Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனக்குதிரையை அடக்கும் நாமம்

சென்ற இதழின் நாமத்தின் தொடர்ச்சி….

அஸ்வாரூடா அதிஷ்டித அச்வ கோடி கோடிபி ஆவ்ருதாபிராண சக்தியாக இருக்கக் கூடிய அஸ்வாரூடா… எப்படி நமக்குள் சேவை சாதிக்கிறாள். எப்படி வேலை செய்கிறாள் என்பதுதான் இங்கு விஷயம். இந்த குதிரை சைனியமானது அந்தர்முகமாக லலிதா திரிபுரசுந்தரியை சேவிக்கும்போது, அங்கு பண்டாசூரனால் எப்படி நுழைய முடியும். அப்படிப்பட்ட ஒரு யோக ரகசியத்தைத்தான், யோக மார்க்கத்தைத்தான் இந்த யானையும் குதிரையும் நமக்குக் காண்பிக்கின்றது.இங்கு இன்னொரு விஷயத்தைக் கூடுதலாகப் பார்ப்போம். சம்பத்கரீயைச் சொல்லும்போது அவள் யானையினுடைய அங்குசத்திலிருந்து உண்டானாள் என்று பார்த்தோம். க்ரோதாகாராங் குசோஜ்வலா… என்று பார்த்தோம். இந்த அஸ்வாரூடா எங்கிருந்து வந்தாளெனில், அம்பாள் வைத்திருக்கக்கூடிய பாசத்திலிருந்து வந்தாள். அந்தப் பாசம் எப்படி இருக்கிறது எனில் ராக ஸ்வரூப பாசாட்யா… இப்படி ராக ஸ்வரூபமாக இருக்கக் கூடிய பாசம் இருக்கிறதல்லவா… இங்கு ராகம் என்பது ஆசை. இப்படி ஆசையின் வடிவமாக இருக்கக் கூடிய பாசத்தை அம்பாள் கையில் வைத்திருக்கிறாள் அல்லவா… அந்தப் பாசத்திலிருந்து உண்டானவள்தானே இந்த அஸ்வாரூடா. இப்போது என்ன அர்த்தமெனில், இந்த ராகம் என்கிற பாசம் இருக்கிறதல்லவா கயிறு…. இந்த ராகம் என்கிற பாசமானது அம்பிகையினுடைய கைகளுக்கு போகாத வரைக்கும்… நம்முடைய இந்திரியங்கள் எனும் குதிரைகள்; மனம் என்கிற குதிரைகள் வெளிநோக்கியே ஓடிக்கொண்டிருக்கும்.

நம்முடைய ஆசை என்கிற பாசக் கயிறு இருக்கிறதல்லவா. நம்மை இந்த உலகத்தோடு பிணைத்துக் கொண்டே இருக்கும். இப்போது அம்பிகை என்ன செய்கிறாளெனில், இந்த உலகத்தோடு பிணைக்கின்ற அந்த பாசக் கயிறை மெதுவாக அவிழ்த்து அவள் கையில் வைத்துக் கொண்டால், அந்தப் பாசத்திலிருந்து அஸ்வாரூட தேவதைகள் உத்பவமாகி நம்முடைய வெளி நோக்கி போகக் கூடிய இந்திரியங்களையும் மனசையும் லகான் போட்டு நிறுத்தி விட்டாள். இப்படி ஆசை என்கிற பாசத்திலிருந்து தோன்றி அதே ஆசையை ஆத்ம சொரூபத்தை அடைய வேண்டியதாக மாற்றம் செய்து விடுகிறாள். Sublimation செய்து விடுகின்றாள். எப்படி பிராண சக்தியாக இருக்கிறாள் என்று பார்த்தோம். அதனால்தான் பிராணன் எப்போது சீராகுதோ, பிராணன் எப்போது சரியான முறையில் இயங்குகிறதோ அப்போது மனசு ஒழுங்காகும். மனசு சரியான முறையில் இயங்கும். அதனால்தான் யோக மார்க்கத்தின் முதல் படியில் யமம், நியமம், ஆசனம் என்ற மூன்றும் கடந்ததற்குப் பிறகு பிராணாயாமம் வரும். இந்தப் பிராணாயாமம் நடந்தால்தான் பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதிக்கு போக முடியும்.

இப்போது அஸ்வாரூடா… அனுமதி கொடுத்தால்தான் யம, நியம, ஆசனங்களெல்லாம் சம்பதகரீயில் ஆரம்பித்து பிராணாயாமத்தில் அஸ்வாரூடத்தின் அனுமதி கிடைத்ததற்குப் பிறகுதான் இனி இருக்கக் கூடிய பிரதயாஹாரம்... தாரணை… சமாதி என்று சொல்லக் கூடிய மாதங்கி, வாராஹி, லலிதா திரிபுரசுந்தரியையெல்லாம் இனிமேல்தான் பார்க்க முடியும். இப்போது அஸ்வாரூடா என்கிற பிராணசக்தியின் அனுமதியையே இந்த நாமம் காட்டிக் கொடுக்கின்றது. சம்பதகரீ நாமத்திற்கு சாஸ்திரரீதியாகவே திருவிடைமருதூர் பிரஹத்குஜாம்பாளை பார்த்தோம். அதேபோல இப்போது இந்த நாமத்திற்கான ஆலயமாக கௌரீ மாயூரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் அபயாம்பிகையை சொல்லலாம். ஏனெனில், சாஸ்திரரீதியாக அபயாம்பிகையானவள் அஸ்வாரூடா சொரூபமானவள். ஏனெனில், அஸ்வாரூடா அந்தக் குதிரையின் மீது வரும்போது நமக்கு பயம் இருக்காது. பயத்தையும் சேர்த்து போக்கி விடுவாள்.

(சுழலும்)