Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குலதெய்வம் கோயிலுக்குப் போக நாள் பார்க்க வேண்டுமா?

? சிவபெருமானுடைய கையிலுள்ள திரிசூலத்தின் தத்துவம் என்ன?

- கார்த்திக் ராஜா, சேலையூர்.

திரிசூலம் என்பது சிவபெருமானின் முக்கிய ஆயுதம். மூன்று கூரிய பிரிவுகளாக இருக்கும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மும் மலங்களை அழித்து, ஞானத்தையும் மோட்சத்தையும் அளிக்கும் தத்துவத்தைச் சொல்லும். இச்சை, கிரியை, ஞானம் ஆகிய சக்தி களையும், சத்வ, ரஜஸ், தமஸ் எனும் குணங்களையும், காலம் (கடந்த, நிகழ்கால, எதிர்காலம்) மற்றும் படைப்பு, காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கும் சின்னமாகும். அம்பிகையின் கையில் உள்ள திரிசூலம் மனம், வாக்கு, உடல் என்னும் மூன்றையும் குறிக்கும். திரிசூலத்தை வணங்குவதன் மூலம் வாழ்வில் தடைகள் நீங்கி, வெற்றி மற்றும் மனஅமைதி கிடைக்கும்.

?சில கோயில்களில் உற்சவ மூர்த்திகளோடு இடையே வேறு சின்னச் சின்ன பெருமாள் விக்கிரகங்களும் இருக்கிறதே, என்ன காரணம்?

- நாகவள்ளி, சென்னை.

ஆகம விதிகளின் பிராகாரம் பிரதான உற்சவ மூர்த்திகள் இருப்பார்கள். சில ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளே இரண்டு பேர் இருப்பார்கள். அவரவர்களுக்கு உற்சவம் ஒதுக்கப்பட்டிருக்கும். தில்லை திருச்சித்ர கூடத்தில் பிரதான உற்சவராக அமர்ந்த கோலத்தில் தேவாதி தேவன் இருப்பார். நின்ற கோலத்திலே சித்ர கூடத்துள்ளான் என்கிற பெயரில் ஒரு பெருமாள் இருப்பார். ஒரு சில உற்சவ நாட்களில் தேவாதி தேவன் வலம் வருவார்.

பெரும்பாலான உற்சவங்களில் சித்ரகூடத்துள்ளான் வருவார். இது இல்லாமல் தீர்த்தப் பேரர், யாக பேரர் என்று பல மூர்த்திகள் இருப்பார்கள். இவர்களுக்கும் திருநாமம் உண்டு. தீர்த்தவாரிகளுக்கு உற்சவ மூர்த்திகளோடு இவர்களும் சென்று தீர்த்தவாரி செய்வவர்கள். தீர்த்த பேரர் மட்டுமே அர்ச்சகரோடு நீரில் மூழ்கி எழுவார். உற்சவ மூர்த்திற்கு கரையில் திருமஞ்சனம் நடக்கும். அதைப்போல யாக சாலைக்கு யாக பேரர் என்கிற மூர்த்தி இருப்பார்.

அவர் முன்னிலையில் தான் யாகங்கள் நடக்கும். சயன பேரர் என்று ஒரு உற்சவமூர்த்தி இருப்பார். அவர் பள்ளியறை பூஜை முடிந்து பள்ளியறைக்கு எழுந்தருள்வார். சில நேரங்களில், தீர்த்தவாரிக்கு சக்கரத்தாழ்வார் எழுந்தருளுவதும் உண்டு. உற்சவ மூர்த்தி கரையில் இருக்க சக்கரத்தாழ்வார் தீர்த்தம் மூழ்கி எழுவார். இதற்கு சக்கர ஸ்தானம் என்று பெயர். திருமலையில் விழா நிறைவில் சக்கர ஸ்தானம் நடைபெறும்.

? சனிப் பெயர்ச்சிக்கு இப்படிப் பயப்படுவதற்கு என்ன காரணம்?

- கவிதா சேஷாசலம், திண்டிவனம்.

மிக முக்கியமான இரண்டு துறைகள் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒன்று ஆயுள். இன்னொன்று ஜீவனம். இது இரண்டும் சனியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவரைப் பற்றிய அச்சம் இயல்பாகவே இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம். தவறு செய்யாத யாரையும் சனிபகவான் தன்னிச்சையாகத் தண்டிப்பதில்லை. எப்பொழுதும் மற்றவர்களுக்கு நன்மையைச் செய்துகொண்டு, நல்ல சிந்தனையோடும் பக்தியோடும் வாழ்ந்தால் சனி உங்களை துன்புறுத்துவது இல்லை. அஷ்டமச்சனி கூட அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரித் தரும்.

?இரைச்சல் இல்லாத ஏகாந்தமான இடத்தில் தான் தியானம் சித்திக்குமா?

- இந்துமதி, திருவானைக்காவல்.

அப்படித்தான் சொல்லுகின்றார்கள். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமல்ல. இதை அனுபவரீதியாகச் சொல்லுகின்றேன். நீங்கள் சப்தம் இல்லாத இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்து பாருங்கள். உங்கள் மனது அப்பொழுதுதான் அதிகமாக இரைச்சல் போடும். சிந்தனை நாலா திசைக்கும் பறக்கும். நீங்கள் உட்கார்ந்து இருக்கலாமே தவிர, தியானம் செய்ய முடியாது. ஆனால், தியானம் செய்யும் மனஉறுதியும் கவனமும் வந்துவிட்டால் எப்படிப்பட்ட இரைச்சலிலும் நீங்கள் தியானம் செய்யலாம்.

அனுபவத்தில் பார்த்திருக்கலாம். பதினைந்து இருபது பேர் உட்கார்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அதில் ஒருவர் இவர்கள் பேச்சையே கேட்காமல் ஏதோ ஒன்றை சிந்தித்தபடி இருப்பார். ‘‘நாங்கள் இவ்வளவு சத்தமாகப் பேசுகிறோமே, உன் காதில் விழவில்லையா?” என்றால், திடுக்கிட்டு ‘‘நான் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தேன். கவனிக்கவில்லை என்ன பேசினீர்கள்?” என்று கேட்பார். இந்த நிலைதான் தியான நிலை. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களுடைய சிந்தனை ஒரு மையப் புள்ளியை நோக்கி வரவேண்டும். அந்த ஈடுபாடும் உள்ளார்ந்த தேடுதலும் அதை நோக்கி நகர்த்தும்.

? மகாபாரதப் போரை கிருஷ்ணனால் தடுத்திருக்க முடியாதா?

- செல்வகுமார், தேனி.

எப்படி தடுத்திருக்க முடியும்? தருமன் சூதாடினார். அதனால் 14 வருடங்கள். வனவாசம் செய்தார். எவ்வளவோ கஷ்டப்பட்டார். அதற்குப் பிறகு தங்களுக்குரிய நாட்டை கேட்டபொழுது துரியோதனன் தர மறுத்து விட்டான். அவர்கள் கடைசியாக ஐந்து வீடு வரை தந்தாலும் போதும் என்று கேட்டுப் பார்த்தார்கள். அதையும் தர மறுத்து விட்டான். இப்பொழுது வேறு என்ன வழி? எனவே போர் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில நேரங்களில் அமைதியை ஏற்படுத்தவும் நியாயத்தைப் பெறவும் போர் அவசியமாகி விடுகிறது.

? கண்ணன்தான் நம்மாழ்வாராக அவதாரம் செய்தார் என்று ஒரு கருத்து வைணவ நூலில் படித்தேன். இந்தக் கருத்து சரிதானா?

- ரங்கனாதன், ராமேஸ்வரம்.

கருத்து சரிதான். இதை ஒரு பாடலாகவே கம்பன் பாடி இருக்கிறார்.

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்

பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து

நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த

கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே.

கிருஷ்ணாவதாரத்தில் அற்புதமான கீதையை கண்ணன் வடமொழியில் அருளிச் செய்தான். ஆனால், அது பெரிய அளவில் மக்களிடத்திலே போய்ச் சேரவில்லை. பகவானுடைய பெருமையையும் புரிந்துகொள்ளவில்லை. எனவே, தானே ஒரு அவதாரம் எடுத்து இந்த விஷயங்களை எல்லாம் தமிழிலே பாட வேண்டும் என்று முடிவெடுத்தான் பகவான். அதற்காகவே துவாபர யுக முடிவில் இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்ற கண்ணபிரான், மறுபடியும் நம்மாழ்வாராக வடிவம் எடுத்து அவதரித்தார் என்று ஒரு கருத்து உண்டு. கிருஷ்ண குதூகலமே நம்மாழ்வாராய் வடிவெடுத்தது என்று வைணவச் சான்றோர்கள் கூறுவார்கள். தன் பெருமையையெல்லாம் திருவாய் மொழியாகப்பாடிக் கொடுத்தார்.

? முருகன் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தலம் இருக்கிறதா?

- வெங்கடேஸ்வரன், சுவாமிமலை.

ஏன் இல்லை? முருகன் பல தலங்களில் நின்ற கோலத்தில் எழுந்தருளி இருந்தாலும் ஒரு சில தலங்களில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆறுபடை வீடுகளிலே திருப்பரங்குன்றத்தில் அவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். இதுதவிர, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொரவாச்சேரி கந்தசாமி கோயிலில், ஒரே கல்லால் ஆன மூலவராக முருகன் மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். திருச்சி அருகே உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் கையில் கரும்பு வில்லேந்தி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நாகப்பட்டினம் மாவட்டம் திருமங்கலம் சிவன் கோயிலில் அமர்ந்த திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.திருஆவினன்குடி (பழனி) ஆலயத்தில் குழந்தை வடிவில் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.

? குலதெய்வம் கோயிலுக்குப் போக நாள் பார்க்க வேண்டுமா?

- வனஜா, மதுரை.

அஷ்டமி நவமி தவிர்த்து எல்லா நாள்களிலும் செல்லலாம், ஒன்றும் தவறில்லை.

? திருஷ்டி என்பது என்ன?

- ஜானகிராமன், அம்பத்தூர்.

திருஷ்டி என்பது கண் திருஷ்டியைக் (கண் எச்சில்) குறிக்கிறது. காரணம் அறியப்படாத உடல்நலக் குறைவு, தொழிலில் திடீர் சரிவு, வீட்டில் உள்ள அசதி, சோம்பல் மற்றும் தடைகள் போன்ற விளைவுகள் திருஷ்டியினால் ஏற்படும். இதற்குப் பரிகாரமாக கற்பூரம், கல் உப்பு, எலுமிச்சை, அல்லது சாம்பிராணி கொண்டு திருஷ்டி சுத்தி போடுவது வழக்கத்தில் உள்ளது. திருஷ்டி சுத்திப் போடும்போது எலுமிச்சையை நறுக்கிப் பயன்படுத்துதல் உண்டு.

தேஜஸ்வி