Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சொந்தவீடு அமையுமா: திருமண உறவு நல்லபடியாக அமையுமா?

விதியும் மதியும் 2

நான்காம் பாவம் வீடு. ஆனால் அது நமக்குத் தங்குமா?

அதுவும் ஜாதகத்தில் தெரிகிறது. வீடு கட்டும் வரை உள்ளூரில் இருப்பார்கள். கிரகப்பிரவேசம் செய்த அடுத்த நாள் வெளிநாட்டு வேலை கிடைக்கும். 12ம் பாவ தசாபுத்தி கோசாரம் வந்து நிற்கும்.

நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் 4ம் அதிபதி 12ல் இருக்கிறார்.அவருக்கு வீடு இருக்கிறது.வாடகை வருகிறது.இவர் வேறு ஊரில் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார்.

12ம் பாவம் வீட்டை விட்டு தூரம் செல்லுதல். பிரிதல். சொந்த வீட்டில் வாழமுடியாமல் இருத்தல். இங்கே 4-12 தொடர்பு வீட்டையும் கட்டவைத்து அங்கே வாழ முடியாமலும் செய்தது.

பன்னிரண்டாம் பாவத்திற்கு ஐந்தாம் இடமாக நான்காம் பாவம் அமைவதால், நாம் கஷ்டப்பட்டுச் சேர்க்கும் சொத்தும் வீடும் அடுத்த தலைமுறைக்கு கைமாறுவதோ அல்லது வேறு ஒருவரின் சொத்தாக மாறுவதோ நடக்கும். அதாவது, தான் வாங்கிய வீட்டின் முழுமையான சுகத்தை அனுபவிப்பதை விட, அந்தச் சொத்து அடுத்த சந்ததிக்குச் செல்வதற்கோ அல்லது பிறருக்குப் பயன்படுவதற்கோ விதி வழிவகுக்கும்.

எந்த ஒரு பாவச் செயல்பாட்டிலும் மனிதனின் முயற்சியும் (மதி) முக்கியப் பங்கு வகிக்கிறது. கடன் வாங்கி வீடு கட்டினாலும், அதைச் சரியான திட்டமிடலுடன் உரிய காலத்தில் கட்டி முடிப்பதும், இடமாற்றங்களைச் சாதகமாக மாற்றிக்கொள்வதும் மனிதனின் விவேகத்தைப் பொறுத்தது.

ஜாதகத்தின் பன்னிரண்டு பாவங்களும் (Bhavam - தன்மை) தனித்தனியாக இயங்குவதில்லை; மாறாக, ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் தீர்மானிக்கின்றன.

சந்திரன் நாள்தோறும் பன்னிரண்டு ராசிகளிலும் இடைவிடாமல் சுழன்றுகொண்டே இருக்கிறான். சந்திரன் மனோகாரகன். ஒவ்வொரு மனிதனின் மனதையும் சிந்தனையையும் குறிப்பவன்.. மனம் எப்படி முடிவெடுக்கிறதோ, அதற்குத் தகுந்தாற்போலவே நமது வாழ்வியலும் அந்தந்த ராசிகளின் ஆற்றலுக்கு ஏற்ப இயங்கிக்கொண்டே இருக்கிறது.

ஒரு சூழ்நிலை நமக்கு முன்பாக வரும்போது, அது என்னவென்று நமக்குத் தெரியும்; ஆனால், அந்தச் சூழலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது நமது மனம் மற்றும் சிந்தனை மட்டுமே!

பத்தாம் பாவம் என்பது தொழில், பதவி, புகழ், சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கும். ஆனால், உயர்ந்த பதவி கிடைப்பது மட்டுமே நன்மையா? அந்தப் பதவியால் ஏற்படும் பொறுப்புகளையும் அழுத்தங்களையும் தாங்க முடியாமல் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளானால், அதே பதவி அவருக்குச் சுமையாகவும் மாறிவிடும்.

ஒருவருக்குப் பெரிய பதவி கிடைக்கிறது. அதன் மூலம் அதிகாரமும் வருமானமும் புகழும் கிடைக்கின்றன. இன்னொருவருக்கும் அதேபோன்ற பதவி கிடைக்கிறது. ஆனால், அவர் அலுவலகப் பொறுப்புகள், காலக்கெடு, போட்டி, நிர்வாகச் சிக்கல்கள் ஆகியவற்றால் நிம்மதியை இழக்கிறார்.

இருவருக்கும் பத்தாம் பாவம் தொழில் உயர்வைக் காட்டுகிறது. ஆனால், அந்த உயர்வை ஒருவர் வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்; மற்றொருவர் அதைச் சுமையாக உணர்கிறார். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ஒரு பலன் கிடைப்பது மட்டுமல்ல, அந்தப் பலனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம் என்பதுதான்.

இன்னொரு உதாரணம். ஜாதகத்தில் ஆறாம் பாவமும் (நோய்/எதிர்ப்பு) பனிரெண்டாம் பாவமும் இணைந்து, அதனுடன் எட்டாம் பாவமும் தொடர்பு கொள்ளும் போது, உடல்நிலையில் சில பாதிப்புகளும் சவால்களும் ஏற்படுவது விதியின் திட்டமாக இருக்கலாம். ஆனால், அந்த உடல்நலக் குறைவை வந்த உடனே கண்டு மனம் தளர்ந்து முடங்கிப் போய்விடக் கூடாது.

அதை எப்படிச் சரி செய்து கொள்ளலாம், எந்த மருத்துவ முறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தீர்மானிப்பது சந்திரன் எனப்படும் நமது சிந்தனை ஆற்றல்தான்.

விதி நம்மை ஒரு இக்கட்டான சூழலில் கொண்டுபோய் நிறுத்தலாம்; ஆனால், அந்த விதியை நமது ‘மதி’ எனப்படும் புத்திக் கூர்மையைக் கொண்டு எவ்வாறு நேர்மறையாக எதிர்கொள்வது என்பது முற்றிலும் நம் கையில்தான் உள்ளது.

இதை விளக்குவதற்கு ஜாதகத்தில் ஆறாம் பாவத்தை (ருண-ரோக ஸ்தானம்) விடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. ஆறாம் பாவம் என்பது ஒருவருக்குக் கடனையும், போராட்டங்களையும் தரக்கூடிய இடமாகும். ஒரே மாதிரியான ஆறாம் பாவ இயக்கம் இரண்டு வெவ்வேறு மனிதர்களுக்கு எப்படிப்பட்ட மாறுபட்ட பலன்களைத் தருகிறது பாருங்கள்.

முதல் வகையில் ஜாதகத்தில் ஆறாம் பாவம் வேலை செய்கிறது என்பதற்காக, கண்மூடித்தனமாக எங்கேயோ கடன் வாங்கி, அதைத் தங்களின் ஆடம்பரச் செலவுகளுக்கும் வீண் விரயங்களுக்கும் பயன்படுத்திப் படிப்படியாக அழிந்துபோவார்கள்.

இரண்டாம் வகையில் அதே ஆறாம் பாவம் தான் வேலை செய்கிறது; ஆனால் இவர் அதே கடனைப் பெற்றுப் புத்திசாலித்தனமாகத் தகுந்த திட்டமிடலுடன் முதலீடு செய்து, மிகப்பெரிய அளவில் தொழிலை வளர்த்து உன்னத நிலைக்கு வருவார்.

இருவருக்குமே கடன் உண்டு; இருவருமே ஆறாம் பாவத்தின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், வாங்கிய கடனை என்ன செய்யப்போகிறோம், அதை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது அவரவர் மதி (சிந்தனை) மட்டுமே!

ஏழாம் பாவம் என்பது திருமணம், வாழ்க்கைத்துணை, கூட்டுத் தொழில், பிறருடனான ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பாவமாகக் கருதப்படுகிறது. ஆனால், திருமணம் நடந்துவிட்டது என்பதாலேயே இல்லற வாழ்க்கை இனிமையாகிவிடுமா?

ஒருவருக்குத் திருமணத்தின் மூலம் அன்பும் ஆதரவும் கிடைக்கலாம். இன்னொருவருக்கோ அதே திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளும் எதிர்பார்ப்புகளும் மனக்கசப்புகளும் உருவாகலாம். இருவருக்கும் உறவு இருக்கிறது; ஆனால், அந்த உறவின் அனுபவம் ஒன்றாக இருப்பதில்லை.

ஜாதகம் ஒரு வாய்ப்பையோ சவாலையோ சுட்டிக்காட்டலாம்; ஆனால் அது நமக்கு அளிக்கும் அனுபவத்தின் தரத்தைத் தீர்மானிப்பதில் நமது சிந்தனை, செயல்பாடு, சூழ்நிலையை எதிர்கொள்ளும் பக்குவம் ஆகியவற்றுக்கும் இடமுண்டு. ஒரு பாவத்தின் நன்மையும் தீமையும் ஆராய்வது என்பது பலனை மட்டும் கணிப்பதல்ல; அந்தப் பலனை மனிதன் எப்படிப் பயன்படுத்துகிறான் என்பதையும் ஆராய்வதாகும்.

ஜோதிடத்தில் கூறப்படும் பாவங்களும் கிரக நிலைகளும் ஒருபோதும் நம்மை அடிமைப்படுத்துவதில்லை; மாறாக, அவை நமக்கு எச்சரிக்கை மணிகளாகவும் வழிகாட்டிகளாகவுமே அமைகின்றன.

விதி என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு (உதாரணமாக: கடன் வருவது, இடமாற்றம் ஏற்படுவது அல்லது சோதனைகள் வருவது). ஆனால், அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது, கிடைத்த வாய்ப்பை அல்லது நெருக்கடியை எப்படிச் சாதகமாக மாற்றுவது என்பது மனிதனின் கையில் இருக்கும் மதியாகிய சிந்தனை ஆற்றலில்தான் அடங்கியுள்ளது.

விதியின் கோடுகளை மதியின் ஒளியால் அழகாக்கிக் கொள்வதே ஆன்மீகமும் ஜோதிடமும் மனிதனுக்குச் சொல்லும் பேரறிவுரையாகும்.