Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருமணப் பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் அவசியம்?

?எனது குடும்பத்தில் ரிஷிதோஷம் இருப்பதாக உணர்கிறேன். இதற்கு பரிகாரம் உள்ளதா? இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்?

- சேகரன், மணப்பாறை.

ரிஷிதோஷம் என்ற ஒரு தோஷமே கிடையாது. நீங்கள் ஏதோ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். ரிஷிபஞ்சமி என்ற விரதம் உண்டு. இது மாதவிடாய் பருவத்தைக் கடந்த வயதுமுதிர்ந்த பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நோன்பு ஆகும். ரிஷிதர்ப்பணம் என்ற ஒன்று உண்டு. இது வேதம் ஓதுபவர்களால் தினசரி செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்றாக இருக்கிறது. ஆனால், ரிஷிதோஷம் என்ற பெயரில் ஏதும் இல்லை. இதற்கு நீங்கள் பரிகாரம் ஏதும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தினமும் காலையில் ``ஓம் நமசிவாய’’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபம் செய்து வாருங்கள். எந்த தோஷம் இருந்தாலும் நீங்கிவிடும்.

?பொதுவாக கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபின் கால் அலம்பக் கூடாது என்று சொல்கின்றனர், அதுபற்றி?

- கோ.செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.

இந்த கருத்திற்கு சாஸ்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இது தவறான தகவலும்கூட. எங்கு வெளியில் சென்றுவிட்டு வந்தாலும், வீட்டிற்குள் நுழையும்போது கால்களை அலம்பிக் கொண்டுதான் உள்ளே வரவேண்டும். கோயிலுக்குச் சென்றுவிட்டு வருகிறோம் என்பதற்காக கால்களில் செருப்பு அணியாமல் வருவதில்லை. நடந்து வரும் பாதை தூய்மையாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போது கால்களை அலம்பினால், தெய்வசக்தி நம்மை விட்டு அகன்றுவிடும் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே. கோயில் உட்பட வெளியில் எந்த ஒரு இடத்திற்கும் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப வரும்போதும், நிச்சயமாக கால்களை அலம்பிக்கொண்டுதான் வீட்டிற்குள் வரவேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?உயிர் எனும் மூச்சுக் காற்று ஆத்மா என்ற பெயரில் அழிவற்று இருப்பது நிஜம் என்றால் முன்னோர்களின் தர்ப்பண கிரியைகளில் காற்றின் துணைதான் முக்கியமா?

- ஆர்.விநாயகராமன், நெல்லை.

இல்லை. மூச்சுக் காற்று என்பது நின்று விட்டால் உயிர் என்பது இயங்காது, உயிர் பிரிந்துபோய் விடும் என்பதுதான் உண்மை. ஆனால் ஆத்மாவிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. மூச்சுக்காற்று நின்றவுடன் உயிர் போய்விடுகிறது. உயிர் பிரிந்தவுடன் உடல்தான் அழியுமே தவிர, ஆன்மா அழிவதில்லை. அந்த ஆன்மா ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என்று மூன்றாக பிரிகிறது. இந்த அந்தராத்மாவிற்குத்தான் நம் முன்னோர்களின் ஆன்மா என்ற பெயரில் வழிபாடு செய்து வருகிறோம். இந்த முன்னோர் வழிபாட்டிற்கு எள்ளும் தண்ணீரும்தான் முக்கியம். காற்றின் துணையைவிட இந்த எள்ளுடன் கலந்த நீரைக் கொண்டுதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆக, பஞ்சபூதங்களில் முன்னோர் வழிபாட்டிற்கு நீர் முக்கியம் என்பதால்தான் நீர் நிலைகளில் அதாவது புண்ணிய தீர்த்தங்களில் முன்னோர் வழிபாடு என்பது சிறப்பு பெறுகிறது. காசி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் என முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் தலங்கள் எல்லாமே நீர்நிலைகள்தான். ஆக, நீரின்றி முன்னோர் வழிபாடு இல்லை என்பதே நிஜம்.

?உலகில் பசி, பஞ்சம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

நீர்நிலைகள் நிரம்ப வேண்டும். இறைவன் நமக்கு அளிக்கும் அருட்கொடை என்பது மழை. அந்த மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும். அதனால்தான் நமது பெரியவர்கள், வான்முகில் வழாது பெய்க, என்றும் பிரதி மாதந்தோறும் மும்மாரி பொழிய வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். நீர் வளம் இருக்கும் இடத்தில் மரம், செடி, கொடிகள் அனைத்தும் வளர்ந்து நிற்கும். பசி பஞ்சம் என்ற பேச்சிற்கே இடம் இருக்காது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பினால் அங்கே பசியும் பஞ்சமும் நிச்சயமாக தலைவிரித்து ஆடும். அவ்வாறு நீர்நிலைகளை அழிப்பவர்கள், இறைவன் நமக்கு அளிக்கும் வரத்தினைத் தடுக்கும் பாபத்தினைச் செய்கிறார்கள்.

?சிலர் துளசி அல்லது பூவினை காதில் செருகிக்கொள்கிறார்களே, அது ஏன்?

- அ.யாழினி பர்வதம், சென்னை.

பழங்காலத்தில் ஆண்களும் பூவினை அணிந்துகொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆண்களும் தலையில் கொண்டை வைத்திருந்தார்கள். அந்த கொண்டையிலே மலர்களை சூடிக் கொண்டார்கள். இதற்கு சங்க இலக்கியங்களிலே நிறைய ஆதாரமும் உண்டு. ராஜராஜசோழனுக்குக்கூட மும்முடிச்சோழன் அதாவது சேர, சோழ, பாண்டிய தேசங்களை ஆள்பவன் என்ற கணக்கில் மூன்று கொண்டைகளை உடையவனாக சரித்திர குறிப்புகள் சொல்கின்றன. நாளடைவில் ஆண்கள் முடியினை வெட்டிக் கொள்ளத் துவங்கி ஆங்கிலேய ஆதிக்கத்திற்குப் பின், அந்தணர்களில் சில குறிப்பிட்ட நபர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே முடியினை வெட்டிவிடுகிறார்கள். ஆண்கள் தங்கள் தலைமுடியில் பூவினைச் சூடிக்கொள்ளும் பாவனையில் அவ்வாறு காதுகளில் செருகிக் கொள்கிறார்கள். அதிலும் வலது காது ஓரத்தில் கங்கை குடிகொண்டிருப்பதாகவும் அதனால் வலதுகாது என்பது நமது உடலில் புனிதத்தன்மை மிகுந்த பகுதியாகவும் ஸ்ம்ருதி களில் சொல்லப்பட்டுள்ளது. அதனால், புனிதத்தன்மை மிகுந்த அந்தப் பகுதியில் இறைவனின் பிரசாதமாகப் பெறப்படுகின்ற துளசியையும் பூவினையும் செருகிக் கொள்கிறார்கள்.

?திருமணப் பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் அவசியம்?

- த.நேரு, வெண்கரும்பூர்.

மனப்பொருத்தம் இருந்தாலே மற்ற எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவாஹம் செய்யலாம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்கின்ற பழக்கம் அதிகபட்சமாக கடந்த 50 வருடங்களாகத்தான் உள்ளதே அன்றி, தொன்றுதொட்டு வருவது அல்ல. நம் குடும்பத்தில் உள்ள தாத்தா - பாட்டிக்குக்கூட பொருத்தம் பார்க்காமல்தான் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பொருத்தம் பார்க்கச் செல்லும் இடத்தில், ஜோதிடர்கூட பத்துக்கு ஒன்பது பொருத்தம் சரியாக உள்ளது, மனப்பொருத்தம்கூடி வந்தால் திருமணம் முடிக்கலாம் என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஆக, மணவாழ்க்கைக்கு மனப்பொருத்தம் என்பதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியானால், ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லையா, வெறும் மனப்பொருத்தம் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் நம் மனதில் எழும். ஜாதகத்தில் பொருத்தம் என்பது இருந்தால் மட்டுமே இருவர் மனதும் ஒத்துப்போகும். இருவர் ஜாதகங்களில் ஏழாம் பாவகம் என்பது ஒத்துப்போனால் மட்டுமே ஒன்றாக பழக இயலும், ஒருவருக் கொருவர் புரிந்துகொள்ள இயலும், ஏழாம் பாவகம் ஒத்துப் போகின்ற ஜாகத்தை உடையவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, நல்ல வாழ்க்கை என்பது அமைகிறது என்பதே பல தம்பதியரின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில் நாம் தெரிந்து கொண்ட உண்மை.