழ்சித்தர்களின் மூலமாக பாரம்பரியமாக வந்துகொண்டிருக்கும் கணித முறை ஆகும். தமிழ்சித்தர் ஆன அகத்தியரால் அருளப்பட்டது என்று சொல்வார்கள். அகத்தியரால் அருளப்பட்டு புலிப்பாணி சித்தர் மற்றும் போகர் ஆகியோரால் இது பரப்பப்பட்டது என்று சொல்வோரும் உண்டு. பொதுவாக மக்கள் தங்கள் செயலுக்கான நல்லநேரத்தைக் கணக்கிட இந்த முறை கடைபிடிக்கப்பட்டது. அரசர்கள் போர் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காகவும், வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை தொடங்குவதற்கும் இதனைப் பயன்

படுத்தினார்கள். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளை பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பிரிப்பதோடு அரசு, ஊண், நடை, துயில், சாவு ஆகிய ஐந்து தொழில்களையும் தந்து ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் நமது நட்சத்திரத்திற்கு உரிய பறவை என்ன தொழிலை செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு தங்கள் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி காண்பதே பஞ்சபட்சி சாஸ்திரம் ஆகும்.

?புதிய செயலை துவங்க சிறந்த நாள் அமாவாசையா, பௌர்ணமியா?

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இரண்டும் இல்லை. நிறைந்த அமாவாசையிலும் சரி, நிறைந்த பௌர்ணமியிலும் சரி புதிதாக ஒரு தொழிலைத் துவங்கக் கூடாது. இந்த இரு நாட்களிலும் அன்னதானம் செய்யலாம். இந்த இருநாட்களிலும் செய்யும் அன்னதானமே மிகச்சிறந்த பலனைத் தரும். புதிதாக தொழிலைத் துவங்குவதற்கு வளர்பிறையில் வரும் பஞ்சமி, ஸப்தமி, தசமி, த்வாதசி மற்றும் த்ரயோதசி ஆகிய திதிகளும் தேய்பிறையில் த்ருதியை, பஞ்சமி, ஸப்தமி ஆகிய திதிகளும் உகந்தவை.

?ஆண்டவனின் அடுத்த அவதாரம் எப்போது?

- டி. நரசிம்மராஜ், மதுரை.

கலி முற்றும்போதுதான் கல்கி அவதாரம் என்பது நிகழும் என்பது புராணங்கள் சொல்லும் கருத்து. நவோ நவோ பவதி ஜாயமான: என்கிறது வேதம். அதாவது ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு புதிது புதிதாக மஹநீயர்கள் (மகாத்மாக்கள்) தோன்றிக்கொண்டிருப்பார்கள் என்பது இதன் பொருள். இறைவனின் அம்சமாக உத்தம புருஷர்கள் அவ்வப்போது தோன்றி இந்த உலக மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் மகான்கள் என்று போற்றுகிறோம். இந்த மகான்களை இறைவனின் அம்சம் நிறைந்தவர்களாகப் பார்க்கலாமே தவிர ஆண்டவனின் அவதாரமாகக் கருத முடியாது.

?வெற்றிலையில் மை தடவி கணிக்கும் ஜோதிடம் பலிக்குமா?

- பி.கனகராஜ், மதுரை.

வெற்றிலையில் மை தடவி பார்ப்பது என்பது ஜோதிடம் என்ற கணக்கில் வராது. இதனை அருள்வாக்கு என்ற பிரிவில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க கணிதமும் அறிவியலும் சம்பந்தப்பட்டது. வெற்றிலையில் மை தடவிப் பார்த்துச் சொல்வது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டது.

?அங்கப் பிரதட்சணம் எப்படித் துவங்க வேண்டும்?

- ஏ. ஜெரால்டு, வக்கம்பட்டி.

எந்த ஆலயத்தில் அங்கப்பிரதட்சிணம் செய்யப்போகிறோமோ அந்த ஆலயத்தின் திருக்குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு ஈரத்துணியுடன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு அல்லது திருமண் இட்டுக்கொண்டு ஆலயத்தின் கொடிமரத்திற்கு அருகில் அந்த இறைவனை வணங்கி அங்கப் பிரதட்சணம் செய்யத் துவங்க வேண்டும். உடலில் உள்ள மொத்த அங்கங்களும் தரையில் படும் வண்ணம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி கரங்கள் இரண்டையும் கூப்பிய வண்ணமே பிரகாரத்தின் தரையில் உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும். துவங்கிய இடத்திலேயே அதாவது கொடிமரத்திற்கு அருகில் வந்துதான் முடிக்க வேண்டும். இடையில் எழுந்து உட்காருவது என்பது கூடாது. அங்கப்பிரதட்சணம் செய்து முடிக்கும் வரை மனதில் வேறு சிந்தனை ஏதுமின்றி இறைவனின் திருநாமங்களை மட்டுமே உச்சரித்து வர வேண்டும். பொதுவாக ஆண்கள் மட்டுமே அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும். பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை.

?வயதில் சிறியவர்கள் பெரியவர்களை ஆசிர்வதிக்கலாமா?

- விஜயராகவான், வேலூர்.

கூடாது ஆனால் இதற்கு விதிவிலக்கு உண்டு. அவர் ஞானவிருத்தர், அதாவது ஞானத்தினால் பழுத்தவராக இருந்தாலோ, திருமணம் முதலிய சடங்குகள் செய்யும் பொழுது புரோகிதர் ஸ்தானத்திலிருந்தாலோ அவரை வணங்கலாம். ஆசிர்வாதம் பெறலாம். அங்கு அவர்கள் ஆசி தரவில்லை அவர்கள் ஞானம் ஆட்சி தருகிறது.

?ஏழரைச்சனியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

- சத்யா, பெங்களூர்.

ஏழரைச் சனியாக இருக்கட்டும் கண்டச் சனியாக இருக்கட்டும் அர்த் தாஷ்டமச் சனியாக இருக்கட்டும், அல்லது சனி திசை புத்தி நடக்கட்டும். எல்லாவற்றுக்கும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யலாம்.

1.சனிக்கிழமை நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வரலாம்.

2.நீலோற்பவம் (தாமரை) மலரால் சனி

பகவானை வணங்கலாம்.

3.சனிக்கிழமை ஒருபொழுது விரதம் இருக்கலாம்.

4.பால் அபிஷேகம் செய்யலாம்.

5.கருப்பு வஸ்திர தானம் செய்யலாம்.

6.முதியவர்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

7.ஆஞ்சநேயரை சனிக்கிழமை வணங்கலாம்.

8.பிரதோஷ விரதம் இருக்கலாம்.

9.நீலக்கல் மோதிரம் அணியலாம்.

10.ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாம்.

11.நல்ல புகழ் பெற்ற திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லலாம்.

இவைகள் எல்லாம் சனியின் தீவிரத்தைக் குறைக்கும் பரிகாரங்களாகும்.

?ஏன் இப்பொழுது குற்றங்கள் அதிகமாகிவிட்டன?

- கிருஷ்ணா, திருச்சி.

ஒரே விஷயம் தான். ஆத்மார்த்தமான அன்பு குறைந்து விட்டது எந்த இடத்திலே அன்புக்கு பஞ்சம் வந்துவிடுமோ அந்த இடத்திலே குற்றங்கள் பெரிதாக தோன்றும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்பொழுது நடக்கக்கூடிய குற்றங்களின் பின்னணியைப் பாருங்கள். ஏன் அவன் அந்தக் குற்றத்தைச் செய்தான் என்று ஆராயுங்கள். அங்கே தெரியும் மேலே சொன்ன உண்மைகள். 

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.