?மருளாளி என்பவர் யார்? ஊர் திருவிழாக்களில் பார்க்க முடிகிறதே?
- ஆர்.வித்யா ராஜாராம், சென்னை.
மருளாளி என்றால் தெய்வீக அருள் வந்து ஆடுபவர் என்று பொருள். சாமி வந்து ஆடுபவர் அல்லது அருள்வாக்கு சொல்பவர் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ``மருள்’’ என்றால் தெய்வீக ஆவேசம், தனது இயல்பு நிலையில் இருந்து மாறிய நிலையில் இருப்பது என்று பொருள் காணலாம். பொதுவாக அம்மன் கோயில் திருவிழா, கருப்பசாமி, முனீஸ்வரன் முதலான காவல் தெய்வங் களின் ஆலயத் திருவிழாக்களில் இவர்களை காணஇயலும். அவ்வாறு ஆவேசம் வரும் நிலையைத்தான் மருளேறுதல் என்று சொல்வார்கள். இந்த நிலையில் அவர்களின் பேச்சு, குரல், உடல்மொழி, செய்கை அனைத்தும் இயல்பு நிலையில் இருந்து முற்றிலுமாக மாறி இருக்கும். இந்த மருளேறுதல் என்ற வார்த்தைதான் மருவி மலையேறுதல் என்றாகிவிட்டது.
?பாணலிங்கம் என்பது என்ன?
- அ.யாழினி பர்வதம், சென்னை.
பாணம் என்று சொல்லுக்கு அம்பு என்று பொருள். நர்மதை நதியின் நீரோட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக உருண்டு உருண்டு தேய்வடைந்து இயற்கையாகவே அம்பு போன்று நீளமாக முட்டை வடிவத்தினைப் பெறும் கற்களை பாணலிங்கம் என்று அழைப்பார்கள். நர்மதை நதியின் படுகைகளில் இந்த கற்கள் கிடைக்கின்றன. இதனைத் தனியாக சிற்பிகளைக் கொண்டு லிங்கம் போல் செதுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை இயற்கையாகவே லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றன. இவை இயற்கையாகவே சிவாம்சம் பொருந்தியவை என்று பெரியவர்கள் சொல்வார்கள். பலருடைய இல்லங்களிலும் சிவபூஜைக்கு இந்த பாணலிங்கங்களே பயன்படுத்தப்படுகின்றன.
?வாசலில் காகம் கூவினால், உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்வது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
மனிதனோடு நெருங்கிய தொடர்பு உடைய உயிரினங்கள் உண்டு. விலங்கினத்தில் நாய், ஊர்வனவற்றில் பல்லி என்ற வரிசையில், பறவை இனங்களில் காகத்தினைச் சொல்வார்கள். இவை மூன்றும் மனிதனின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு உடையவை. அதனால்தான் பல்லி சொல்லுக்கு பலன், காகம் கரைதலுக்கு பலன் என்றெல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள். காகம் கூவினால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று பொதுவாகச் சொல்ல இயலாது. தெற்குத்திசையை நோக்கியோ அல்லது வீட்டிற்கு தென் திசையில் இருந்தோ காகம் கரைந்தால் மட்டுமே உறவினர்கள் வருகை என்று பஞ்சாங்கத்தில் பலன் கூறப்பட்டுள்ளது.
?அமாவாசை அன்று நல்ல காரியம் செய்யலாம் என்று சிலரும் செய்யக் கூடாது என்று சிலரும் கூறுகிறார்களே, எது உண்மை?
- வண்ணை கணேசன், சென்னை.
அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உரிய நாள். அந்த நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்வது இல்லை. மகாபாரதத்தில் குருக்ஷேத்ர போர் துவங்குவதற்கு முன்பாக களபலி கொடுப்பதற்குத்தான் அமாவாசை நாளை தேர்ந்தெடுத்து சகாதேவன் பரிந்துரைத்திருப்பாரே தவிர, சுபநிகழ்ச்சிகளைச் செய்வதற்கு அல்ல. அமாவாசையில் நல்ல காரியம் செய்யலாம் என்று சொல்வது சாஸ்திர ரீதியாக ஏற்புடையது அல்ல.
?கார் சக்கரத்திற்கு கீழே எலுமிச்சம்பழம் வைத்து நசுக்கி காரை இயக்கத் தொடங்குவது ஏன்?
- என். இளங்கோவன், மயிலாடுதுறை.
எலுமிச்சம்பழத்தினை தேவகனி என்று சொல்வார்கள். எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தி எலுமிச்சம் பழத்திற்கு உண்டு என்பது நம்முடைய நம்பிக்கை. கார் சக்கரங்களுக்கு கீழே அவற்றை வைத்து காரை இயக்கும்போது, அவை நசுங்கி அதிலிருந்து வெளிப்படும் சாறானது எதிர்மறை சக்திகளை அந்த வாகனத்தின் அருகே அண்டவிடாமல் தடுக்கிறது என்பதாக நம்புகிறார்கள். அதே நேரத்தில், அந்த எலுமிச்சம்பழம் அம்பிகையின் சந்நதியில் இருந்து பிரசாதமாகப் பெறப்பட்டதாக இருக்கக் கூடாது. அம்பிகையின் சந்நதியில் இருந்து பிரசாதமாகப் பெறப்பட்ட எலுமிச்சம் பழத்தினைப் பிழிந்து அந்த சாற்றினை நாம் பருகிவிட வேண்டும். கார் சக்கரங்களுக்கு கீழே வைக்கப்படும் எலுமிச்சம்பழங்கள் கடையில் வாங்கியதாகவோ அல்லது நம் வீட்டு மரத்தில் இருந்து பறித்ததாகவோ இருக்கலாம்.
?வாசமில்லாத பூக்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கக்கூடாதா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இந்த உலகில் இயற்கையாக உற்பத்தியாகும் அனைத்துப்பொருட்களும் இறைவனுக்கு உரியவையே. அந்த வகையில் எல்லா பூக்களையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம் என்பது ஒரு தரப்பினரின் வாதம். அதே நேரத்தில், வாசமுள்ள பூக்கள், தேனை உடைய பூக்கள், மகரந்தம் உள்ள பூக்கள் ஆகியவை இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக ஒரு படி மேலே உயர்த்திச் சொல்லப்படுகிறது. வாசமில்லாத பூக்களை அலங்காரத்திற்கும் வாசமுடைய பூக்களை அர்ச்சனைக்கும் பயன்படுத்துகிறார்கள்.
?நாம் இப்பிறவியில் பிறந்தது வரமா? சாபமா?
- கே. முருகன், சென்னை,
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று ஔவையின் மொழியை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். மனிதப் பிறவி என்பது கிடைத்தற்கரியது. அப்படியெனில் மனிதப் பிறவி எடுத்திருக்கும் நாம் அனைவரும் கடந்த ஜென்மத்தில் பாவத்தைவிட புண்ணியம் என்பதை அதிகமாய் செய்திருக்கிறோம். ஆக, நாம் இந்தப் பிறவியை எடுத்திருப்பது என்பது ஒரு கிடைத்தற்கரிய வரமே. இந்த வரத்தினை நல்லபடியாக உபயோகப்படுத்திக்கொண்டு, மேலும் மேலும் புண்ணிய காரியங்கள் பல செய்து உயர்வடைய முயற்சிசெய்ய வேண்டும்.
?ஆனி, ஆடி மாதங்களில் சுபநிகழ்வுகள் நடத்தலாகாது என்கிறார்களே, ஏன்?
- பி.கனகராஜ், மதுரை.
ஆனி மாதத்தில் புதுமனைப் புகுவிழா (கிருஹபிரவேசம்) தவிர, திருமணம் முதலான மற்ற சுபநிகழ்வுகளை தாராளமாகச் செய்யலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆடிமாதத்தில் சுபநிகழ்வுகளைச் செய்யக்கூடாது என்று எந்த விதியும் கிடையாது. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும், குலதெய்வ வழிபாடு செய்யும் மாதமாகவும் நம்மவர்கள் நினைப்பதால், சுபநிகழ்ச்சிகளைச் செய்வதில்லை. மார்கழி மாதம் தவிர மற்ற மாதங்களில் தாராளமாக சுபநிகழ்ச்சிகளைச் செய்யலாம்.
?சாமிக்கு பூஜை போடுவதற்கு முன்பாகவே உணவருந்துவது சரியா?
- கதிரேசன், பேரணாம்பட்டு.
பசிக்கிறதே பசிக்கிறதே என்று நினைத்துக்கொண்டு இறைவனை வழிபடுவதால் எந்தப் பயனும் இல்லை. பசி தெரியாமல் இருக்க ஏதேனும் கஞ்சி, பால், பழம் ஆகியவற்றை மிதமாக உட்கொண்டு விட்டு, அதன்பிறகுகூட இறைவனை வழிபடலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.



