Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அன்பைத் தேடும் உலகத்தில்...

ஒரு ரயில் நிலையத்தில் ஒரு தாயும், அவளுடைய பத்து வயது மகளும் ரயிலிலிருந்து இறங்கி, நிலையத்தின் வாயிலைக் கடந்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அன்று அதிகக் குளிராக இருந்தது. அந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல், வீதியோரத்தில் ஓர் ஏழை முதியவர் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் நின்றுகொண்டிருந்தார். அவருடைய தோற்றத்தில் வறுமையும், முகத்தில் சோகமும் காணப்பட்டன.

அதைக் கவனித்த அந்தத் தாய், தன் மகளிடம் சில சில்லறைக் காசுகளைக் கொடுத்து, “மகளே, இந்தக் காசுகளை அந்தத் தாத்தாவிடம் கொடு” என்று கூறினாள். அந்தச் சிறுமியும் மகிழ்ச்சியுடன் அந்த முதியவரிடம் சென்று, “தாத்தா, இதோ உங்களுக்குக் காசு!” என்று அன்போடு கூறி, தன்னிடம் கொடுக்கப்பட்ட பணத்தை அவருடைய பாத்திரத்தில் போட்டாள். அந்தச் சிறுமி கூறிய வார்த்தைகளைக் கேட்ட முதியவரின் முகத்தில் ஒரு சிறிய மகிழ்ச்சி தோன்றியது. அந்தச் சிறுமி தன் தாயுடன் தொடர்ந்து நடந்து சென்றாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தத் தாயும் மகளும் திரும்பிப் பார்த்தபோது, அந்த முதியவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அந்தத் தாய், “ஐயா, உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? ஏன் எங்களைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு அந்த முதியவர் கண்களில் ஏக்கத்துடன், “அம்மா, நான் உங்களிடம் பணம் கேட்பதற்காக வரவில்லை. எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. இத்தனை காலமாக என்னை யாரும் அன்போடு ‘தாத்தா’ என்றோ, ‘மாமா’ என்றோ அழைத்ததில்லை. எல்லோரும் என்னை ஓர் ஏழையாகவும், பிச்சைக்காரனாகவும் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், உங்கள் மகள் என்னை ‘தாத்தா’ என்று அன்போடு அழைத்தாள். அந்த ஒரு வார்த்தை என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளை இன்னும் ஒருமுறை என்னை ‘தாத்தா’ என்று அழைக்கச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

அந்த முதியவரின் வார்த்தைகளைக் கேட்ட தாயின் கண்கள் கலங்கின. அந்தச் சிறுமியும் முதியவரின் அருகில் சென்று, “தாத்தா!” என்று மீண்டும் அன்போடு அழைத்தாள்.

அந்த ஒரு வார்த்தை அந்த முதியவரின் உள்ளத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்! அவருக்குத் தேவைப்பட்டது வெறும் பணம் மட்டுமல்ல; தன்னை ஒரு மனிதராக மதித்து, அன்போடு அழைக்கும் ஒரு வார்த்தையும்தான்!

அன்பான இறைமக்களே! இந்த உலகத்தில் அன்புக்காகவும், ஆதரவான ஒரு வார்த்தைக்காகவும், கனிவான ஒரு பார்வைக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள் ஏராளமானோர் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்குப் பணம் தேவைப்படலாம்; சிலருக்கு உணவு தேவைப்படலாம்; சிலருக்கு உடை தேவைப்படலாம். ஆனால், இன்னும் சிலருக்குத் தேவைப்படுவது அன்பு, ஆறுதல், மரியாதை, ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவையே! நாம் ஒருவருக்குக் கொடுக்கும் சிறிய உதவி அவருடைய உடல் தேவையை நிறைவேற்றலாம். ஆனால், நாம் அவரிடம் காட்டும் உண்மையான அன்பு அவருடைய உள்ளத்தின் காயங்களைக்கூட ஆற்றக்கூடும்.

இயேசு கிறிஸ்து மக்களிடம் அன்பு காட்டினார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களையும், நோயுற்றவர்களையும், ஏழைகளையும் அவர் அன்போடு ஏற்றுக்கொண்டார். இறைவேதாகமம் “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”(மத்தேயு 22:39) என கூறுகிறது. ஒரு கனிவான வார்த்தை, ஓர் அன்பான புன்னகை, ஒரு மரியாதையான அழைப்பு, ஒரு சிறிய உதவி இவை அனைத்தும் ஒருவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்