Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அசத்தும் ஆயில்யம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது நட்சத்திரமாகத் திகழ்வது ஆயில்யம். நாகங்களின் அரசனான ஆதி சேஷனுக்கு உரிய நட்சத்திரமாகக் கருதப்படும் ஆயில்யம், புதனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. ஆன்மிக அதிர்வுகளும், கூர்மையான புத்திக் கூர்மையும், எதையும் சாதிக்கும் அசாத்திய உறுதியும் நிறைந்த முதன்மை நட்சத்திரங்களில் ஆயில்யம் ஒன்றாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது.

ராசி மற்றும் பாதங்களின் அமைப்பு

ஆயில்ய நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் முழுமையாக கடக ராசியில் (சந்திரனின் ஆட்சி வீடு) அமைகின்றன. கடகம் என்னும் நீர் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நட்சத்திரம், வானில் பார்ப்பதற்கு சுருண்டு படுத்திருக்கும் பாம்பு போன்ற வடிவில் காட்சியளிக்கும்.

ஜோதிட ரீதியாக, புதனின் புத்திக் கூர்மையும், சந்திரனின் மனோ காரகத்துவமும், ஆதிசேஷனின் குண்டலினி சக்தியும் இணைவதால், ஆழமான சிந்தனையாலும், சோர்வறியா உழைப்பாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கான தத்துவத்தை இது விளக்குகிறது.

இராமாயணத்தில் மகாவிஷ்ணுவின் ஆதிசேஷ அவதாரமாகக் கருதப்படும் இலட்சுமணன் பிறந்த நட்சத்திரம் ஆயில்யம்தான். எதிலும் தளராத உறுதி, உடல் ஆற்றல் மற்றும் கணப் பொழுதில் முடிவெடுக்கும் சுறுசுறுப்பு ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் பிரதான அடையாளமாகும்.

ஜோதிட வழக்கில் ‘‘மாமியாருக்கு ஆயில்யம்” என்று ஒரு பழமொழி உண்டு; மாமியாருக்கு ஆயில்யம் ஆகாது என்று சிலர் கிளப்பிய புரளி இன்றும் பலர் மனங்களில் விஷமாக இருக்கிறது.

இக்கருத்து மூடநம்பிக்கையே தவிர, எந்தவொரு உண்மையும் இல்லை. இன்றைக்கும் பலர் ஆயில்யம் மாமியாரோடு இணக்கமாக இருக்கிறார்கள். மாமியார்களும் தீர்க்காயுசோடு வாழ்கிறார்கள்.

ஒருவருடைய ஆயுளை அடுத்தவரின் நட்சத்திரம் மட்டும் தீர்மானிக்கும் என்பதை விட மோசமான ஜோதிட பலன் இல்லை. ஆனால் அதுதான் சொல்லப்பட்டு வருகிறது. ஆயில்ய நட்சத்திரப் பெண்ணின் வருகை அந்த இல்லத்திற்குப் பெருமையும் செழிப்பையும் சேர்க்கும் என்பதைக் குறிப்பதே தவிர, வேறு எந்தத் தீங்கும் தராது!

பொதுவான குணநலன்கள்

புதனின் ஆதிக்கம் பெற்றிருப்பதால் இவர்களிடம் நுட்பமான அறிவு, நிர்வாகத் திறன் மற்றும் சாதூரியமான பேச்சுத்திறன் இயல்பாகவே அமையும். எத்தகைய இக்கட்டான சூழலையும் எதிர்கொள்ளும் மனஉறுதியும், மறைமுகமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கூர்மையான அறிவுடையவர்களாகவும், குடும்பத்தினரிடமும் கணவரிடமும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் ஆர்வம் இருக்கும். ரகசியங்களைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். அறிவுக்கூர்மை, கணிதம் அல்லது மருத்துவம் தொடர்பான துறைகளில் ஈடுபாடு இருக்கும். இவர்களின் வயதின் தோற்றத்தைக் கொண்டு எடைபோட முடியாது. இயற்கையை அதிகம் நேசி ப்பவர்கள். பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரேநேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

பாதவாரியான பலன்கள்:

1-ம் பாதம்: தேடல் மிக்க மனம், சாஸ்திரங்களில் ஆர்வம், வெளிப் படையான பேச்சு மற்றும் குடும்பத்தை அரவணைத்துச் செல்லும் குணம்.

2-ம் பாதம்: வியாபாரத்தில் லாபம் ஈட்டும் திறன், கூர்மையான பார்வை, எதிலும் துணிச்சலாக இறங்கும் சுபாவம்.

3-ம் பாதம்: கலைத்துறையில் ஈடுபாடு, சகிப்புத்தன்மை, பிறருக்கு உதவும் மனம் மற்றும் சமூகத்தில் நல்ல பெயர்.

4-ம் பாதம்: ஆன்மிக ஈடுபாடு, உயர்ந்த லட்சியங்கள், மந்திர சாஸ்திரங்களில் ஆர்வம் மற்றும் தியாகச் சிந்தனை.

ஆயில்ய நட்சத்திரத்திற்கு ஜோதிட சாஸ்திரத்தில் ‘மகிழ்ச்சி தரும்’ சிறப்புகள் உண்டு. இந்நாளில் தொடங்கப்படும் காரியங்கள் திறம்பட நிறைவேறும்.

என்ன படிப்பு படிக்கலாம்? என்ன மாதிரியான வேலை கிடைக்கும்?

புதன் புத்திசாலித்தனத்திற்கும், சந்திரன் நீர் வளத்திற்கும், நாகசக்தி ஆராய்ச்சி மற்றும் இரகசியத்துறைகளுக்கும் காரகர்களாக விளங்குவதால், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் கீழ்க்கண்ட துறைகளில் முத்திரை பதிக்கலாம்:

மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை:

மருத்துவர், நரம்பியல் அல்லது உளவியல் நிபுணர், மூலிகை மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறைகளில் சாதிக்கலாம்.

சட்டம், கணக்கியல் மற்றும் நிர்வாகம்:

மத்திய-மாநில அரசுப் பணிகள், சட்டத்துறை, குற்றவியல், தணிக் கையாளர் மற்றும் வங்கி மேலாண்மைத் துறை களில் உயர் பதவிகளை அடையலாம்.

கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம்:

மென்பொருள் பொறியியல் தரவு அறிவியல் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைகளில் கோலோச்சுவார்கள்.

ஜோதிடம் மற்றும் கலைத்துறை:

பாரம்பரிய ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், உளவியல் ஆலோசகர், எழுத்துத் துறை, பதிப்பகம் மற்றும் கலைத்துறைகளில் தனிமுத்திரை பதிப்பார்கள்.

கல்வி வெற்றிபெறக் கவனிக்க வேண்டிய ஜோதிட அம்சங்கள்:

ஜாதகத்தில் புதனும் சந்திரனும் கேந்திர திரிகோணங்களில் பலமாக அமர்ந்தால், இவர்கள் கல்வித்துறையிலும் அறிவாற்றலிலும் உச்சத்தைத் தொடுவார்கள். குருவின் பார்வை ஆயில்ய நட்சத்திரத்திற்குக் கிடைத்தால், மிகப்பெரிய அறிவு ஜீவியாகவும், புகழ்பெற்ற ஆலோசகராகவும் மாறுவார்கள்.

எந்தக் கோயில் செல்ல வேண்டும்?

ஆயில்ய நட்சத்திரத்திற்குரிய முதன்மைத் தலமாக விளங்குவது நாகை மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் அல்லது காளஹஸ்தி ஆகும். இத்தலங்களுக்குச் சென்று ராகு-கேது மற்றும் நாக வழிபாடு செய்வது தோஷங்களை நீக்கி நல்வாழ்வு தரும்.

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பாம்பபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வாழ்வின் தடைகளை விலக்கும்.

ஆயில்ய நட்சத்திரத்திற்கு உரிய தேவர் லட்சுமணப் பெருமாள். அவர் ஆதிசேசனின் அவதாரம் அவரையும் அவரின் தலைவரான ஸ்ரீராமர் சீதாதேவி ஆஞ்சநேயரைச் சேர்ந்து சேவை சாதிக்கும் திருத்தலங்களை தேடி வழிபடலாம்.

ஆயில்ய நட்சத்திரத்திற்குரிய கோவில் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் சாலையில் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் திருத்தேவன் குடி என்கிற ஊரில் கடக ராசிக்கு என ஒருதனி சிவாலயம் இருக்கிறது. அங்கே இருக்கும் இறைவன் கற்கடகேஸ்வரர். அம்பாள் சந்நதிகள் இரண்டு உண்டு. அங்கு சென்று இறைவனை கடக ராசிக்காரர்கள் புனர்பூசம் பூசம் ஆயில்யம் மூன்று நட்சத்திரத்திற்கும் பரிகார பூஜை செய்யலாம் வழிபாடு செய்யலாம்.

பரிகாரங்கள்:

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிதேவதை ஆதிசேஷன் மற்றும் நாகங்கள் ஆவர். எனவே, ஆயில்யம் நட்சத்திர நாளில் நாகதேவதைகள் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. அருகில் உள்ள சிவன்கோயில்களில் உள்ள நாகர்சிலைகளுக்கு பால் வார்த்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். செவ்வாய் மற்றும் நாக தோஷ நிவர்த்திக்காக நாக சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தேவையான உணவு மற்றும் வஸ்திரதானம் அளித்தல்,எறும்புகளுக்கு அரிசி மாவு இடுதல் மற்றும் பறவைகளுக்கு தானியங்களை வழங்குவது புண்ணியத்தைத் தரும்.