இறைவனை வார்த்தைகளில் முழுமையாகச் சொல்லிவிட்டதாக நினைப்பவரிடம் ஒரு கேள்வி இருக்கிறது.
“நீ அறிந்தது இறைவனா? அல்லது இறைவனைப் பற்றிய உன்னுடைய எண்ணமா?”
இதுதான் ஆன்மிகத்தில் மிகவும் முக்கியமான கேள்வி.
ஆன்மிகம் வளரவளர அகங்காரம் குறைய வேண்டும். அறிவு வளர வளர பணிவு வர வேண்டும். பக்தி வளர வளர பிறரை இகழும் மனம் குறைய வேண்டும். “எனக்குத் தெரியும்” என்பதிலிருந்து “இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கிறது” என்று வருவதுதான் உண்மையான ஆன்மிக வளர்ச்சி.
ஒரு நிலையில் நாம் கடவுளைத் தேடுகிறோம். அடுத்த நிலையில் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். அதற்குப் பிறகு ஒரு நிலையில், “நான் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பதே என்னுடைய தடையாக இருக்கிறதே” என்று புரிந்துகொள்கிறோம்.
அங்கேதான் தேடல் இன்னும் ஆழமாகிறது. அதனால்தான் வேதாந்தம் நம்மிடம் ஒரு விசித்திரமான உண்மையைச் சொல்கிறது. கடவுளைப்பற்றி எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் இன்னும் கதவுக்கு வெளியே நிற்கிறான்.
“எனக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பணிவுடன் நிற்பவன்தான் அந்தக் கதவைத் திறக்கத் தொடங்குகிறான்.
அதுவே ஆன்மிகத்தின் முதல் அடையாளமாக இருக்கலாம்.
அறிவை விட பணிவு.
வாதத்தை விட அனுபவம்.
அகங்காரத்தை விட தேடல்.
இறுதியில், “கடவுளை நான் கண்டு விட்டேன்”என்று சொல்வதைவிட, “நான் இன்னும் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்வதில்தான் உண்மையான ஆன்மிகத்தின் வாசனை இருக்கலாம்.
ஆன்மிகத்தின் உண்மையான அளவு, நாம் எவ்வளவு வழிபடுகிறோம் என்பதில் மட்டும் இல்லை; அந்த வழிபாடு நம்மை எவ்வளவு மாற்றியிருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நேர்மையாகச் செய்வது.
தனக்கு அதிகாரம் இருந்தாலும் பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பது. தனக்கு வாய்ப்பு இருந்தாலும் அநியாயமான வழியில் முன்னேறாமல் இருப்பது.
தன்னைவிட பலவீனமான ஒருவனைப் பார்த்தால் அவனுக்கு உதவுவது. தனக்கு கிடைத்ததை எல்லாம் தன்னுடையது என்று நினைக்காமல், அதில் பிறருக்கும் பங்கு இருக்கிறது என்று நினைப்பது.
இதுதான் இறைவனுக்குப் பிடித்த வாழ்க்கை என்று நம்முடைய சாஸ்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன.
வெளியே மழை இன்னும் விடவில்லை. நண்பர் தன்னுடைய தேநீர் கோப்பையை மேசையில் வைத்தார்.
“ஆனால் ஒரு சந்தேகம் இருக்கிறது.கடவுள் இருந்தால், அவர் ஏன் நம்மை இப்படிப் படைத்தார்? ஏன் தவறு செய்யும் வாய்ப்பையே கொடுத்தார்?”
நான் சிரித்தேன்.
“அதுதான் சுதந்திரம். நல்லதைச் செய்யும் சுதந்திரம் இருக்கும்போது, தவறைச் செய்யும் சுதந்திரமும் இருக்கும். தவறு செய்யமுடியாத மனிதனை நல்லவன் என்று எப்படி அழைப்பது?
கையில் கத்தி வைத்திருக்கிறவன் ஒருவனைக் கொல்லாமல் இருப்பது ஒரு தேர்வு. கையில் கத்தி கொடுக்கப்படவே இல்லை என்றால், அது தர்மம் அல்ல.
மனிதனுக்குத் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.அந்தத் தேர்வுகளின் வழியாகத் தான் அவனுடைய குணம் உருவாகிறது.அதனால்தான் சாஸ்திரம் வாழ்க்கையை ஒரு பரீட்சை போலவும், ஒரு வாய்ப்பு போலவும் பார்க்கிறது.”
அவர் என்னைப் பார்த்தார்.
“அப்படியென்றால் கடவுளை நிரூபிக்க உன்னிடம் ஆதாரம்
இல்லையா?”
“உனக்கு எந்த ஆதாரம் வேண்டும்?”
“கண்ணால் பார்க்க வேண்டும்.”
“சரி.’’
‘‘கண்ணால் பார்த்துவிட்டாலும், அவர்தான் கடவுள் என்று எப்படி நம்புவாய்?”
அவர் சற்று அமைதியாக இருந்தார்.
நான் தொடர்ந்தேன்.
“நீ ஒருவரைப் பார்த்தாய் என்று வைத்துக் கொள்வோம்.அவர் உன் முன்னால் நின்றார். அவரை நீ கண்ணால் பார்த்துவிட்டாய்.அதனால் அவர் யார் என்பதை முழுமையாக அறிந்துவிட்டாயா? ஒருவருடைய உடலைப் பார்ப்பதற்கும், அவருடைய உள்ளத்தைப் புரிந்து கொள்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? அப்படியிருக்கும்போது, கடவுளைக் கண்ணால் பார்த்துவிட்டால் மட்டும் அவரை
அறிந்துவிட்டோம் என்று எப்படிச் சொல்ல முடியும்?”
கடவுள் என்பது வெறும் உருவம் அல்ல.
உருவத்தில் வெளிப்படுகிற தத்துவம்.
நம்முடைய சாஸ்திரங்கள் இறைவனை வெளியில் மட்டுமல்ல, உள்ளுறையும் பொருளாகவும் பேசுகின்றன. அதனால்தான் பரமாத்மாவை அந்தர்யாமி என்று சொல்கிறோம். அவர் உள்ளே இருக்கிறார். உயிருக்கு உயிராக இருக்கிறார். நம்மால் பார்க்கப்படும் உலகத்திலும் இருக்கிறார். நம்மால் பார்க்க முடியாத உள்ளுணர்விலும் இருக்கிறார். அதனால் கடவுளைத் தேடுவது என்பது ஒரு குறிப்பிட்ட உருவத்தை மட்டும் தேடுவது அல்ல. அந்த உருவத்தின் வழியாக வெளிப்படும் தத்துவத்தைத் தேடுவது.
இங்கே இன்னொரு விஷயம் முக்கியமானது.
கடவுளை அனுபவித்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி அந்த அனுபவத்தைச் சொல்லவில்லை.
ஏன்?
ஒரு சிறிய உதாரணம். சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையில் இனிப்பு இருக்கிறது. அந்த இனிப்பை நாம் ருசிக்கிறோம். ஆனால், இனிப்பை ருசித்த அனைவரும் அதைப்பற்றி ஒரே விதமாகச் சொல்லமாட்டார்கள்.
ஒருவருக்கு அது அதிக இனிப்பாகத் தோன்றலாம். ஒருவருக்கு மென்மையான இனிப்பாகத் தோன்றலாம். இன்னொருவர் அந்த இனிப்பை ஒரு உணவின் அனுபவத்தோடு சேர்த்துச் சொல்லலாம். இன்னொருவர் அதை ஒரு நினைவோடு சேர்த்துச் சொல்லலாம்.
கிழக்கத்திய மெய்ஞானம் மட்டுமல்லாமல், மேலைநாட்டுத் தத்துவவியலாளர்களும், மெய்ஞானிகளும் இந்த ‘சொற்களுக்கு அப்பாற்பட்ட நிலையை’ அணுவணுவாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இறைவனைப் பற்றி அமைதியைத் தவிர வேறு எதை நீ பேசினாலும், அது பொய்யாகவே முடியும் (Nothing in all creation is so like God as silence).”
‘‘எதைப்பற்றி வார்த்தைகளால் பேச முடியாதோ, அதைப் பற்றி நாம் மௌனமாகவே இருக்க வேண்டும் (Where of one cannot speak, thereof one must be silent).”
ஆன்மிக அனுபவத்தின் முதல் அடையாளமே ‘சொல்லொணாத் தன்மை’ (Ineffability) தான்.
‘‘ஒரு அனுபவத்தை மனிதமொழியால் முழுமையாக மொழிபெயர்க்க முடிந்துவிட்டால், அது லௌகீகமான அனுபவமே தவிர ஆன்மிக அனுபவம் அல்ல.”


