Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மகாலட்சுமியின் சகோதரி சந்திரனா?

?மரணமில்லா பெருவாழ்வு என்பது என்ன? இறக்காமல் இருப்பதா?

- சிவகுமார், மதுரை.

இறக்காமல் ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும்? அப்படியானால் மரணமில்லாப் பெருவாழ்வு என்று வள்ளலார் சொன்னது பொய்யா என்று கேட்கலாம். வள்ளலார் போன்ற உத்தமர்கள் எப்படி பொய் சொல்வார்கள்? எனவே இறந்தும் இறக்காமல் இருப்பதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு. இதைச் சொன்ன வள்ளலாரை இன்றைக்கும் சிந்திக்கிறோம் வணங்குகிறோம் அல்லவா. இதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு.

?வீட்டினுள் கட்டும் குளவிக் கூட்டினை உடைத்து அழிக்கக் கூடாது என்பது எதனால்?

- என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

எந்த ஒரு உயிரினத்தையும் நாம் அழிக்கக் கூடாது என்பதால்தான். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இவ்வாறு சொல்கிறார்கள். அதே நேரத்தில், மனிதன் வசிக்கும் வீட்டிற்குள் பூனை, நாய் உட்பட மற்ற உயிரினங்களுக்கு அனுமதி இல்லை என்றுதான் சாஸ்திரம் வலியுறுத்தும். கூட்டிற்குள் எந்த பூச்சியும் இல்லை, இறக்கை முளைத்து பறந்துவிட்டது என்பது தெரிந்தால் தாராளமாக குளவிக்கூட்டினை அழித்துவிடலாம். அதில் எந்தவிதமான தவறும் உண்டாகாது.

?கடலில் நீராடும்போது சிலர் புடவைகள் மற்றும் வேட்டிகள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிடுகிறார்களே, இது சரியா?

- எம்.மனோகரன், ராமநாதபுரம்.

சமுத்திரம் மற்றும் புனித தலங்களில் நீராடும்போது நாம் செய்யும் பாவங்கள் நீங்கிவிடுகிறது, தோஷம் என்பதும் நீங்கிவிடுகிறது என்பது நமது நம்பிக்கை. நாம் அணிந்து கொண்டிருக்கும் ஆடையில் நாம் செய்த பாவத்தின் பயனாக தோஷம் என்பது ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால், அதையும் அங்கேயே கழற்றிவிட்டுவிட வேண்டும் என்பது அவர்களது எண்ணமாக உள்ளது. சாஸ்திரப்படி ஆறு, குளம் மற்றும் சமுத்திரம் போன்ற புண்ணிய தீர்த்தங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் குப்பை கூளங்களை போடக்கூடாது. இவ்வாறு தங்களது ஆடைகளை அங்கேயே கழற்றிவிட வேண்டும் என்ற நம்பிக்கையை உடையவர்கள், ஸ்நானம் செய்தபின் அந்த ஆடைகளை கழற்றி ஒரு ஓரமாக அதற்கென தனியாக ஒரு இடத்தில் ஒரு தொட்டிபோல அமைத்து அங்கே போடலாம். நிச்சயமாக ஆடைகளை நீரிலேயே விடக்கூடாது. இதனை சாஸ்திரமும் ஏற்கவில்லை.

?மகாலட்சுமியின் சகோதரி சந்திரனா?

- விஜயலட்சுமி, சென்னை.

ஆம். ‘‘ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:’’ என்று ஒரு திருநாமமே உண்டு. பாற்கடலை கடையும்போது மஹாலட்சுமி தோன்றினாள். அவள் மட்டுமல்ல, சந்திரன், பாரிஜாத மலர், ஐராவதம் போன்ற பிற பொருட்களும் தோன்றின. சந்திரன் பிறப்பின் போது மஹாலட்சுமியும் தோன்றியதால் அவள் சந்திர - சகோதரி என்ற திருநாமம் பெற்றாள்.