Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கனவில் யானை, சிங்கம் வந்தால் நல்லதா, கெட்டதா?

?எந்தெந்த பொருட்களை காசு வாங்காமல் இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?

- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

எந்த ஒரு பொருளையுமே யாருக்கும் இலவசமாக கொடுக்க இயலாது. அப்படி ஏதாவது ஒரு பொருளை இலவசமாகத் தருகிறோம் என்று சொன்னால் அது தருமம் என்ற கணக்கில் வந்து சேரும். உப்பு முதலானவற்றை இலவசமாகத் தரக் கூடாது என்று சொன்னாலும் தசதானம் என்று சொல்லப்படக் கூடிய 10 வகை தானங்களில் உப்பு தானம் என்பதும் உண்டு. ஆனால், தானம் கொடுக்கும்போது அத்துடன் வெற்றிலை - பாக்கு மற்றும் தட்சிணையுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இப்படி தானமும் இல்லாமல் தருமம் ஆகவும் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் யாரிடம் இருந்தும் இலவசமாகப் பெற்றால் நாம் அவர்களுக்கு கடன்படுகிறோம் என்றுதான் பொருள். இந்தக் கடன் என்பது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதால் தானம் மற்றும் தருமத்தைத் தவிர எந்தச் சூழலிலும் யாருக்கும் எந்த ஒரு பொருளையும் இலவசமாகக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது.

?வீட்டுப்பூஜை அறையில் வில்வக்காய் வைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்கிறார்களே, வீட்டில் வில்வக்கனி வைத்து வழிபடுவது சரியா?

- ஜெ. மணிகண்டன், வேலூர்.

ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ: என்று வில்வ மரத்தின் பெருமையை பேசுகிறது ஸ்ரீசூக்தம். வில்வமரம் என்பது மஹாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்தது. அதனால்தான் அந்த மரம் ஆலயத்தில் வைத்து வழிபடப்படுகிறது. வில்வமரம் என்பது மஹாலக்ஷ்மி அம்சம் நிறைந்தது என்பதற்காக வில்வக்கனியை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லவில்லை என்பதே நிஜம்.

?புது நகைகள் வாங்கும்போது பூஜையறையில் காமாட்சி விளக்கு அல்லது விக்ரகத்தில் அணிவித்த பிறகு தாங்கள் அணிந்து கொள்கிறார்களே, இது சரியா?

- மல்லிகா அன்பழகன், சென்னை.

நகை என்பதை அம்பிகையின் பிரசாதமாக எண்ணி இவ்வாறு செய்கிறார்கள். இது அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படும் சம்பிரதாயம். இதை தவறு என்று சொல்ல இயலாது. இவ்வாறு செய்வதால் அந்த நகையில் ஏதேனும் தோஷம் இருந்தாலும் அது இறையருளால் நீங்கிவிடுகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.

?பொய் பேசுவதே பாவம் என்கிறபோது நல்ல விஷயங்களுக்காக பொய் சொல்வது தப்பில்லை என்கிறார்களே, இது சரியா?

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் - என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பிறருக்கு எந்தவிதக் குற்றமும் இல்லாத நன்மையை ஒரு பொய்யான சொல் தரும் என்றால் அந்த பொய்யான சொல்லும் உண்மைக்கு நிகர் ஆனதாகவே கருதப்படும் என்பது இந்தக் குறளின் பொருள் ஆகும். ஆக சுயநலத்திற்காக பொய் சொல்வதுதான் தவறு, ஒருவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது துன்பத்தில் இருந்து விடுவிக்கவோ பொய் சொல்வதில் எந்தவிதமான தவறும் இல்லை என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து ஆகும்.

?பரிகாரம் பாதிப்பைப் போக்குமா?

- டி. நரசிம்மராஜ், மதுரை.

பரிகாரம் என்பது பாதிப்பைப் போக்கும் என்று சொல்வதை விட அந்த பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதே போல நாம் செய்த கர்மவினையின் காரணமாக உண்டாகும் பாதிப்பினை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் பரிகாரம் என்பது தந்துவிடுகிறது என்பதால்தான் பரிகாரம் செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

?வீட்டிற்குள் ஒருவர் பயன்படுத்தும் துணிகளை இன்னொருவர் பயன்படுத்தலாமா?

- வி.மதுமிதா, மடிப்பாக்கம்.

வீட்டிற்குள் இருப்பவர்கள் எந்த பாலினத்தவராக இருந்தாலும் ஒருவர் உபயோகப்படுத்திய துணியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது என்பதே சாஸ்திரம். அதேநேரத்தில் தந்தை, தாய், மகன், மகள், அக்காள், தங்கை, அண்ணன், தம்பி என ஒரே குடும்பத்திற்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருவர் துணியை மற்றவர் உபயோகப்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதுபோன்ற சூழலில் நன்றாக துவைத்து உலர்த்திய துணிகளாக இருந்தால் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். சாஸ்திரம் என்று பார்த்தால் ஒருவர் உபயோகப்படுத்திய துணிகளை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்பதே ஆகும்.

?கனவில் யானை, சிங்கம் வந்தால் நல்லதா, கெட்டதா?

- பாப்பம்பட்டி ரஜினி செந்தில், கோவை.

நல்லதுதான். யானை வந்தால் நல்லறிவு, கௌரவம் முதலான விஷயங்களும் சிங்கம் வந்தால் வெற்றி, பதவி உயர்வு ஆகியவையும் கிடைக்கும் என்று ஸ்வப்ன சாஸ்திரம் சொல்கிறது. அதே நேரத்தில் யானையோ, சிங்கமோ துரத்து வது போல் கனவு வந்தால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கனவு சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

?இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றில் ஆன்மீக சக்தி என்பது எதில் அதிகம் கிடைக்கும்?

- ஆர்.உமாகாயத்ரி, நெல்லை.

இவை மூன்றும் இணைந்த முத்தமிழில்தான் ஆன்மிக சக்தி என்பது அதிகமாக கிடைக்கிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், ஆண்டாள் உட்பட ஆழ்வார் பெருமக்கள் என இவர்கள் அனைவரும் இயற்றமிழின் மூலமாக இறைவனைக் கண்டார்கள் என்றாலும் அந்தப் பாடல்களுக்கு இசையமைத்து பாடும்போது இயலோடு இசையும் கலந்து மனதில் ஆழப் பதிகிறது. அவற்றையே நாடகமாக கண்களால் நேரில் காணும்போது பக்தி என்பது சாமானியனின் மனதில் ஆழ வேரூன்றுகிறது. ஆக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் இணையும்போது துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவியர் இணைந்து தரும் சக்தியை ஆன்மிகம் பெறுகிறது என்பதே அடியேனின் எண்ணம்.

?உடம்பில் துடைக்கும் துணியை கழுத்தில் மாலையாகப் போடக் கூடாது என்கிறார்களே?

- சத்யா, திருச்சி.

உடம்பில் துடைக்கும்போது அந்த துணியானது ஈரமாகிவிடுகிறது. அவ்வாறு ஈரத்துணியை கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்ளக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருப்பதன் காரணம் இதுதான். இறந்தவர்களின் சவத்தை சுமந்து செல்பவர்கள் இவ்வாறு ஈரத்துணியை மாலையாக கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு சவத்தைச் சுமப்பவர்கள் பூணூல் அணிபவர் எனில் அவர்கள் தங்கள் பூணூலை மாலையாக அணிந்திருக்க வேண்டும் என்றும் சாஸ்திரம் உரைக்கிறது.