Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நல்லறம் போதிப்பதில் நடுநிலைமை

உலகில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரைதான் என்பார்கள். பெரியவர்கள் சிலர் எப்போது பார்த்தாலும் பிறருக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பெரியவர்களை இளைஞர்கள் பார்த்தாலே மெல்ல நழுவி விடுவார்கள். “பெரிசு கண்ணுல பட்டுட்டா அறுத்துத் தள்ளிடுவாரு” என்று ஓடிவிடுவார்கள்.

தேவைப்படும் நேரங்களில் தவிர நாம் அறிவுரைகளைக் கேட்கத் தயாராக இருப்பதில்லை. தேவையற்ற அறிவுரைகளைப் புறக்கணிப்பதிலும் தவறில்லை.

அறிவுரை வழங்குவோர் பெரும்பாலும் தற்பெருமையைத்தான் பேசுகின்றனர். “நான் பார்க்காத பிரச்னைகளா” என்று தொடங்கி தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

அறிவுரை கூறுவதிலும் நல்லறம் போதிப்பதிலும் நடுநிலைமையைக் கைக்கொள்ளுங்கள் என்று மார்க்கம் அறிவுறுத்துகிறது. ஒருவர் விரும்பிக் கேட்கும்போது மட்டும் அறிவுரை வழங்கினால் போதும். விரும்பாத நிலையில் கட்டாய போதனை எந்தப் பயனும் தராது.

இறைத்தூதரின் நெருங்கிய தோழர்களில் ஒருவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத். இவர் மாபெரும் மார்க்க அறிஞர். இறுதி வேதம் குர்ஆனின் ஒவ்வொரு திருவசனமும் எப்போது, எந்தப் பின்னணியில் அருளப்பட்டது என்பதை நன்கு அறிந்தவர். இவர் ஒவ்வொரு வியாழன் அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறி வந்தார். ஏராளமான பேர் அவருடைய வகுப்பில் கலந்து கொள்வார்கள்.

ஒருநாள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊதிடம் ஒருவர் வந்து, “தாங்கள் நாள்தோறும் அறிவுரை கூற வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு அந்த அறிஞர் பெருமகனார், ‘உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று நான் அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நாங்கள் சலிப்படைவதை அஞ்சி (நிலைமை அறிந்து) பக்குவமாக நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார். அதைப் போன்றே உங்களுக்கு நான் பக்குவமாக அறிவுரை கூறுகிறேன்” என்றார்.

அதாவது, இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் எப்போது பார்த்தாலும் அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கவில்லை என்பதைத்தான் நபித்தோழர் இப்னு மஸ்ஊத் தெளிவுபடுத்துகிறார். அவர் மேலும் கூறும்போது “கல்வி, அறிவுரை ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாகப் போதித்து மக்களுக்கு சலிப்பேற்படுத்திவிடாதீர்கள்” என்றும் குறிப்பிட்டார்.

மாபெரும் மார்க்க அறிஞரான ஹஸன் அல்பஸ்ரி அவர்கள் கூறினார்- “மக்கள் தமது முகங்களால் உங்களை முன்னோக்கிக் கொண்டிருக்கும்வரை அவர்களுக்குக் கல்வி, போதனை ஆகியவற்றைக் கூறுங்கள். அவர்கள் முகம் திரும்ப ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு ஏதோ அலுவல்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் குதுபித்திஸ்ஸஆ)

வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் இறைமார்க்கம், மற்றவர்களுக்கு நல்லுரை வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது அளவுக்கு மீறிய அறிவுரைகள் மட்டும் இனிக்குமா என்ன? நல்லறம் போதிப்பதிலும் நடுநிலைமையைக் கைக்கொள்வோம்.

இந்த வார சிந்தனை

“மக்களுக்குக் காரியங்களை எளிதாக்குங்கள். வெறுப்பூட்டாதீர்கள்.”

- நபிமொழி.

- சிராஜுல்ஹஸன்