Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரணத்தை முன்கூட்டியே அறியமுடியுமா?

?அக்னி மூலை என்று நாம் எதை வைத்துக் கூறுகிறோம்?

- கே.எம்.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.

இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை `அஷ்ட திக் பாலகர்கள்’ என அழைக்கிறோம். இவர்கள் முறையே கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளின் காப்பாளர்கள் என வேதம் சொல்கிறது. அந்தந்த திசைகள் அவைகளின் காவலர்கள் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அந்த வரிசையின் படி, தென்கிழக்கு திசையின் காவலன் அக்னி என்பதால் தெற்கும் கிழக்கும் இணைகின்ற அந்த தென்கிழக்கு மூலையானது அக்னி மூலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

?மரணத்தை முன்கூட்டியே அறியமுடியுமா?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

முடியாது. ஜனனமும் மரணமும் இறைவன் செயல். அதை நம்மால் நிச்சயமாக தீர்மானிக்க இயலாது. இறைசக்தியை உணர்ந்த ஞானியரால் மட்டுமே அவ்வாறு தனது மரணத்தை அறிந்துகொள்ள இயலும். சாமானிய மனிதர்களால் நிச்சயமாக மரணத்தை முன்கூட்டியே அறியமுடியாது.

?வீட்டில் குளவி கூடு கட்டினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்களே, உண்மைதானா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

இதுபோன்ற கருத்துக்கள் நம்முடைய நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டவையே அன்றி, சாஸ்திரம் இதனை உறுதிப்படுத்தவில்லை. தேங்காய் உடைக்கும்போது அதில் பூ இருப்பதை அறிவது, குளவி கூடு கட்டுவது, பலாமரம் பிஞ்சு விடுவது, வாழை குலை தள்ளுவது ஆகியவை வம்சவிருத்தியின் அடையாளங்கள் என்று சொல்வதெல்லாம் நம்முடைய நம்பிக்கைதானே தவிர, இதற்கு சாஸ்திர ரீதியாக ஆதாரம் ஏதுமில்லை. ஆனாலும், நல்லவை நடந்தால் ஏற்றுக் கொள்வோம்.

?காலச்சக்கரம் என்பது என்ன? காலதேவன் என்பது எந்த கடவுளைக்குறிக்கும்?

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இந்த பிரபஞ்சம் என்பது சதா இயங்கிக் கொண்டே இருப்பது. அதாவது ஒரு பொருள் உருவாகுதல், பயன்படுதல், அழிதல் ஆகிய மூன்றும் இந்த உலகில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். மனித வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் பிறப்பு, வளர்ச்சி, மரணம் மீண்டும் பிறப்பு என்று இந்த சக்கரமானது சுழன்று கொண்டே இருக்கும். இதைத்தான் காலச்சக்கரம் அல்லது பிரபஞ்ச சக்கரம் என்று அழைக்கிறார்கள். காலன் என்பவர் சூரியனின் குமாரன். அவரே தர்மராஜன் என்றும் அழைக்கப் படுகிறார். ஆம், நீங்கள் நினைப்பது சரியே. எமதர்மராஜனைத்தான் காலதேவன் என்று குறிப்பிடுகிறார்கள்.

?விபரீத ராஜயோகம் என்றால் என்ன? இது யார் யாருக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது?

- பி.கனகராஜ், தூத்துக்குடி.

ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய பாவகங்களின் அதிபதிகள் ஒன்றாக இணைந்து ஒரே பாவகத்தில் சஞ்சரித்தால் விபரீத ராஜ யோகம் என்பது உண்டாகும். இந்த 6, 8, 12 ஆகிய மூன்றுமே கெடு பலன்களைத் தரவல்லது. இவை மூன்றும் ஒன்றாக இணைந்தால் அது விபரீத ராஜ யோகம் எனும் திடீர் அதிர்ஷ்டத்தைத் தரும். லக்ன அதிபதி பலம் பெற்றிருந்தால், தனக்கு கிடைத்த இந்த திடீர் அதிர்ஷ்டத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் திறமை அந்த ஜாதகருக்கு இருக்கும். லக்ன அதிபதி பலவீனமாக இருந்தால் வந்த அதிர்ஷ்டமானது அடுத்த சில வருடங்களுக்குள் அந்த ஜாதகரை விட்டு விலகி விடும்.

?அறுபது வயதிற்கு மேல் எந்த ஜாதகமும் ஜோதிடமும் பாதிக்காது என்று கூறுகிறார்களே?

- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஜனனம் முதல் மரணம் வரை மனிதர்களாகப் பிறந்தவர்கள் அத்தனை பேருக்கும் ஜாதகம் என்பது தனது பணியைச் செய்து கொண்டிருக்கும். கிரஹங்களின் சஞ்சார நிலைக்கு ஏற்பதான் பலன் என்பது நடக்கும். இதில் வயது வரம்பு ஏதும் கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை.

?யாவும் மாயை, பிரம்மம் ஒன்றே மெய் என்று வேதாந்தம் கூறுகின்றதே? அது குறித்து விளக்குங்கள்.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

காற்று என்பது மெய். அதனைக் கண்ணால் காண இயலுமா? கண்ணால் காண இயலாத காற்று என்பது இல்லை என்றால் கண்ணால் காணும் இந்த உடல்தான் உயிரோடு இருக்குமா? நாம் இந்த உலகில் கண்ணால் காணும் அனைத்துமே நிலையற்றவை. சில காலம் மட்டுமே காட்சியளித்து மறைந்துவிடும் மாயை. ஆனால், பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அந்த பரபிரம்மமே மெய். இதைத்தான் உபநிஷத் ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்யப்ருத்வீ என்று சொல்கிறது. அண்டவெளியில் நிறைந்திருக்கும் அந்த இறைசக்தியை அனுபவித்து உணர முயற்சியுங்கள். அதற்குத்தான் அந்தக் காற்று என்கிற உதாரணம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் காற்றுதான் பிரம்மம். அது நம்மிடம் இருந்து விலகிவிட்டால் இந்த மாயா உடம்பும் அழிந்துவிடும்.

?பல தத்துவஞானிகள் காலம், நேரம் என்பது கற்பனை என்று கூறுகிறார்கள், உண்மையா?

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

ஞானியரைப் பொறுத்த வரை இரவு - பகல், இன்பம் - துன்பம், வெற்றி - தோல்வி என்ற பேதம் எதுவும் இல்லாத சமநிலையில் வாழ்பவர்கள். இவை அனைத்தும் கற்பனையே, மாயா லோகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது அவர்களின் சிந்தனை. காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது என்பது உண்மை என்றால், அப்போது காலமும் நேரமும் இருக்கிறது என்றுதானே பொருள். க்ருதயுகம், திரேதாயுகம், த்வாபர யுகம், கலியுகம் என்று சதுர்யுகங்களையும் பற்றி நம்முடைய இதிகாசங்களும் புராணங்களும், சாஸ்திர நூல்களும் தெளிவாக உரைக்கின்றன. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு யுகம் நடந்திருக்கிறது என்பது உண்மை. மனம் இருக்கும் வரை காலம் இருக்கும். ஞானிகள் மனமற்ற நிலையில் பேசுகிறார்கள்.

?ஒரு வீட்டிற்கு நேராக இன்னொரு வீட்டின் நிலைப்படி இருக்கலாமா?

- க.கோகிலாம்பாள், மயிலாடுதுறை.

இரு வீடுகளுக்கும் இடையே குறைந்தது 30 அடி இடைவெளி இருந்தால், அது போல் இருக்கலாம். 30 அடிக்கும் குறைவாக அந்த தெருவின் அகலம் இருந்தால் நேருக்கு நேராக நிலைவாயில்படி என்பது இருக்கக் கூடாது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.