Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விதியைப் புரிந்துகொண்டால் வேதனையின்றி வாழலாம்!

“விதியின் கரங்களிலே

நாம் விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா....”

- என்பது கண்ணதாசன் பாடல்.

விதி என்பது தலைவிதி என்று நினைக்கிறோம். ஆனால், அது மட்டுமல்ல. ஆன்மிக மற்றும் தத்துவ உலகில் ‘விதி’ என்ற சொல்லிற்குப் பின்னால் பிரம்மாண்டமான அர்த்தங்களும், வாழ்வியல் நெறிகளும் ஒளிந்திருக்கின்றன. அச்சொல்லின் பல்வேறு பரிமாணங்களை நாம் பின்வருமாறு

பிரிக்கலாம்.

 ஆன்மிகத்தில் விதி என்பது நாம் பின்பற்ற வேண்டிய பிரபஞ்ச ஒழுக்கநெறி.

எதைச் செய்ய வேண்டும் என்று சாத்திரங்களும், அறநூல்களும் நமக்குக் கட்டளையிடுகிறதோ, அதுவே ‘விதி’.

“இதைச் செய்” என்பது விதி;

“இதைத் தவிர்” என்பது விலக்கு.

சமூகமும் மனித மனமும் சிதைந்து போகாமல் இருக்க, பிரபஞ்சம் வகுத்த ஒழுங்குமுறைதான் இந்த விதி. இதைத்தான், சித்தர்களும் ஞானிகளும், ஆழ்வார்களும் நாயன்மார்களும், தங்கள் அனுபவங்களின் வாயிலாகவும் பாடல்களின் வாயிலாகவும் நமக்குச் சொல்கிறார்கள்.

நம் தமிழ் மண்ணின் ஆன்மிகப் பாரம்பரியம் என்பது வெறும் தர்க்க வாதங்களால் ஆனது அல்ல; அது சித்தர்கள், ஞானிகள், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் நேரடி அநுபூதிச் செல்வம்.

அவர்கள் அனுபவத்தை தெரிந்து உணர்ந்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

இரண்டாவதாக விதி என்பது வினைகளின் எதிரொலி.

“விதிப்படியே எல்லாம் நடக்கிறது” என்று நாம் சொல்வது, உண்மையில் நம்முடைய முற்பகலின் செயல்களே பிற்பகலில் விளைவாக மாறுகின்றன என்ற கர்மவினைக் கோட்பாட்டைத்தான்.

நாம் விதைத்த வினையே நமக்கு விதியாக வந்து சேர்கிறது. எனவே, விதி என்பது எங்கோ வானத்தில் இருந்து எழுதப்படும் ஒன்றல்ல; அது நம்முடைய சொந்தச் செயல்களின்

எதிரொலி.

 மூன்றாவதாக தமிழ் மரபிலும் ஆன்மிகத்திலும் இறைவனை ‘விதிப்பவன்’ என்பார்கள்.

காண்பாரார் விதியானை என்பார் அப்பர் பெருமான். இங்கு விதித்தல் என்பது படைத்தல் மற்றும் வகுத்தல் என்ற பொருளில் வருகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடக்க வேண்டிய பாதையின் வரைபடத்தை உருவாக்குவதே விதி.

நான்காவதாக விதி என்பதை இயல்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நெருப்பின் விதி சுடுவது; நீரின் விதி குளிர்விப்பது. தேளுக்கு விஷம் இருப்பதும், பாம்புக்கு விஷம் இருப்பதும் இயல்பான விஷயங்கள். தரையில் மீன் வாழாததும், தண்ணீரில் வேறு சில உயிரினங்கள் அதிக நேரம் உயிர் வாழாததும் இயல்பான விஷயங்கள்.

பிரபஞ்சத்தின் அத்தனை இயக்கங்களுக்கும் பின்னால் ஒரு மாறாத இயற்கை விதி இருக்கிறது.

பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்று ஒன்று உண்டு என்பது பிரபஞ்ச விதி.

இந்த விதியின் கரங்களில் நாம் பயணிக்கும்போதுதான், மரணத்தைக் கண்டு சாதாரண மனிதனின் ‘மதி’ (அறிவு) மயங்குகிறது.

இதை வேறு விதமாகவும் பிரிக்கலாம்

 நாம் நமக்காக வகுத்துக்கொண்ட விதிகள்.

பிரபஞ்ச விதிகள்.

உதாரணமாக, நீங்கள் கிரிக்கெட் ஆட வேண்டும், கூடைப்பந்து அல்லது கால்பந்து ஆட வேண்டும் என்றால் அதற்குச் சில விதிகள் வகுத்து வைத்திருக்கிறார்கள் அதன்படிதான் விளையாட முடியும்.போக்குவரத்து விதிகள் என்று சில விதிகள் இருக்கின்றன. அதை அனுசரித்துத் தான் நாம் நடக்க முடியும். வாகனங்களில் செல்லமுடியும். நம் சௌகரியத்திற்கு நடக்க முடியாது.ஆனால், இவை சமூக ஒழுங்கிற்காகவும், சௌகரியத்திற்காகவும் நாமாக வகுத்துக் கொண்டவை. இந்த விதிகள் மாறக்கூடியவை; காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நாம் இவற்றைத் திருத்திக் கொள்ள முடியும்.

சமூகத்தில் மனிதர்கள் அமைதியாக வாழ்வதற்கு அறநெறிகள், ஒழுக்கங்கள் என்ற பெயரில் சில விதிகளை உருவாக்கிக் கொண்டோம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய சிந்தனை முதல், சக மனிதனை மதிப்பது வரை எல்லாமே நம் சௌகரியமான கூட்டு வாழ்க்கைக்காக நாம் ஏற்படுத்திய விதிகள்தான்.

இரண்டாவதாக உள்ள பிரபஞ்ச விதிகள் மாறாதது. மாற்ற முடியாதது. காலையில் சூரியன் உதிக்கிறான், மாலையில் மறைகிறான் என்பது மாற்ற முடியாத விதி. பிரபஞ்சமே தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இயங்கவில்லை, இயங்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

புவியீர்ப்பு விசை, கோள்களின் சுழற்சி, பருவகால மாற்றங்கள், பிறப்பு-இறப்பு சுழற்சி போன்றவை இயற்கையின் விதிகள். இவற்றை மனிதனால் மாற்ற முடியாது. சூரியன் கிழக்கில் உதிப்பதும், நீர் பள்ளத்தை நோக்கிப் பாய்வதும் இந்த விதியின்படிதான். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் இந்த மாறாத விதிகளுக்குக் கட்டுப் பட்டுத்தான் இயங்கியாக வேண்டும்.

மனிதன் விதிக்கும் விதி ஒழுங்குக்காக. இயற்கை விதிக்கும் விதி இயக்கத்துக்காக. விதி இல்லையென்றால் பிரபஞ்சத்தில் பெருங்குழப்பமும் அழிவுதான் மிஞ்சும். இந்தப் பிரபஞ்ச விதிகளின் இயக்கம்தான் அதனுடைய அணு வடிவமான ஒவ்வொரு உயிரினங்களிலும் பிரதி பலிக்கிறது. நம்மைப் போன்ற மனிதர்கள் உள்ளும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. இதை நம்முடைய சித்தர்கள் “அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்தில் உள்ளது” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்தர்களின் வாக்கு, வெறும் தத்துவமல்ல; அது பிரபஞ்சப் பேராற்றலுக்கும் நமக்கும் இருக்கும் பிரிக்க முடியாத தொடர்பை உணர்த்தும் பேரறிவியல்.அணுவின் நடுவில் உட்கரு இருக்க, அதைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன. இதே விதிதான் பிரபஞ்சத்திலும் உள்ளது. பிரபஞ்சத்தின் பெரிய வடிவமும், சிறிய அணு வடிவமும் ஒரே விதியின் படிதான் இயங்குகின்றன.இந்த அண்டம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து கூறுகளால் ஆனது. நம்முடைய இந்த உடலும் (பிண்டம்) அதே ஐந்து கூறுகளால் ஆனதுதான். அண்டத்தில் நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் நம் உடலிலும், மனதிலும் எதிரொலிப்பதற்குக் காரணமே இந்தத் தொடர்புதான்.

“பிரபஞ்சத்தின் எங்கோ ஏதோ ஒரு அசைவு நம்மை அசைக்கிறது”நவீன அறிவியலில் “பட்டாம்பூச்சி விளைவு” (Butterfly Effect) என்று ஒன்று கூறுவார்கள்.உலகின் ஒரு பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதால் ஏற்படும் சிறு அசைவு, உலகின் மறுபகுதியில் ஒரு பெரிய புயலையே உருவாக்கலாம் என்ற கோட்பாடு அது. பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன.

கோள்களின் நகர்வுகளும், விண்வெளியில் ஏற்படும் ஆற்றல் மாற்றங்களும் பூமியில் உள்ள உயிரினங்களின் உணர்வலை களையும், உடல் இயக்கத்தையும் பாதிக்கின்றன என்பதை நம் முன்னோர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டறிந்தனர். சந்திரனின் ஈர்ப்பு விசை கடலில் அலைகளை உருவாக்குவது போல, நம் உடலுக்குள்ளும் எண்ணற்ற அலைகளை அது உருவாக்குகிறது.வெளியிலுள்ள பிரபஞ்சத்தை (அண்டம்) முழுமையாகப் புரிந்து கொள்ள, நமக்குள்ளே இருக்கும் பிரபஞ்சத்தை (பிண்டம்) கவனித்தாலே போதும் என்று சித்தர்கள் கூறினர். உடலையே பிரபஞ்சத்தின் நுழைவாயிலாக அவர்கள் பார்த்தார்கள்.இந்தப் பேரண்டத்தின் ஒரு சிதறல்தான் நாம்; அதனால், பிரபஞ்சத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, அதன் தாள லயத்திற்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும்போதுதான் மனித வாழ்வு முழுமையடைகிறது.