Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்புவது பாவமான செயலா?

?பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்புவது பாவமான செயலா?

- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

சர்வ நிச்சயமாக பாவமான செயல்தான். பந்தியில் மட்டுமல்ல, தனியாளாக இருந்தாலும் சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்புவது என்பது பாவமான செயல்தான். ஒரு மனிதன் சாப்பிடுவதற்காக இலையின் முன் உட்கார்ந்து விட்டான் என்றாலே அவனது உடம்பிற்குள் அதாவது வயிற்றுப் பகுதிக்குள் இருக்கும் ஜடராக்னி என்பது விழித்துக் கொள்ளும். அவன் உட்கொள்ளும் ஆகாரமே அந்த அக்னிக்கு உரிய ஆஹூதி ஆகும். அந்தணர்கள் உணவருந்து வதற்கு முன்னால் ஒருவிதமான பழக்கத்தினைக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது இலையில் பாயாசம் முதல் கறி வகைகள், கூட்டு வகைகள், அன்னம், பருப்பு, நெய் ஆகியவை பரிமாறி முடிக்கப்படும் வரை காத்திருந்து இடது கையால் அந்த இலையினைத் தொட்டுக்கொண்டு வலது கையில் சிறிதளவு நீரை எடுத்து காயத்ரி மந்திரம் ஜபித்து அந்த நீரால் இலையை மூன்று முறை சுற்றிவிட்டு கையில் எஞ்சியுள்ள நீரை பருகிவிட்டு ஒரு ஒரு பருக்கையாக ப்ராணாயை ஸ்வாஹா, அபானாயை ஸ்வாஹா, வ்யானாயை ஸ்வாஹா, உதானாயை ஸ்வாஹா, ஸமானாயை ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா என்று சொல்லி எச்சில்படாமல் உட்கொண்டுவிட்டு அதன் பின்னர்தான் சாப்பிடத் துவங்குவார்கள்.

அதாவது தன்னுடைய வயிற்றில் உள்ள அக்னிக்கு ஆஹூதி களைத் தருகிறார்கள் என்பது அதன் தாத்பர்யம். சாப்பிட்டு முடித்த பின்பும் வலது கையில் சிறிது நீரை எடுத்து மறுபடியும் இலையைச் சுற்றிவிட்டு எஞ்சியுள்ள நீரை கீழே விட்டு போஜனத்தை முடிப்பார்கள். இப்படி ஒரு மனிதன் சாப்பிடுவது என்பது ஒரு ஹோமம் செய்வதற்கு சமானமாக சாஸ்திரம் சொல்கிறது. இது அந்தணர்களுக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கு சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் பொதுவானதே. அப்படியிருக்க ஒரு மனிதன் சாப்பிடுவதற்காக பந்தியில் அல்லது இலைக்கு முன்னால் அமர்ந்துவிட்டான் என்றாலே அவன் ஒரு ஹோமம் செய்வதற்கு தயாராகக் காத்திருக்கிறான் என்று பொருள். அவனை அங்கிருந்து எழுப்பினால் அந்த ஹோமத்தினை தடுத்து நிறுத்திய பாவம் என்பது வந்து சேர்ந்து விடும். வயிற்றில் உள்ள ஜடராக்னி ஏமாற்றத்திற்கு உள்ளானால் அந்த பாவம் என்பது பந்தியில் இருந்து எழுப்பியவரை நிச்சயமாகத் தாக்கும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?பொதுவாக ராசிபலனை ராசியின் அடிப்படையில் பார்க்க வேண்டுமா அல்லது லக்னத்தின் அடிப்படையில் பலன் பார்க்க வேண்டுமா?

- கோ. செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.

பொதுவாக ராசி பலன் என்பது அதாவது தின பலன், வார ராசி பலன், மாத ராசி பலன் மற்றும் வருட ராசி பலன் ஆகியவையும் குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகியவையும் நம்முடைய ஜென்ம ராசியின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. இதனை கோச்சாரப் பலன்கள் என்றும் சொல்வார்கள். ராசி என்பது நமது ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் நிலையைக் குறிக்கும். நாம் பிறந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் மற்றும் ராசியில் சந்திரனின் சஞ்சார நிலை இருந்ததோ அதுவே நமது ஜென்ம நட்சத்திரம் என்றும் ஜென்ம ராசி என்றும் பார்க்கப்படுகிறது. ராசி பலனை லக்னத்தைக் கொண்டு பார்க்கக் கூடாது. ஜென்ம ராசியின் அடிப்படையில் பார்ப்பதுதான் ஜோதிட விதி ஆகும்.

?கடிதம் எழுதும்போது தலைப்பில் சிலர் பிள்ளையார்சுழி போடுகிறார்கள். சிலர் ஓம் என்று போடுகிறார்கள். எது நல்லது?

- வண்ணை கணேசன், சென்னை.

கடிதம் என்பது மட்டுமல்ல, எது ஒன்றை எழுதத் தொடங்கினாலும் முதலில் பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்னர் தொடங்குவதே நல்லது. ஓம் என்பது ப்ரணவம். அதனை ஆன்மிகம் தவிர்த்த மற்ற விஷயங்களை எழுதும்போதும் அனாவசியமாகவும் உபயோகிக்கக் கூடாது. எளிதில் புரிந்துகொள்ளும்படியாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பிள்ளையார்சுழி என்பது சாக்லேட் போல. குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் எந்தவிதமான பேதமுமின்றி எல்லா நேரத்திலும் உபயோகப்படுத்தலாம். ஓம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மாத்திரை போல. அதனை தேவைப்படுகின்ற நேரத்தில் மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும். அதனால் பிள்ளையார்சுழியை முதலாகக் கொண்டு எழுதத் தொடங்குவதே நல்லது.

?திருமணத்தின்போது மஞ்சள் ஆடை அணிவதன் சிறப்பு என்ன?

- ஜெ. மணிகண்டன், வேலூர்.

எல்லோரும் மஞ்சள் ஆடை அணிவதில்லையே. இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது. குறிப்பாக தெலுங்கு பேசும் மக்கள், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருசில பிரிவினர்கள் மட்டுமே திருமணத்தின் போது மஞ்சள் ஆடை அணிகிறார்கள். மஞ்சள் என்பது மங்களகரமான செயலைக் குறிப்பதாலும் மஞ்சள் நிறம் என்பது நவகிரஹங்களில் குருவின் ஆதிக்கத்தைப் பெற்றது என்பதாலும் குருபலத்துடன் திருமணம் நடக்கிறது என்பதாகவும் இது போல் மஞ்சள் ஆடை அணிகிறார்கள்.

?உப்பை நாகராஜர் கோவிலில் தலையைச் சுற்றிப் போடுகிறார்களே, அதன் தாத்பர்யம் என்ன?

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

தன்னைப் பிடித்திருக்கும் தோஷம் அனைத்தும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கிறார்கள். திருஷ்டி சுற்றிப் போடும்போது கூட நம் வீட்டுப் பெரியவர்கள் உப்பைச் சுற்றிப் போடுவார்கள் அல்லவா. அது போல இந்தச் செயலையும் செய்கிறார்கள். இது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்ற செயலே ஆகும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.