Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாராஹி அம்மன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்

பகுதி 2

நெல்லிக்குப்பம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்த மாதாக்கள் (செல்லியம்மன் எனும்பெயரில்) கோயில் உள்ளது. இங்குள்ள வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

நரிப்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாராஹி அம்மன் கோயில் உள்ளது.

செங்கம்பள்ளி

திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியில் செரைக் கன்னிமார் கோவில் உள்ளது. இங்கும் வாராஹி அம்மன் அருள்கிறார்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தனி சந்நதியாக சப்தமாதர்கள் உடன் வாராஹி அம்மன்அருள்கிறாள்.

மதுரை

மதுரை அருகே மண்டல நகர் ரிங் ரோடு பகுதியில் புதிதாக சொர்ண வாராஹி அம்மன் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சமி குடில் சார்பில் அமைக்கப்பட்ட இத் திருக்கோயில் மதுரை மாவட்டத்திலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரிங்ரோடு மண்டல நகர் பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகள் உள்ளதாகவும் கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.மேலும், மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள லெட்சுமி நாராயணர் கோயிலில் ஸ்ரீ வாராஹிஅம்மன் வழிபடப்படுகிறாள்.

களப்பாகுளம்

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் உடப்பன்குளம் சாலையில் ஜக்கம்மாள் கோயில் அருகே ஸ்ரீ மஹாமந்திர வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். விழா நாட்களில் விநாயகர், உன்மத்த பைரவர் மற்றும் வாராஹி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக தீபராதனை நடக்கும். அச்சமயம் கோ பூஜையுடன் சிறப்பு யாகங்களும், அன்னதானமும் நடக்கின்றது.

சிங்கம்புணரி

சிவகங்கைக்கு அருகிலுள்ள சிங்கம்புணரி முத்துவடுகநாத சித்தர் வாராஹி அம்மனிடம் சித்தி பெற்றவர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவடுகநாதர் வாராஹி அம்மனை பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தார். எந்தவித விஷக்கடியாக இருந்தாலும் இவர் மந்திரித்துத் திருநீறு இட்டால் விஷம் இறங்கி விடுமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவரிடம் திருநீறு பெற்றுக் குழந்தை பாக்கியம் அடைந்ததாக கூறுகிறார்கள்.

முத்துவடுகநாத சித்தர் தமது சமாதி நாளை முன்னதாகவே அன்பர்களிடம் சொல்லி தம் சமாதியையும் தோண்டச் செய்து, சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய தமது உருவக் கற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதற்கு உயிரூட்டி உருவேற்றி அன்பர்களிடம் கொடுத்தாராம். அவர் கூறிய நாளில் பின்னாளில் சமாதியானவுடன் அவருக்குச் சமாதி செய்து, அதன் மேல்புறத்தில் சித்தர் உயிரூட்டி உருவேற்றிக் கொடுத்த அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு இடப்புறம் அவர் பூஜித்து வந்த வாராஹி அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

சித்தர் முத்துவடுக நாதர் இன்றளவும் அன்னை வாராஹி அருளால் தன் பக்தர்களை அரவணைத்துக் காத்து நிற்கிறார். இவரை ‘‘வாராஹி சித்தர்'’ என்றே அன்பர்கள் அழைக்கிறார்கள். பல வருடங்களாக தீராத பில்லி, ஏவல், சூனியம், மாந்திரீக பிரச்னைகள் தீர பௌர்ணமி அன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

உறையூர்

திருச்சி உறையூர் மங்கள் நகரில் வாராஹி அம்மனுக்கு உள்ள தனி ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ வாராஹிதாசர் பூபதி ஸ்வாமி அவர்களால் இவ்வாலயம் அமைக்கப்

பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் மாதப் பிறப்பு, ஆஷாட நவராத்திரி போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பெண்களும் பூஜைகள் செய்கின்றனர்.

திருவானைக்காவல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம். யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீஸ்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம்.

51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.இத்திருக்கோயிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி இரவு நேரத்தில் மட்டும் வாராஹியாக அருள்பாலிக்கிறாள். இரவு நேரத்தில் வாராஹியாக நினைத்து அம்பாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. தற்போதைய கலியுகத்தில் அநியாயங்கள், அக்கிரமங்களை எதிர்ப்பவளாகவும் அநியாயக்காரர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் தெய்வம் வாராஹி. பராசக்தியின் அம்சமான வாராஹி சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பஞ்சமி திதியில் உதித்தவர். இரவு நேரத்தில்தான் வாராஹி அநியாயங்களை அழிக்கப் புறப்படுகிறாள் என்பது ஐதீகம்.

அரியலூர்

அரியலூர் ஆலந்துறையார் ஆலயத்தில் மூலவர் சந்நதிக்கு முன்பு படி ஏறும் பகுதியில் வாராஹி அம்மன் காட்சி தருகிறாள். இவளை வணங்கிய பின்னரே மூலவர் ஆலந்துறையாரை வணங்க வேண்டும். திரும்பும் போது கௌமாரியை வணங்க வேண்டும்; இவ்வாலயத்தில் சப்த மாதர்களின் சந்நதியும் இருக்கிறது.

குளித்தலை

குளித்தலை பாலகுஜாம்பாள் உடனுறை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் சந்நிதிக்கு பின்புறம் அன்னை வாராஹியோடு சேர்த்து சப்த கன்னியர் உருவங்களும் உள்ளன.

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தின் சப்த கன்னியரில் ஸ்ரீ வாராஹி அம்மன் சிறப்பாக போற்றப்படுகிறாள்.

சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு அருகேயுள்ள உதய மார்த்தாண்ட விநாயகர் சந்நதி அருகில் வீரபத்திரருடன் சப்த கன்னிகளும் உள்ளனர். இங்கு வாராஹி அம்மன் சிறப்பாக வழிபடப்படுகிறாள். இங்கு சப்த கன்னிகைகளை வழிபட்ட பின்பு கண்டிப்பாக சுசீந்திரம் தெப்பக் குளத்தின் வடகரையில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன்

வழிபாடு செய்திடல் சிறப்பாகும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாராஹி அதி அற்புதமாய் இருப்பாள்.

சேலம்

சேலம் வீராணம் அருகே கொம்பேரி காடு பகுதியில் முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வாராஹி அம்மன் சந்நதி இருக்கிறது. இங்கு அம்மனுக்கு பஞ்சமி திதி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

சித்தாத்தூர்

வேடந்தாங்கல் அருகில் அரை கிலோ மீட்டரில் அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியில் சந்தர் கார்டனில் ஒரு சித்தரின் சமாதிக்கு அருகே கிரிசக்ரபுரம் என்ற நகரில் அமைந்துள்ளது, வாராஹி ஆலயம். அன்னையின் கருவறை எண்கோண வடிவில் அமைந்துள்ளது. நான்கு திசைகளில் நான்கு வாயில்கள் உள்ளன.

கோபுரம் 8 பட்டையில் மூன்று நிலை கோபுரமாகத் திகழ்கிறது. முதல் இரண்டு நிலைகளில் 16 திதி நித்யாக்களை குறிக்கும் வகையில், 16 கலசம் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. எண்கோண வடிவில் நான்கு கோஷ்டங்களில் வடகிழக்கு நோக்கி உமையும், ஈசனும் ரிஷபத்தில் காட்சியளிக்க, அக்னி திசையை நோக்கி தர்ம சாஸ்தா தண்டாயுதபாணி முருகன் வீற்றிருக்க, வடமேற்கு திசை நோக்கி தத்தாத்ரேயரின் வடிவமாகக் அருள்பாலிக்க, நிருருதி (தென்மேற்கு) திசையை நோக்கி ஞானத்தை போதிக்கும் ஷீரடி சாய்பாபா திருவருள் பாலிக்கிறார்.

கருவறையின் மத்தியில் உயரே ராஜராஜேஸ்வரி கரும்பு வில்லுடன் அமர்ந்திருக்க, அவள் காலடியில் அன்னையின் கற்பக விநாயகர் வீற்றிருக்க, கிழக்கு நோக்கி மோன தவத்தில் யோக நரசிம்மர் வீற்றிருக்க, தெற்கு வாயிலில் ஒன்பது படிகளுக்கு மேலே வருவோர்க்கு வரங்களை அள்ளித் தர அன்னை வாராஹி அம்மன் வீற்று அருள் புரிகிறாள். தெற்கு நோக்கி அமைந்திருக்கும் வாராஹியின் கீழே ஒன்பது படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இது ஜீவன் முக்தியடைய ஒன்பது நிலைகளை கடக்க வேண்டிய தத்துவமாகும். மேற்கு நோக்கி உலக நன்மை வேண்டி ஆஞ்சநேயர் யோக தவக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கருவறைக்கு நேர் எதிரே தாமரை திருக்குளம் அமைந்துள்ளது. அதன் மத்தியில் தமிழர்கள் போற்றும் குறுமுனிவர் நின்ற கோலத்தில் அன்னையை நோக்கி தவம் புரிகிறார்.

திருக்குளத்தின் குபேர மூலையில் குபேர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மேற்குப் புறத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 நட்சத்திர லிங்கங்கள் வாராஹி மண்டபத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் குபேர மூலையில் விநாயகர் சாட்சியாகத் திகழ, வாயு மூலையில் கிழக்கு நோக்கி ஏழுமலையானான வேங்கடநாதன் பூர்ண

அலங்காரத்தில் தரிசனமளிக்கிறார்.

வடகிழக்கு திசையில் மேற்கு நோக்கி மூன்றரை அடி உயரத்தில் கம்பீரமாக ஆதிவாராஹி அமர்ந்துள்ளாள். தண்டினி என்ற பெயரைத் தாங்கி நிற்பதால் தன் திருக்கோயிலுக்கு வருகிறவர்களின் எதிரிகளை அவள் தண்டிப்பாள். அன்னையின் கரத்தில் இருக்கும் சங்கை தரிசிப்பதால் மனதிலிருந்து பயம் நீங்கும். சக்கரத்தை தரிசிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.

அமாவாசையன்று வாராஹி உன்மத்த வாராஹியாக சிவனை நோக்கி தவமிருப்பதால் அன்று வாராஹியை தரிசிக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அக்குறை நீங்கப் பெறுவார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் சித்தாத்தூரிலுள்ள கிரிசக்ரபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில், சென்னை மதுராந்தகம் ஜி.எஸ்.டி ரோட்டில் படாளம் கூட்ரோடு திரும்பி திருமலைவையாவூர் வழியாக 12 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவை

கோவையிலுள்ள சௌரிபாளையத்தில் எட்டு திருக்கரங்களுடன் ஸ்ரீ வாராஹி மந்த்ராலயத்தில் வீற்றிருக்கிறாள். இத்திருக்கோயிலில், ஸ்ரீ சக்ரபூஜை, சண்டி ஹோமம், தசவித்யா ஹோமம், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் போன்றவை சிறப்புடன் நடைபெறுகின்றன.

(தொடரும்)

ரஞ்சனா பாலசுப்ரமணியன்